தென்னிந்திய சினிமா

மோகன்லால் படத்துக்கு சபரிமலை கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி - நிபந்தனை என்ன?

ப்ரியா

மோகன்லால் நடித்து வரும் ‘அதிமனோகரம்’ படத்தின் படப்பிடிப்பை சபரிமலை கோயிலில் நடத்த தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ‘அதிமனோகரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பை சபரிமலை சன்னிதானம், அதன் சுற்றுவட்டார இடங்களில் நடத்திக்கொள்ள, சில நிபந்தனைகளுடன் தேவசம் போர்டு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

படப்பிடிப்பு நடத்துவதற்கான நிபந்தனைகளில் முதன்மையானது, ‘அதிமனோகரம்’ படத்தின் முழு திரைக்கதையையும் தேவசம் போர்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்மூலம் சபரிமலை கோயில், அதன் மரபு மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரான காட்சிகள், வசனங்கள் எதுவும் படத்தில் இல்லை என்பதை போர்டு உறுதி செய்யும்.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு தயாரிப்பு குழு ரூ.50,000 தேவசம் போர்டில் வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். படப்பிடிப்புக்கு வனத்துறையிடம் தனியாக அனுமதி பெற வேண்டியது அவசியம்.

முன்னதாக, மகரவிளக்கு பூஜை சமயத்தில் அனுமதி பெறாமல் சபரிமலையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்பு வெளியான ‘அதிமனோகரம்’ படத்தின் முதல் தோற்றத்தில், மோகன்லால் காவல் துறை அதிகாரி உடையில், கழுத்தில் கருப்பு துண்டுடன், சபரிமலைக்கு மலையணிந்து செல்லும் பக்தர்கள் கூட்டத்தினுள் நின்று கொண்டிருப்பார்.

‘துடரும்’ படத்துக்கு பின்பு, மோகன்லாலும் தருண் மூர்த்தியும் இணைந்து பணியாற்றும் ‘அதிமனோகரம்’ படத்தில், மோகன்லால் சாதாரண உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். நாயகியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

படத்துக்கான திரைக்கதையை ரதீஸ் ரவி எழுத, மோகன்லாலின் பல படங்களில் பணியாற்றியிருக்கும் ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT