கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்து, மலையாளத் திரையுலகின் முக்கிய ஆளுமையாக உருவெடுத்தவர் சீனிவாசன். ஒரு நடிகராக மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் எனத் திரையுலகின் அத்தனை பரிமாணங்களிலும் பன்முகத்தன்மையுடன் முத்திரை பதித்தவர். இன்று (டிசம்பர் 20) தனது 69-வது வயதில் உடல்நலக்குறைவால் அவர் மறைந்த செய்தி, சினிமா ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
1976-ல் 'மணிமுழக்கம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான சீனிவாசன், சுமார் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவரது உண்மையான பலம் இவரது எழுத்தில்தான் இருந்தது. மலையாள சினிமாவின் பொற்காலம் என்று கருதப்படும் 80கள் மற்றும் 90களில், மோகன்லால் - சத்யன் அந்திக்காடு - பிரியதர்ஷன் ஆகியோருடன் இணைந்து இவர் உருவாக்கிய படங்கள் காலத்தால் அழியாதவை.
குறிப்பாக, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் அவலங்களை நகைச்சுவை கலந்து இவர் எழுதிய 'நாடோடிக்காற்று', அரசியல் சந்தர்ப்பவாதத்தை தோலுரித்துக் காட்டிய 'சந்தேசம்', தாழ்வு மனப்பான்மையை பற்றி பேசிய 'வடக்குநோக்கியந்திரம்' போன்றவை இன்றும் மலையாள சினிமாவின் மறக்க முடியாத படங்களாக திகழ்கின்றன. 'சிந்தாவிஷ்டயாய சியாமளா' என்ற படத்திற்காக தேசிய விருதையும் இவர் வென்றுள்ளார்.
சீனிவாசனின் எழுத்துக்களில் எப்போதும் சமூகத்தின் மீதான ஒரு கூர்மையான பார்வை இருக்கும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் 'சந்தேசம்' திரைப்படம். அண்ணன் - தம்பி இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சார்ந்திருப்பார்கள். வீட்டில் நடக்கும் சாதாரண விஷயத்தைக் கூட அரசியலாக்கி அவர்கள் சண்டையிடும் காட்சி இன்றும் பிரபலம். குறிப்பாக ‘போலந்து’ குறித்து சீனிவாசன் பேசும் வசனம் இன்றும் இணையத்தில் மீம்களாக அதிகம் பகிரப்படுகின்றன.
அதேபோல், 'நாடோடிக்காட்டு' படத்தில், மோகன்லாலும் சீனிவாசனும் துபாய்க்குச் செல்வதாக நினைத்து சென்னை கடற்கரையில் வந்து இறங்குவார்கள். வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களையும், அவர்களின் அறியாமையையும் நகைச்சுவையாகவும் அதே நேரம் ஆழமாவும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். அதுதான் சீனிவாசனின் மேஜிக். இப்படம் தமிழில் ’கதாநாயகன்’ என்ற பெயரில் எஸ்.வி.சேகர், பாண்டியராஜன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
நகைச்சுவையைத் தாண்டி, மனித மனதின் ஆழமான சிக்கல்களையும் அவர் திரையில் கொண்டு வந்தார். தான் குள்ளமாகவும், கருப்பாகவும் இருப்பதால், தன் அழகான மனைவி தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று சந்தேகப்படும் கணவனின் கதைதான் 'வடக்குநோக்கியந்திரம்' (இதுவும் தமிழில் கருணாஸ் நடிப்பில் ‘திண்டுக்கல் சாரதி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது). தன் மனைவியைக் கவர வேண்டும் என்பதற்காக ஆங்கிலப் பத்திரிகையில் வரும் ஜோக்குகளை மனப்பாடம் செய்து சொல்லும் காட்சியும், போட்டோ ஸ்டுடியோவில் அவர் காட்டும் தாழ்வு மனப்பான்மையும்நம்மைச் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், அந்த கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தையும் வரவழைக்கும்.
'அரபிக்கதா' படத்தில் கம்யூனிச கொள்கைகளைத் தீவிரமாக நம்பும் 'கியூபா முகுந்தன்' என்ற அவரது கதாபாத்திரம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழில் ‘லேசா லேசா’ திரைப்படத்தில் ஒரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த படத்தில் விவேக் உடன் அவர் அடித்த லூட்டி இன்றும் பிரபலம்.
சீனிவாசனின் மறைவு மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விகளைக் கண்டு துவளாத சாமானியனின் பிரதிபலிப்பாக திரையில் தோன்றிய சீனிவாசன், தனது படைப்புகளின் வழியாக என்றென்றும் போற்றப்படுவார்.