இந்தியாவில் பிராந்திய மொழி திரைப்படங்கள் தங்கள் எல்லையில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. இப்போது இந்தியா முழுவதற்குமான ‘பான்-இந்தியா’ திரைப்படங்கள் உருவாகி முத்திரை பதித்து வருகின்றன. ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்த முறையில் அதிகமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
யாஷின் ‘கே.ஜி.எஃப்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’, பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றன.
இந்நிலையில், இதன் அடுத்தக்கட்டமாக உலகளாவிய கதைச் சொல்லலுக்கும் வெளியீட்டுக்கும் இந்திய சினிமா தயாராகி இருக்கிறது. ‘மிஷன் இம்பாசிபிள்’, ‘அவதார்’ போன்ற, உலகில் உள்ள பார்வையாளர்களை இழுக்கும் ‘பான் வேர்ல்டு’ படைப்புகளுக்கான முயற்சிகளை இந்திய சினிமா தொடங்கி இருக்கிறது.
இந்தியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட படைப்புகளை, உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் சர்வதேச ரசிகர்களைக் கவரும் வகையிலும் சில திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன. ‘பான் வேர்ல்டு’ படமாக உருவாகும் இவை, இந்திய படைப்பாற்றலை உலக அரங்கில் வெளிப்படுத்தக் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
ராமாயணம்
அவற்றில் ஒன்று, ‘ராமாயணம்’. இந்தியப் புராணக் கதையான ராமாயணத்தை இரண்டு பாகமாகத் திரைப்படமாக்கி இருக்கிறார், இயக்குநர் நிதேஷ் திவாரி. இதில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட் பிளாக் பஸ்டர் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்கள் சிலர் இதில் பணியாற்றியுள்ளனர். ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்தியப் புராணத்தை நவீன மற்றும் பிரம்மாண்டமான காட்சி மொழியில் இப்படம் உலகுக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராக்கா
ராமாயணம் இந்திய படம் என்ற வகைமைக்குள் வந்தாலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ திரைப்படம் ‘பான் வேர்ல்டு’ தீமை கொண்டுள்ள கதை என்கிறார்கள். அட்லி இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பான் வேர்ல்டு படம் என்று இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அதனால் இப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதிலும் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
வாரணாசி
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடித்துள்ள படம், ‘வாரணாசி’. சாகசப் படமான இதன் கதை, அண்டார்டிகா, ஆப்ரிக்கா, இலங்கை எனப் பல்வேறு இடங்களிலும் காலக்கட்டங்களிலும் பயணிக்கிறது. ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’, ஆஸ்கர் வரை சென்றிருப்பதால் இப்படத்தைச் சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறது. இப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் ஏற்கெனவே சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றன.
டாக்ஸிக்
யாஷ் நாயகனாக நடித்துள்ள, ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தைச் சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர்.
ஸ்பிரிட்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படமும் சர்வதேச ரசிகர்களைக் குறிவைத்து உருவாக்கப்படுகிறது. இதில் கொரிய சூப்பர் ஸ்டார், டான் லீ வில்லனாக அறிமுகமாகிறார். டான் லீயின் உலகளாவிய ரசிகர் பட்டாளமும், அதிரடி ஆக் ஷன் காட்சிகளும் இத்திரைப்படத்தைப் பல நாடுகளுக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள்.
இவை தவிர பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ‘டிராகன்’ உள்பட மேலும் சில திரைப்படங்கள் பான் வேர்ல்டை குறிவைத்து உருவாக்கப்பட்டுவருகின்றன.