தென்னிந்திய சினிமா

‘‘எனக்கு ‘மைசா’ புதிய களமாக இருந்தது’’ - ராஷ்மிகா மந்தனா அனுபவ பகிர்வு

ப்ரியா

“எனக்கு ‘மைசா’ படம் புதிய களமாக இருந்தது. இந்தப் படத்தில் நான் உயிரைக் கொடுத்து நடித்துள்ளேன்” என படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திரா புள்ளே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ படத்தின் டீசர் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

டீசர் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ராஷ்மிகா படப்பிடிப்பில் தான் எதிர்கொண்ட சவால்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர், “இந்தப் படம் எனக்குப் புதிய களமாக இருந்தது. புதிதாக எதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புவேன். ‘மைசா’வில் நான் உயிரைக் கொடுத்து நடித்துள்ளேன். படத்துக்காக என்னை என்னவெல்லாம் செய்ய வைத்தார்கள் தெரியுமா? மனித கற்பனைகளுக்கு எல்லைகள் கிடையாது தான், ஆனால் அவற்றைத் திரையில் கொண்டு வருவது அவ்வளவு எளிதானது இல்லையே?

கேரளாவில் படப்பிடிப்பு என்று சொன்னார். அங்கே ஒரு உயரமான மலைக்கு அழைத்துச் சென்ற இயக்குநர், என்னை அங்கிருந்து முடிந்த அளவு வேகமாக ஓடச் சொன்னார். இங்கே கற்கள், மரங்கள் எல்லாம் இருக்கின்றன. கீழே விழுந்து அடிபட்டால் எனது மற்ற படபிடிப்புகள் எல்லாம் பாதிக்கப்படும் என்று என் தயக்கத்தையும் பயத்தையும் வெளிப்படுத்தினேன். ஆனால் இயக்குநர் அதைச் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

அதேபோல, அதிரப்பள்ளி அருவிக்கு அழைத்து சென்று மிகவும் சாதாரணமாக அருவியில் இருந்து குதிக்கச் சொன்னார். அது 90 அடி உயரம் இருக்கலாம். நிஜமாகவே அந்த நாள் முழுவதும் நான் நடுங்கிக் கொண்டே இருந்தேன். எட்டு மணி நேரம் என்னைத் தண்ணீருக்கு அடியிலேயே இருக்கச் செய்தார். நான் என்ன மீனா? அந்த சகதி சண்டை மற்றுமொரு அனுபவம். அது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் அதை நான் செய்தேன்.

படத்தின் பாடல் படப்பிடிப்பில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.  மருத்துவர் என்னிடம் கால்பந்து வீரர்களிடம் மட்டுமே இப்படிபட்ட காயத்தை பார்த்திருப்பதாகச் சொன்னார். அது சரியாக மூன்று வாரங்கள் ஆனது. நான் மிகவும் மென்மையானவள். ஆனால், படத்தின் மீது இயக்குநர் அத்தனை ஆர்வமாக இருக்கிறார் என்றால், நானும் எந்த எல்லைக்குச் சென்று என்னால் முடிந்தைச் செய்வேன்’’ என்று  ராஷ்மிகா தெரிவித்தார்

நாயகியை மையமாக வைத்து பெரும் பொருள் செலவில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ‘அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்’ நிறுவனம்  தயாரித்திருக்கிறது. படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

SCROLL FOR NEXT