மோகன்லால் நடித்து வரும் ‘ஆபரேஷன் கங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ், ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மோகன்லாலின் 367-வது படமான இதை, ‘மேப்படியான்’ படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் எழுதி இயக்குகிறார். உக்ரைன்–ரஷ்யா போரின் பின்னணியில் இந்தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்று பெயர் வைத்திருந்தனர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகிறது.
இதன் படப்பிடிப்பில் பங்கேற்ற பாக்ய போர்ஸ், மோகன்லாலுடன் நடிப்பது ஆசீர்வாதம் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “உங்களோடு இணைந்து நடிப்பதை வரமாக உணர்கிறேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் உங்களது கண்களின் மூலம் சினிமாவை காணவும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது. நீங்கள் உண்மையிலேயே வரம் பெற்றவர்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.