பிருத்விராஜ், ஷம்மி திலகன் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ திரைப்படம் நவ.21-ம் தேதி வெளியானது. ஜி.ஆர்.இந்து கோபன் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட இப்படத்துக்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிருத்விராஜை குறை கூறி சமூகவலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது மகனைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடக்கிறது என்று அவருடைய தாயாரும் மூத்த நடிகையுமான மல்லிகா சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சிலர் வேண்டுமென்றே பிருத்விராஜின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். திரைத்துறையில் உள்ள சிலர் இதற்குப் பின்னணியில் உள்ளனர். சில சமூக ஊடக கணக்குகளில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். மலையாளத் திரையுலகில் உள்ள எந்த சங்கமும் இதுவரை எனது மகனுக்கு ஆதரவாகப் பேசவில்லை.
நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன் பிரபலமடைந்து வருவதால் சிலர் அவருக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்கள் ஒருவரின் கடின உழைப்பைக் குறைத்து மதிப்பிட வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இப்படத்தையும் அதில் நடித்துள்ளவர்களையும் அவதூறு செய்யும் நோக்கில் சில யூடியூப் சேனல்கள் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக, படத்தின் தயாரிப்பாளர் சந்தீப்சேனன் சைபர்கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளார்.