தென்னிந்திய சினிமா

Akhanda 2: Thaandavam விமர்சனம் - பாலையாவின் மாஸ் மசாலா திருப்தியா, விரக்தியா?

டெக்ஸ்டர்

நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், போயபதி ஶ்ரீனு இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றிபெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக, தற்போது திரைக்கு வந்துள்ளது ‘அகண்டா 2: தாண்டவம்.’

முதல் பாகத்தில் எதிரிகளை துவம்சம் செய்து நீதியை நிலைநாட்டி இமயமலை செல்லும் அகண்டா (பாலகிருஷ்ணா) ஒரு புறம், இன்னொரு புறம் ஊரே மதிக்கும் முரளி கிருஷ்ணா (அதுவும் பாலகிருஷ்ணாதான்). முரளி கிருஷ்ணாவின் மகள் இந்திய ராணுவத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார். இந்தியாவை தகர்க்கத் துடிக்கும் அண்டை நாட்டு எதிரிகள், (சீனா என்று மறைமுகமாக காட்டப்படுகிறது) மகா கும்பமேளாவின் போது பயங்கரமான வைரஸ் கிருமியை பரப்பிவிடுகின்றனர்.

இந்த தேசிய அளவிலான நெருக்கடியில், தடுப்பு மருந்தை உருவாக்கும் பொறுப்பு முரளி கிருஷ்ணாவின் மகள் ஜானனி கையில் விழுகிறது. அவரை பாதுகாக்கவும், தர்மத்தை நிலைநாட்டி நாட்டை காக்கவும் அகண்டா மீண்டும் களமிறங்குகிறார். அவரால் எதிரிகளை வீழ்த்த முடிந்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.

‘அகண்டா’ முதல் பாகம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் மட்டுமின்றி திரைக்கதையாக பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்லக் கூடிய படம். பாலையா படத்தில் லாஜிக் பார்ப்பது பாவம்தான். ஆனால் முதல் பாகத்தில் ஒரு சின்ன லாஜிக்காவது இருந்தது. ஆனால், பாலையாவின் திரை வாழ்க்கையிலேயே இல்லாத அளவுக்கு, லாஜிக் எந்த கடையில் விற்கும் என்று கேட்கும் அளவுக்கு ஒரு கதையை எழுதி இருக்கிறார் போயபதி சீனு. உயிரிப்போர், அரசியல், ஆன்மீகம் என்று கலந்து கட்டி எதுவும் சரியாக ஒட்டாமல் குழப்பியடித்து கொடுத்திருக்கிறார்.

ஆன்மீகம், தேசப்பற்று என்று எதிரி நாட்டு ஆட்கள் இந்தியா குறித்து பேசுவதெல்லாம் ‘உஸ்ஸ்ஸ்’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. நாட்டை, மக்களைக் காப்பாற்றுவது போன்ற முக்கியமான விஷயங்களில் கூட ஒரு உணர்வுப்பூர்வமானபிணைப்பு இல்லை. மிக மிக சிறுபிள்ளைத்தனமான ஆக்கம்.

படம் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த சத்தமும், முடிவில்லாத சண்டைக் காட்சிகளும் படத்தை ரொம்பவும் நீளமாக்கி, பார்ப்பவர்களுக்குச் சோர்வைக் கொடுக்கிறது. இப்படத்தின் ஒரே பலம் என்று கூறவேண்டுமானால், அது நந்தமூரி பாலகிருஷ்ணாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் தான். அகண்டாவாக அவர் வரும் காட்சிகளில் அரங்கமே பற்றி எரிகிறது. அவ்வளவு ஆர்ப்பரிப்பு. தான் ஏற்றுக்கொண்ட மாஸ் ஹீரோ பாத்திரத்திற்கு முழு நியாயம் சேர்க்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளிலும், கனல் தெறிக்கும் வசனங்களிலும் பாலகிருஷ்ணா, தன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்.

ஆதி, வில்லனாக வந்தாலும், ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளார். சம்யுக்தா ஓரிரு நடனக் காட்சிகளுக்கும், ஒரு சண்டை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். மற்ற துணை கதாபாத்திரங்கள் அனைத்தும் அட்டைப் பலகையில் வரையப்பட்ட வெற்று சித்திரங்களாகவே உலா வருகின்றன.

இசையமைப்பாளர் தமன் பாலையா படங்களுக்கே உரிய தனது உழைப்பை கொட்டியிருந்தாலும், பல இடங்களில் பின்னணி இசை இரைச்சலாக மாறி காதில் ரத்தம் வர வைக்கிறது. பாடல்கள் எதுவும் சரியில்லை. படம் முழுக்க வரும் கிராபிக்ஸ் தரம் மிக மிக சுமார். சாதாரண யூடியூப் வீடியோ தரத்தில்தான் இருக்கிறது.

இயக்குநர் போயபதி ஶ்ரீனுவின் திரைப்படங்களில் லாஜிக்கை ரசிகர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பது ஒரு எழுதப்படாத விதியாக இருக்கலாம். ஆனால், ‘அகண்டா 2’ திரைப்படத்தில் புவியீர்ப்பு விதிகளும், அறிவியலும் மட்டுமல்லாது, அடிப்படைச் சிந்தனையும் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒரு தனி மனிதர் ஒட்டுமொத்த அண்டை நாட்டு ராணுவத்தையும் எதிர்கொள்வது, ஒற்றை ஆளாக ஒரு ஹெலிகாப்டரையே சாய்ப்பது, ஒரு ஆளை அப்படியே தலைகீழாக தூக்கி ஆரத்தி சுற்றுவது போன்ற காட்சிகள், நம்பகத்தன்மையின் எல்லையை மீறிச் சென்று, சில இடங்களில் சிரிக்க வைத்து விடுகின்றன.

ஏறத்தாழ மூன்று மணி நேரம் ஓடும் இப்படம், பார்ப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கிறது. முதல் பாகத்தில் குறைந்தபட்சம் ஒரு நேர்கோட்டில் சென்ற கதை இதில் அரைகுறையாகச் சேர்க்கப்பட்ட சண்டைக் காட்சிகளை இணைக்க அவசரமாக எழுதப்பட்ட ஒரு திரைக்கதையாகவே காட்சியளிக்கிறது. பாத்திரங்களுக்கிடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பு இல்லை.

தந்தை-மகள் உறவு, தாய்-மகன் பாசம் ஆகியவை மேலோட்டமாக மட்டுமே தொட்டுச் செல்லப்படுகின்றன. மேலும், மணிப்பூர் கலவரம், போதைப்பொருள் கடத்தல், ராணுவ நடவடிக்கைகள் போன்ற சமகால நிகழ்வுகளையும், அழுத்தமாக எழுதாமல் கேளிக்கைக்காகப் பயன்படுத்தியிருப்பது, மத உணர்வுகளையும், தேச பக்தியையும் திணித்திருப்பது போன்ற உணர்வையே தருகின்றன.

இது பாலையாவின் மாஸ் ஆக்‌ஷன் அவதாரத்தை மட்டுமே எதிர்பார்த்துச் செல்லும் தீவிர ரசிகர்களுக்கு மட்டுமேயான திருப்தியை தரக்கூடும். ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு மிஞ்சுவது என்னவோ விரக்தி மட்டுமே.

SCROLL FOR NEXT