ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடித்து வரும் படம், ‘வாரணாசி’. இந்த தலைப்பை, ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறி, தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுப்பா ரெட்டி என்பவர் புகார் கூறினார்.
இத்தலைப்பைக் கடந்த 2023-ம் ஆண்டு பதிவு செய்தோம் என்றும் பின்னர் கடந்த ஜூலையில் புதுப்பித்திருப்பதாகவும் கூறிய அவர், அதை எப்படி அவர்கள் பயன்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், ராஜமவுலி இயக்கும் படத்துக்கு ‘ராஜமவுலியின் வாரணாசி’ என்று தலைப்பை மாற்றியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. இயக்குநர் சுப்பா ரெட்டி ‘வாரணாசி’ தலைப்பின் உரிமையை ராஜமவுலி படக்குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இதுபற்றி சுப்பா ரெட்டி கூறும்போது, ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகரான மகேஷ் பாபு, இயக்குநரான ராஜமவுலி ஆகியோரின் மிகப்பெரிய திரைப்படத்துக்கு சிறிய அளவிலாவது நான் பங்களிக்க முடிந்ததில் பெருமை.
ஒரு நல்ல படத்துக்காக இந்தத் தலைப்பை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.தலைப்புக்காக எந்தவித பணப்பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றும் ராஜமவுலி மீதான மரியாதையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.