

சக மனிதர்களிடம் உணர்வு ரீதியாகச் சந்திக்க வேண்டிய வரும் முரண்பாடுகளை, அவற்றின் தொடர் விளைவுகளை எதிர்கொள்ள முடியாதபோது, தனக்கு வசதியான ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள் போய் அமர்ந்துகொண்டு, பிரச்சினையிலிருந்து தப்பிக்க நினைக்கும் ‘கம்போர்ட் ஸோன்’ உளவியலை மையமாக வைத்து ஓர் அழகான காதல் கதையை எழுதியிருக்கிறார் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கும் அ.அரவிந்த் ராஜ்.
கார்த்திக் (வி.ஜே.பப்பு) ஒரு மென்பொருள் பொறியாளர். அவர் தன்னுடைய டீம் லீடரான சுமித்ராவை (அனுபமா) ஒருதலையாக மனதுள் வரித்துக்கொள்கிறார். எதிர்பாராத விதமாக சுமித்ரா வேலையை விட்டுப் போய்விட, பெற்றோரால் திருமண வற்புறுத்தலுக்கு ஆளாகிறான் கார்த்திக். அதுவரை ஆர்வம் காட்டாத அவன், திடீரெனப் பெண் பார்க்க ஒப்புக்கொள்கிறான். காரணம், தன் மனதில் அமர்ந்துகொண்டு நகர மறுக்கும் சுமித்ரா தான் அந்த வரன்.
பெண் பார்க்கும்போது சுமித்ரா ஒரு கார்த்திக்கிடம் ஓர் உதவி கேட்கிறாள். ‘எனக்குத் திருமண வாழ்க்கையில் நம்பிக்கையில்லை. நம் பெற்றோருக்காகத் திருமணம் செய்துகொண்டு ‘ஆறு மாதம்’ மட்டும் ஒரே வீட்டில் எந்தவிதமான உடல் ரீதியான தொடர்பும் இல்லாமல் வாழ்வோம். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடலாம்’ என்று கேட்கிறாள். அவளுடன் 6 மாதம் ஒரே வீட்டில் வசிப்பதே பெரிய வரம் என்று நினைக்கும் கார்த்திக், அந்த ‘மேரீஸ் ஆஃப் கன்வீனியன்ஸ்’ நிபந்தனைக்கு உடனே ஒப்புக்கொள்ள, திருமணம் முடிகிறது.
கண் இமைப்பதற்குள் 6 மாதம் உருண்டோடிவிட சுமித்ரா பிரிந்து செல்கிறாள். சுமித்ரா இல்லாத வெறுமையைத் தனிமையை கார்த்தி எவ்வாறு ஈடு செய்தான் என்பதுதான் கதை. ‘மை டியர் டாலி’ படத்தின் கதைக்கரு, ஒரு சராசரி காதல் கதையிலிருந்து விலகி, மனித மனதின் விசித்திரமான ஒரு பகுதியை, அதாவது ‘Psychological Obsession’ என்கிற பரிதாபகரமான நிலையைத் தொடுகிறது. அதுதான் சுமித்ரா மீது கார்த்திக் கொண்டுள்ள காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல் படத்தில் வேலை செய்கிறது.
நாயகன் சுமித்ராவுடன் பணிச்சூழலில் இணைந்திருந்த காலத்தில், அவனது காதலை அவளிடம் வெளிப்படுத்த முடியாத நிலையும், பின்னர் ‘மேரீஜ் ஆஃப் கன்வீனியன்ஸ்’ மாதங்கள் முடிந்து அவள் பிரிந்து சென்ற பிறகு, அவள் இல்லாத வெற்றிடத்தை நிரப்பவும் அவன் தேர்ந்தெடுக்கும் மாற்று வழி, அவனது ஆளுமையில் உள்ள உளவியல் பலவீனத்தையே காட்டுகிறது. ஆனால், அந்தப் பலவீனம் அவனது காதலை எவ்வாறு மீட்டுத் தருகிறது என்பதைச் சுவாரசியமாகவும் காதல் உணர்வைக் கழிவிரக்கத்தில் தள்ளாத நேர்த்தியுடனும் சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.
கார்த்திக் - சுமித்ரா இருவருக்கும் பொதுவான அலுவலக நண்பனாக இருக்கும் அஜய் வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும்போதும் அவர்கள் எதிர்கொள்ளும் திருப்பத்தைத் தனக்குக் கிடைத்த பட்ஜெட்டில் முடிந்தவரை நேர்மையாகவும் அழகாகவும் சித்தரித்துள்ளதைப் பாராட்டாலாம். அதேபோல், தனிமை மற்றும் இழப்பின் வலியிலிருந்து தப்பிக்க கார்த்திக் உருவாக்கிக் கொள்ளும் அந்தப் பாதுகாப்பு வளையம் அவனுக்குத் தற்காலிக அமைதியைத் தருகிறது. ஆனால், அவனது அந்த ஏற்பாடு ஒரு 'எதிரொலி அறை' (Echo Chamber) போன்றது. அங்கே அவனது அந்த தப்பித்தல் நியாயப்படுத்தப்படும் அபாயமே அதிகாமாக இருக்கிறது.
