

கேமரா மாறிய ஒவ்வொரு முறையும் மனிதனின் தொழில்நுட்பம் மட்டும் மாறவில்லை; சினிமா பார்க்கும் மனிதனின் கண்களும், கதையை உருவாக்கும் ஒளிப்பதிவாளனின் சிந்தனை முறையும் சேர்ந்தே மாறின.
சினிமாவின் வரலாறு என்பது லென்ஸ் களின், சென்சார்களின் அல்லது ஃபிலிம் ரோல்களின் வரலாறு மட்டுமே அல்ல. அது, மனிதன் தன் மனதிலிருக்கும் உணர்வை ஒளியாக மாற்றி, அதைத் திரையில் பிம்பமாகச் செதுக்கக் கற்றுக்கொண்ட ஒரு நீண்ட தத்துவப் பயணம்.
கேமராவின் வடிவம் மற்றும் ஃபிலிம் ஸ்டாக்கின் கெமிஸ்ட்ரி மாறியபோது, ஒளிப்பதிவாளர் உலகத்தைப் பார்த்த விதமும் மாறியது. வேதியியலின் கட்டுப்பாடுகளிலிருந்து டிஜிட்டல் உலகத்தின் எல்லையற்ற சாத்தியங்கள் வரை ஒளிப்பதிவாளர் சிந்தித்த முறை எப்படிப் பரிணாமம் அடைந்தது என்பதன் விரிவான காட்சி வரலாறு இது.
கருப்பு – வெள்ளை காலம் - நிழல்கள் வரைந்த காவியங்கள்: ஆரம்பகால சினிமாவில் நிறம் இல்லை. ஆனால், அது நிறமற்றதாக இருக்கவில்லை. இந்திய சினிமாவில் கருப்பு-வெள்ளை காலத்தில் ஒளிப்பதிவு, ஒரு நுண்கலையாக உயர்ந்தது.
மாருதிராவ்: ஸ்டூடியோ லைட்டிங் முறைகளில் மிகத் துல்லியமான லைட் ரேஷியோ மற்றும் ஷார்ப் ஃபோகஸ் நுட்பங்களைக் கொண்டு வந்து, தொடக்ககாலத் தென்னிந்திய சினிமாவில் காட்சி மொழியை வடிவமைத்தார்.
ஏ.வின்சென்ட்: ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் இவர் பயன்படுத்திய கூர்மையான நிழல்களும் கதாபாத்திரங்களின் மனவோட்டத்தைப் பிரதிபலித்த கோணங்களும் கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவை உணர்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. ஒளியை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
வேதியியல் எழுதிய இலக்கணம்
அன்றைய ஃபிலிம் ஸ்டாக்குகள் (Orthochromatic & early Panchromatic) மிகக் குறைந்த உணர்திறன் (Low ASA) கொண்டவை. இதனால் பிரம்மாண்டமான ‘கார்பன் ஆர்க்’ விளக்குகள் தேவைப்பட்டன. நடிகர்களின் ஒப்பனைகளும் மனிதக் கண்களுக்காக அல்லாமல், ஃபிலிம் கெமிஸ்ட்ரிக்காக வடிவமைக்கப்பட்டன.
உதாரணத்துக்கு, சிவப்பு நிறம் இருண்ட கருப்பாகப் பதிவுபெறும் என்பதால், நடிகர்களுக்குப் பச்சை அல்லது நீல நிற லிப்ஸ்டிக் பூசப்பட்டது; அப்போதுதான் திரையில் அது இயல்பான உதடுகளின் சாம்பல் நிறத்தில் (Mid Grey Tone) தோன்றும்!
கருப்பு–வெள்ளையின் பாடம்: நிறம் இல்லாதபோதே, ஒளியின் திசையும் நிழலின் அடர்த்தியும் ஒரு கதையின் முழு உணர்ச்சியையும் சுமக்க முடியும் என்பதை வின்சென்ட் போன்ற மாஸ்டர்கள் நிரூபித்தார்கள்.
