ஹைதராபாத்: எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான ‘வாரணாசி’, திட்டமிட்டபடி வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
படத்தின் பிரம்மாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முழுமையாக முடிப்பதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளின் இறுதி வடிவத்தை நேரில் ஆய்வு செய்த பிறகே வெளியீட்டுத் தேதியை இறுதி செய்ய ராஜமௌலி விரும்புகிறார். அறிவிக்கப்பட்ட தேதிக்காகத் தொழில்நுட்பப் பணிகளை அவசரகதியில் முடிக்காமல், தனது எதிர்பார்ப்புக்கு ஏற்பத் தரம் அமைந்த பிறகே படத்தை வெளியிட அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஏப்ரல் 7-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் ஜூலை 29, ஆகஸ்ட் 5 அல்லது சுதந்திர தின வார இறுதியான ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில் ஒன்றில் படத்தை வெளியிடப் படக்குழு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த நவம்பர் 15-ஆம் தேதி எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த 'வாரணாசி' படக்குழுவின் அதிகாரபூர்வப் பக்கம், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன், கிராபிக்ஸ் மற்றும் பின்னணி இசை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தது. மேலும், டப்பிங் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சுமார் ரூ.1,400 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில், மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி'யாகவும், பிருத்விராஜ் சுகுமாரன் 'கும்பா'வாகவும் நடித்துள்ளனர்.
புராணம், ஆக்ஷன் மற்றும் காலப் பயணம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்படத்தின் கதை, வாரணாசி, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா மற்றும் பண்டைய ரோம் ஆகிய இடங்களில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இப்படம், முழுமையாக ஐமேக்ஸ் வடிவத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய மற்றும் ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.