தென்னிந்தியத் திரையுலகின் மூத்த பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, வயது முதிர்வு காரணமாகப் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88.
ஆந்திராவைச் சேர்ந்த ஜமுனா ராணி, கே.வரதராஜுலு, திரவுபதி தம்பதியருக்கு 1938-ம் ஆண்டு பிறந்தார். இவரின் தாயார் வீணை இசைக்கலைஞர். ஜமுனா ராணி தன் 7 வயதில் ‘தியாகய்யா’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார்.
13-வது வயதில் ‘வளையாபதி’, ‘கல்யாணி’ போன்ற படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தார். 1955-ம் ஆண்டு வெளியான ‘குலேபகாவலி’ படத்தில் இடம்பெற்ற ‘ஆசையும் என் நேசமும்’ பாடல் இவருக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.
பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான ஜி. ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, வேதா, டி.சலபதிராவ், லிங்கப்பா, விஸ்வநாதன்–ராமமூர்த்தி, மாஸ்டர் வேணு, ஆர்.சுதர்சனம், ஜி.கே. வெங்கடேஷ், வி.குமார், கண்டசாலா, எஸ்.எம். சுப்பையா நாயுடு, இளையராஜா உள்பட பல்வேறு இசை அமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
‘உத்தமபுத்திரன்’ படத்தில், யாரடி நீ மோகினி, ‘பலே பாண்டியா’ படத்தில் அத்திக்காய் காய் காய், ‘மரகதம்’ படத்தில் சந்திரபாபுவுடன் ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘பாசமலர்’ படத்தில் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், ‘குமுதம்’ படத்தில் மாமா மாமா மாமா, ‘தெய்வப்பிறவி’ படத்தில் காளை வயசு கட்டான சைசு, ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் ‘செந்தமிழ் தேன் மொழியாள், ‘நாடோடி மன்னன்’ படத்தில் தடுக்காதே என்னைத் தடுக்காதே, ‘இருகோடுகள்’ படத்தில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் உள்பட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜமுனா ராணி.
1950 மற்றும் 1960-களில் முன்னணி பாடகியாக இருந்த அவர், 1970-களில் குறைந்த அளவிலேயே பாடல்களைப் பாடினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘நாயகன்’ (1987) படத்தில் இளையராஜா இசையில், ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடினார். டி.எம்.சவுந்தரராஜன், ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், பி.பி.ஸ்ரீனிவாஸ், சந்திரபாபு, பி.சுசீலா, பி.லீலா, எல்.ஆர்.ஈஸ்வரி உள்பட பலருடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள ஜமுனா ராணி, திருமணம் செய்துகொள்ளாமல் பெங்களூருவில் வசித்து வந்தார்.
வயது முதிர்வு காரணமாக அவர் நேற்று முன் தினம் காலமானார். அவரது மறைவு தென்னிந்திய இசை உலகிலும், திரையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த ஜமுனா ராணியின் இறுதிச் சடங்குகள் பெங்களூருவில் உள்ள கள்ளஹள்ளியில் நேற்று நடைபெற்றன. அவரது மறைவுக்குத் திரையுலகினரும் இசை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.