வண்ணத்தின் வருகை - மார்கஸ் பார்ட்லேயும் ‘செம்மீன்’ தந்த காட்சி அதிர்வும்: டெக்னிகலர் (Technicolor) மற்றும் ஈஸ்ட்மன்கலர் (Eastmancolor) போன்ற வண்ண ஃபிலிம் முறைகள் வந்தபோது, வண்ணத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் ஒளிப்பதிவாளர்களுக்குப் பெரும் குழப்பம் இருந்தது.
‘செம்மீன்’ படத்தில், அரபிக்கடலின் பிரம்மாண்டத்தையும், அலைகளின் கொந்தளிப்பையும், பொன்னிற மாலை ஒளியையும், மீனவ மக்களின் வாழ்வியலையும் அவர் படமாக்கிய விதம் உலகத் தரம் வாய்ந்தது. கடலின் நீலத்துக்கும், மாலையின் மஞ்சள்/சிவப்பு வானத்துக்கும் இடையே மனித உணர்வுகளை வண்ணங்களின் சமநிலையால் பிணைத்தார் மார்கஸ் பார்ட்லே.
ஃபிலிம் ஸ்டாக்குகளின் பரிணாமம்: ஆர்வோ (ORWO) முதல் கோடக் / ஃபியுஜி (Fuji) ஹை ஸ்பீட் வரை வண்ண சினிமா வளர்ந்தபோது, அதைத் தாங்கிப்பிடித்த ஃபிலிம் ரோல்களின் வேதியியலிலும் பெரிய புரட்சிகள் வெடித்தன. கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஆர்வோ (Original Wolfen) ஃபிலிம் ஸ்டாக்குகள், 60- முதல் 80-கள் வரை இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
கோடாக்கை விடக் குறைவான விலையில் கிடைத்ததால், பல பிராந்திய மொழித் திரைப்படங்கள் ஆர்வோ ஃபிலிமையே நம்பியிருந்தன. இந்த ஃபிலிம் ஸ்டாக்குகளுக்கு என்று தனித்துவமான குளிர்ந்த டோன் மற்றும் அடர்த்தியான கான்ட்ராஸ்ட் இருந்தது. இது த்ரில்லர் மற்றும் தத்துவார்த்தப் படங்களுக்கு ஏற்ற காட்சி அமைப்பைக் கொடுத்தது.
கோடக் மற்றும் ஃபியுஜி ஹை ஸ்பீட் ஃபிலிம்கள்: சாஃப்ட் டோன்களும் இயற்கை ஒளியும் 80-களின் இறுதி மற்றும் 90-களில் கோடக் (5293, 5298) மற்றும் ஃபியுஜி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய ஹை ஸ்பீட் ஃபிலிம் ஸ்டாக்ஸ் (500 ASA / ISO) ஒளிப்பதிவில் புதிய கதவைத் திறந்தன.
லைட்டிங் சுதந்திரம்: குறைந்த ஒளியிலும் பதிவு செய்யும் திறன் வந்ததால், பிரம்மாண்டமான ஸ்டூடியோ விளக்குகளின் தேவை குறைந்தது.
சாஃப்ட் டோனல் இம்ப்ரூமென்ட்: ஹை-ஸ்பீடு ஃபிலிம்கள் ஒளியின் கடினத் தன்மையைக் குறைத்து, முகங்களில் மென்மையான நிழல்களையும், பரவலான வெளிச்சத்தையும் உருவாக்க உதவின.
இயற்கை வெளிச்சம்: மெழுகுவர்த்தி வெளிச்சம், தெருவிளக்குகள் மற்றும் ஜன்னல் வழியே வரும் இயற்கை ஒளியிலேயே படம்பிடிக்கும் சுதந்திரம் கிடைத்தது.
அகலத்திரையும் 70 எம்எம்.மும்: ஃபிரேம் பெரிதானபோது பிறந்த நெகடிவ் ஸ்பேஸ் 50-களில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் வருகை அதிகரித்தபோது, மக்களைத் திரையரங்குக்கு ஈர்க்க சினிமா தன் திரையின் அளவைப் பெரிதாக்கியது. 4:3 (1.33:1) என்ற சதுர வடிவில் இருந்து, சினிமாஸ்கோப், விஸ்டாவிஷன், Todd-AO போன்ற பெரிய திரை (2.39:1) விகிதங்கள் உருவெடுத்தன.
