டீ சீரிஸ் தயாரிப்பில் ‘போலீஸ் கம்பெனி’ என்ற படத்தை அடுத்து இயக்க இருப்பதாக ராம் கோபல் வர்மா தெரிவித்துள்ளார்.
அந்தப் படம் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் தனது எக்ஸ் தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ராம் கோபால் வர்மா தனது பதிவில், ‘டீ சீரிஸ் தயாரிப்பில் நான் அடுத்து எடுக்க இருக்கும் படத்தின் தலைப்பு, ‘போலீஸ் கம்பெனி’. அதில், ‘டி கம்பெனியை விட ஆபத்தானது’ என்ற டேக் லைன் வரும்.
காவல் துறை என்பது ஒரு நிறுவனம். நிழல் உலக கும்பல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு அமைப்பு. ஆனால் ஒரு நிறுவனத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் போது, விரைவில் அது வணிக நிறுவனமாகி விடுகிறது.
தனக்கு எதிரான கும்பல்களை தாவூத் இப்ராஹிம் கொடூரமாக அழித்த பின்னர், தனது கும்பலை ஒரு நிறுவனமாக உருவாக்கினான். பின்பு தனது ‘டி’ கம்பெனியை நம்பிக்கைக்குரிய சோட்டா ராஜனிடம் ஒப்படைத்து விட்டு துபாய் சென்றான்.
அதனைத் தொடர்ந்து நடந்த சில சம்வங்களால் இருவருக்கும் இடையில் பிளவு உண்டானது. அது மும்பை நிழல் உலகத்துக்குள் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது.
இதனைப் பயன்படுத்தி மற்ற சின்ன சின்ன கும்பல்கள் பெரிய குற்றங்களை செய்து நிழல் உலகில் தங்களை முதல் இடத்தில் வைத்துக்கொள்ள முயன்றன. அரசு நிர்வாகம் இந்த கும்பல்களின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதில் முற்றிலும் தோல்வி அடந்தது. இது, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் போன்ற இடங்களில் உள்ள இளைஞர்களின் மத்தியில் அந்த நிழல் உலக கும்பல் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கி, அதில் இணைய வைத்தது. பதற்றமான சூழலில் 1997 முதல் 2004-க்கு இடையில் சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. அது 300-க்கும் அதிகமான கேங்ஸ்டர்களைச் சுட்டுக் கொன்றது.
போலீஸ் கம்பெனி கதை அந்தச் சிறப்பு குழுவில் இருந்த தயா நாயக் என்பவரின் கதையில் இருந்து எடுக்கப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்தை ஹர்ஸ் வர்தன் ரானே செய்ய இருக்கிறார். இன்னும் பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர். விரைவில் அதிக தகவலுடன் வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.