மேலும் வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதால், அவனது உளவியல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறைந்து போய்விடும் ஆபத்தும் அதிகம். இது நீண்ட கால அடிப்படையில் அவனைச் சமூகப் பதற்றம் (Social Anxiety) கொண்ட ஒருவனாக, பணி வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் லாயக்கற்றவனாக மாற்றிவிடக்கூடும்.
இதனால் கதாபாத்திர ரீதியாகவே திரை வெளிக்குத் தேவையில்லாத ஒருவனோ இந்தக் கார்த்திக் என்று நாம் பதற்றம் கொள்ளும்போதுதான் திரைக்கதையில் அந்த அதிசயம் நிகழ்கிறது. கார்த்திக் ஏற்பாடு செய்துகொண்ட மாற்று வழிக்குள் காதல் ஒரு பூனைக் குட்டியைப் போல் உள்ளே நுழையும்போது அவனது கதாபாத்திரம் மீட்சியுற வழியிருக்கிறது என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்.
ஆறு மாதக் காலம் உடல் ரீதியான தொடர்பு இல்லாமல் சுமித்ராவுடன் வாழ்ந்த கார்த்திக்கின் ஒழுக்கம்,அவள் சென்ற பிறகு செய்துகொண்ட மாற்று ஏற்பாடு 'பைத்தியக்காரத்தனமாக' மாறுவது கதையின் நகைமுரணாக இருந்தாலும் அதைச் சோக நகைச்சுவை கொண்டு சித்தரித்த விதத்தில் இதைப் பார்க்கத் தகுந்த படமாக்கியிருக்கிறார்.
படத்தின் முக்கியமான குறை பட்ஜெட்! ஆனால், அதைச் சமாளிக்கப் பெரும்பாலும் உள்ளரங்கக் காட்சிகளின் வழியாகவே கதையை நகர்த்திய விதத்தை விலகலின்றி ரசிக்கலாம். இப்படியிரு சிக்கலான கதைக்கு கார்த்திக் - சுமித்ராவாக உயிர்கொடுத்த நடிகர்களின் அட்டகாசமான நடிப்புதான் இப்படத்தின் பெரிய பலம். அதேபோல் துணைக் கதாபாத்திரங்களில் வருபவர்களின் நடிப்பிலும் குறை காண முடியவில்லை.
படத்தின் முக்கியமான தர்க்கச் சிக்கல் என்றால், இடைவேளைக்குப் பிறகு கார்த்திக் - சுசித்ரா ஆகிய இருவரது பெற்றோரும் இவர்களைப் பார்க்க ஒருமுறை கூட வராமல் போவது! தவிர, நாயகன் தன் தனிமையைச் சமாளிக்க மதுவை நாடுவதாகக் காட்டுவது அப்பட்டமான ‘டாஸ்மார்க்’ புரமோஷன். இது எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றும் செயல்.
அரவிந்தராஜ் போன்ற புதுமுக இயக்குநர்கள், படத்தைத் தயாரித்துள்ள ஆர்.எம்.ஜெயராமச்சந்திரன் போன்ற புதிய தயாரிப்பாளர்கள் மது விற்பனையை ஊக்குவிக்கும் இதுபோன்ற காட்சிகளைத் தவிர்ப்பதே தொழில் அறம்.
இவற்றைக் கடந்து, மனித உறவுகள் இயந்திரமயமாகி வரும் இன்றைய சூழலில், இந்தப் படம் உண்மையான அன்பையும் காதலையும் உணர்தலின் அவசியத்தை முக்கியமான கருப்பொருளாக முன்வைக்கிறது. ‘மை டியர் டாலி’ - ஒருவனின் அதீதக் காதல் அவனது தனிமையோடு இணையும்போது அது எப்படி ஒரு விசித்திரமான கற்பனை உலகத்தை உருவாக்குகிறது என்பதைப் பேசும் படம். நிஜ மனிதர்களிடம் இல்லாத 'நிச்சயமற்றத் தன்மை' ஒரு மாற்று வழியில் கிடைப்பதாக நம்பும் நாயகனின் பரிதாபகரமான நிலையிலிருந்து அவன் எப்படி மீட்கப்படுகிறான் என்பதைக் காண்பது புதியதொரு திரை அனுபவம்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in