தென்னிந்திய சினிமா

சின்ன சின்ன ஆசை: ஓர் அன்பின் கவிதை | ஓடிடி திரை அலசல்

சல்மான்

ஆன்மிக நகரமான காசியின் நதிக்கரையில், துயரத்தையும் தனிமையையும் சுமந்து திரியும் இரு உள்ளங்கள் சந்தித்துக் கொண்டால் என்னவாகும்?

அந்த எதிர்பாராத ஒரு நாள் பயணத்தையும், அது அவர்களுக்குள் ஏற்படுத்தும் காலம் கடந்த ஆழமான அன்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் 'சின்ன சின்ன ஆசை'. 

மாதவன் மாஸ்டர் (இந்திரன்ஸ்) ஓர் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். காசியில் கதக் நடனக் கலைஞரான தன் மகள் ஜானகியை (அபர்ணா பாலமுரளி) சந்திக்க அவர் அடிக்கடி அங்கு வருகிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த, கணவனை இழந்த லீலா (மதுபாலா), ஒரு குழுவோடு காசிக்குச் சுற்றுலா வருகிறார்.

எதிர்பாராத விதமாகத் தன் குழுவை விட்டுப் பிரிந்து, தன் உடைமைகளையும் தொலைத்துவிட்டு கங்கை நதிக்கரை படிகட்டுகளில் அழுதுகொண்டிருக்கும் லீலாவை மாதவன் சந்திக்கிறார். அவருக்கு உதவ முன்வரும் மாதவனுடன், ஆரம்பத்தில் விலகி நிற்கும் லீலா மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறார். அந்த ஒரு நாள் முழுவதும் அவரைக் காசியின் மூலை முடுக்கெல்லாம் அழைத்துச் செல்லும் மாதவனுக்கும், லீலாவுக்கு இடையிலான உரையாடல்களும், பிணைப்பும்தான் படத்தின் மையக் கதை.

இரு மனங்கள் இணையும்போது ஒரே நாளில் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்கள் நடந்துவிட முடியும். ஆன்மிக நகரமான வாரணாசியின் பின்னணியில், முன் பின் தெரியாத, தங்கள் வாழ்க்கையின் பாதி ஆயுளை கடந்துவிட்ட, ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்து, தங்களின் உரையாடல்கள், குறும்புப் பார்வைகள் மற்றும் புன்னகைகள் வழியே நட்பையும் பிணைப்பையும் வளர்த்துக் கொள்வதை ஒரு அழகான கவிதை போல வடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ். 

தனது முதல் படத்திலேயே பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக ஒன்றவைத்து, கதையின் இறுதியில் இதயத்தில் கனத்தோடு வெளியேறவும் வைத்துள்ளார். மதுபாலா பெரும்பாலும் தமிழிலும், இந்திரன்ஸ் தமிழும் மலையாளமும் கலந்த மொழியிலும் பேசினாலும், இவர்களின் உரையாடல்களின் வழியே கதை நகர்வதுதான் இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

ஆரம்பத்தில் லீலாவின் தயக்கம் காரணமாகக் கதையின் ஓட்டத்துக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு சற்று நேரம் எடுத்தாலும், இருவருக்கும் இடையேயான பந்தத்தை இயக்குநர் வர்ஷா கொண்டு சென்ற விதம் மிகவும் பாராட்டுக்குரியது.

மாதவனாக நடித்துள்ள இந்திரன்ஸின் நடிப்பை போற்ற வார்த்தைகள் இல்லை. மனிதர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு உயிர் கொடுத்து மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தி விடுகிறார். தனது கபடம் இல்லாத கண்கள், எதார்த்தமான உடல் மொழி, மெல்லிய புன்னகையின் மூலம் லீலாவை மட்டுமல்லாது பார்வையாளர்களான நம்மையும் எளிதில் கவர்ந்துவிடுகிறார்.  

லீலாவாக வரும் மதுபாலா மிகச் சிறந்த நடிப்பை தந்துள்ளார். ஆரம்பத்தில் அவருடைய டயலாக் டெலிவரி தனியாக உறுத்தினாலும், போகப் போக தன் நடிப்பால் வசப்படுத்தி விடுகிறார். வாழ்க்கையில் தவறவிட்ட சந்தோஷங்களை தேடும் மத்திய வயது பெண்ணின் மெல்லிய உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி கவர்கிறார்.

ஒரு சோகமான பெண்ணிலிருந்து, காசியில் சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியைக் கண்டடையும் ஒரு குழந்தை போல அவர் மாறும் விதம் அற்புதம். அவரது முதல் படமான 'ரோஜா'வின் புகழ்பெற்ற பாடல் வரியான 'சின்ன சின்ன ஆசை' என்பது, நிறைவேறாத பல ஆசைகளோடு வாழ்ந்து பின்னாட்களில் அதை நோக்கி நகரும் லீலாவின் கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாகப் பொருந்துகிறது.

குறைந்த காட்சிகளே வந்தாலும் அபர்ணா பாலமுரளி தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தந்தையுடன் அவர் போனில் பேசும் காட்சிகள் மிகவும் இதமானவை. இவர்களுடன் விஷ்ணு அகஸ்தியா, ஜாஃபர் சாதிக், காளி வெங்கட், தம்பி ராமையா வெகு சில நிமிடங்களே வந்தாலும் நிறைவு தருகின்றனர். காசியில் டீ விற்கும் நபர், தீபம் விற்கும் சிறுமி என சிறிய கதாபாத்திரங்கள் கூட கதைக்கு வலு சேர்க்கின்றன.

ஃபைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு காசி நகரத்தின் கோயில்கள், மனிதர்கள், படகுகள், உணவு, தெருக்கள் என அனைத்தையும் மிக அழகாகப் படம் பிடித்து நம்மை அங்கே கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் காட்சிகள் தரும் உணர்வை அப்படியே பிரதிபலிக்கின்றன. 

அன்பு, மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான சிந்தனைகளை விதைத்து, பார்வையாளர்களைத் தன் அன்பால் அரவணைக்கும் ஓர் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது 'சின்ன சின்ன ஆசை'. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் படம் முழுக்க தமிழே வியாபித்திருக்கிறது. எனவே இப்படத்தை மலையாளத்திலேயே பார்த்தாலும் தமிழ் பார்வையாளர்களுக்கு வசனங்கள் புரிவதில் பெரிய பிரச்சினை இருக்காது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.

SCROLL FOR NEXT