பங்குச்சந்தை முறைகேட்டை மையமாகக் கொண்டு 2024-ம் ஆண்டு வெளியான படம், ‘லக்கி பாஸ்கர்’. இப்படம் தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது.
இதை இயக்கிய வெங்கி அட்லூரி இப்போது சூர்யா, மமிதா பைஜு நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஆக. 14-ல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அடுத்தடுத்து இயக்க இருக்கும் படங்கள் குறித்து பேசியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘ ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. அதற்கு முன்பு வேறு 2 படங்களுக்கான பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால், எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் தேவைப்படும். ‘லக்கி பாஸ்கர் 2’ என்பது மிகப்பெரிய பொறுப்பு; அதை நான் பல கோணங்களில் அணுகி உருவாக்க வேண்டி இருக்கிறது.
அதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகே இப்பணியைத் தொடங்குவேன். இதற்கிடையே, தனுஷ் நடிப்பில் ஒரு போலீஸ் கதையையும் ‘டிஸ்னி’ மற்றும் ‘ஹோம் அலோன்’ பாணியிலான குழந்தைகளுக்கான முழுமையான திரைப்படத்தையும் இயக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். வெங்கி அட்லூரி தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தை ஏற்கெனவே இயக்கி இருந்தார்.