கே.விஸ்வநாத் இயக்கத்தில் 1980-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘சங்கராபரணம்’. இந்தியப் பாரம்பரிய இசையின் மேன்மையையும், ஒரு கலைஞனின் வாழ்வையும், மனித உறவுகளின் ஆழத்தையும் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்த திரைப்படம் இது. ஜே.வி. சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜயலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.வி. மகாதேவன் இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலில் உருவான இப்படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாத இசை பொக்கிஷங்களாக திகழ்கின்றன.
இசை ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள, தேசிய விருதை வென்ற இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் இப்போது வெளியாக இருக்கிறது. பீப்பிள்’ஸ் பிலிம் அகாடமி மற்றும் சேனல் ஃபைவ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை, தமிழ், மலையாள மொழிகளில், மேம்படுத்தப்பட்ட 4கே அல்ட்ரா ஹெச்.டி காட்சித் தரம் மற்றும் 7.1 சரவுண்ட் ஒலி அமைப்புடன் வெளியிடுகின்றனர். இதன் புதிய டிஜிட்டல் பதிப்பை ஸ்ரீலால் தேவராஜ் உருவாக்கியுள்ளார்.