

அமைச்சர் நிர்மல் குமார்
நெல்லை: “காவிரி விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தான். நமக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது” என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “ மின் கட்டண உயர்வு தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவலை தெரிவித்தார். அதுபோல புகார்கள் எதுவும் வரவில்லை. கோடை முடிந்த பின்னர் மின் கட்டணம் உயர்ந்தது தொடர்பாக, நாங்களாக முன்வந்து 3.70 லட்சம் வீடுகளில் மறு ஆய்வு செய்து வருகிறோம். கடந்த இரு நாட்களில் 10 ஆயிரம் வீடுகளில் மறு ஆய்வு செய்துள்ளோம்.
ஆனால், திமுக தலைவர் வாட்ஸ் அப்பில் வந்த தகவலை சொல்லி மக்களிடம் பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுவரை மறு ஆய்வு செய்த 10 ஆயிரம் இணைப்புகளில், 50 மட்டுமே பொருந்தாமல் உள்ளது. எனவே முன்னாள் முதல்வரான ஸ்டாலின் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து, மக்களிடம் பதற்றத்தை உருவாக்கக் கூடாது.
காவிரி விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தான். நமக்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்பதில் கர்நாடகா உறுதியாக இருக்கிறது. முன்பு திமுக ஆட்சி காலத்தில் நம்மிடம் வலுவான பிடி இருந்தது. அப்போது மைசூரு உடனான 50 ஆண்டுகள் ஒப்பந்தத்தை 1974-ல் தவறவிட்டு விட்டார்கள். காவிரி விவகாரத்தில் திமுக நிறைய தவறுகளை செய்துள்ளது.
தற்போது 3,500 கன அடி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தண்ணீர் திறக்க மறுக்கிறார்கள். இப்போது காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதுதான் நம்மிடம் உள்ள ஒரே வாய்ப்பு. அது தவிர்த்து நம்மிடம் உள்ள சட்ட ரீதியான வாய்ப்புகளை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். இதுமட்டுமின்றி ஒன்றிய அரசுக்கு தேவையான அழுத்தங்களை கொடுப்போம். ஒன்றிய அமைச்சர் ஒருவரே தமிழக விரோதி போல, கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பாஜக இருந்தாலும் அவர்களின் ஒரே முடிவு தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதுதான். ஒன்றிய அரசு இதுபோன்ற இரு மாநில பிரச்சினைகளில் ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான் 70 வருடங்களாக கர்நாடகாவின் கொள்கையாக உள்ளது” என்றார்.