இடைவெளியும் கதை சொல்லும்
அகலத்திரை வந்ததும், ஒளிப்பதிவாளரால் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் ஃபிரேமின் நடுவில் பூட்டி வைக்க முடியவில்லை. கதாபாத்திரத்தின் இடப்புறமும் வலப்புறமும் இருக்கும் வெற்றிடம் கதையின் ஒரு பகுதியாக மாறியது.
70 எம்எம் பிரம்மாண்டம்
70 எம்எம் ஃபிலிம் கேமராக்கள் வந்தபோது, திரை ஒரு ஜன்னலாக மாறியது. ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வில் தொலைதூர அடிவானத்தில் சிறு புள்ளியாகத் தோன்றி, மெதுவாகக் குதிரையில் வரும் மனிதனாக உருவெடுக்கும் காட்சி, 70 எம்எம் ஃபிலிமின் பிரம்மாண்டத்தையும் காட்சி வலிமையையும் உணர்த்திய மறக்க முடியாத மைல்கல்.
ஃபிலிம் காலம்: மனதுக்குள் உருவான எக்ஸ்போசர் டிஜிட்டல் திரைகளோ, லைவ் மானிட்டர்களோ இல்லாத அந்தக் காலத்தில், ஒளிப்பதிவாளர் ஒரு கலைஞர் மட்டுமல்ல; வேதியியலையும் ஒளியையும் கணக்கிட்ட ஒரு கலைக் கணிதவியலாளர்.
லேடண்ட் இமேஜ் என்னும் மாயக் கலை
ஃபிலிம் ரோலில் ஒளி விழும்போது, அங்கே மறைபிம்பம் மட்டுமே உருவாகும். ஃபிலிம் லேபில் வேதிப்பொருட்களால் கழுவி உருவாக்கப்பட்ட பிறகே அந்தப் பிம்பம் வெளிப்படும்.
லைட் மீட்டர்: ஒளிப்பதிவாளரின் கண்களாக ஸ்பாட் மீட்டர் (Spot Meter) மற்றும் இன்சிடன்ட் லைட் மீட்டர் (Incident Light Meter) ஆகியவை செயல்பட்டன.
கட்டுப்பாடு (Discipline): ஒரு ஃபிலிம் ரோல் 400 அடி அல்லது 1000 அடி மட்டுமே கொண்டிருந்தது. அதாவது, சுமார் 4 முதல் 10 நிமிடங்கள் வரைதான் படமாக்க முடியும். ஒவ்வொரு டேக்கிற்கும் முன் ஒத்திகையும் துல்லியமான திட்டமிடலும் அவசியமாக இருந்தன.
அந்தக் காலத்தின் எதிர்பார்ப்பு: படமாக்கிய காட்சி எப்படிப் பதிவாகியிருக்கிறது என்பதை அறிய, அடுத்த நாள் காலை லேப் டெய்லிஸ் (Lab Dailies) கிடைக்கும் வரை ஒளிப்பதிவாளர் காத்திருக்க வேண்டும். அந்தக் காத்திருப்பும், எதிர்பார்ப்பும், பொறுப்புணர்வும் அவர்களின் துல்லியத்தை (Precision) உச்சத்துக்குக் கொண்டு சென்றன.
ஹெச்டிஆர் மற்றும் விர்ச்சுவல் புரட்சி
இன்று ஹெச்டிஆர் தொழில்நுட்பம் 16+ Stops Dynamic Range வரை பதிவு செய்கிறது. ஜன்னலுக்கு வெளியே உள்ள மேகங்களின் ஹைலைட் டீட்டெய்லையும் அறையின் மூலை நிழல்களின் ஷேடோ டீட்டெய்லையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கிறது. அன்ரியல் என்ஜின் எல்இடி வால்யும் (Unreal Engine LED Volume) மூலம், விர்ச்சுவல் பின்னணியின் ஒளியே, நடிகர்கள் மீது இயற்கையாகப் பிரதிபலிக்கிறது. செட்டிலேயே காட்சியின் முடிவை உணர்ந்து ஒளியை அமைக்க ஒளிப்பதிவாளரால் முடிகிறது.
| முற்றும் |
சி.ஜெ.ராஜ்குமார் (திரைப்பட ஒளிப்பதிவாளர்) cjrdop@gmail.com