தமிழில் ‘அமரகாவியம்’, ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை மியா ஜார்ஜ். நடிகைகளுக்குத் திருமணமாகி விட்டால் நடிக்க வரமாட்டார்கள் என்ற எண்ணம் பொதுவாக இருப்பதாகக் கவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு நடிகைக்குத் திருமணமாகி விட்டால் அவர் மீண்டும் நடிக்க வரமாட்டார் என்று பொதுவான எண்ணம் இருக்கிறது. ‘மீண்டும் நடிப்பீர்களா?’ என்று கேட்கக் கூட மாட்டார்கள். அதுவும் குழந்தைகள் பிறந்துவிட்டால் கண்டிப்பாக நடிக்க வரவே மாட்டார்கள் என முடிவு செய்துவிடுவார்கள். எங்கள் முடிவை நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றும். ஆனால், முடியவில்லை.
நான் நடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது மற்றவர்களின் வேலையல்ல. மகப்பேறு விடுப்புக்குப் பிறகு ஓர் ஆசிரியை பணிக்குத் திரும்பும்போது அதில் யாருக்கும் பிரச்சினை இல்லை, கேள்வியும் கேட்பதில்லை. இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் ஒன்றுதான்.
ஆனால் நடிகை என்று வரும்போது, திருமணமாகி குழந்தை பிறந்தால் மீண்டும் நடிக்க வரமாட்டார்கள் என்ற பொதுவான எண்ணம் வந்துவிடுகிறது. இந்தத் துறையில் மட்டும்தான், எங்களுக்கான முடிவுகளை மற்றவர்கள் எடுக்கிறார்கள்” என்றார்.