கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம், ‘த டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்-அப்ஸ்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கின்றனர். கன்னடம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
ஆக் ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இதில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான் விக்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். மார்ச் 19-ல் வெளியாகும் இப்படத்தில் நடித்துள்ளவர்களின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டு வருகிறது.
அதன்படி, இப்படத்தில் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி தோற்றங்களை வெளியிட்ட படக்குழு நயன்தாராவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. அவர் இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் தோற்றம் பற்றி இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறும்போது, “நயன்தாராவை சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் அறிவோம். ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி அனைத்தும் அந்த கதாபாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில் தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்தப் பயணத்தில் நெருங்கிய நண்பரையும் பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.