திரையுலகினருக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) பெரும் சவாலாக விளங்கி வருகிறது. குறிப்பாக நடிகைகளின் ஆபாச புகைப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கி வெளியிடுவது அதிகரித்து வருகிறது.
ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர், பிரியங்கா மோகன் உள்பட பலர் இதை எதிர்கொண்டனர். இப்போது நடிகை ஸ்ரீலீலாவின் ஏ.ஐ புகைப்படங்களும் வெளியாகி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. இந்நிலையில், ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் அபத்தங்களைப் பரப்ப வேண்டாம் என நடிகை ஸ்ரீலீலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் அபத்தங்களைப் பரப்ப வேண்டாம் என ஒவ்வொரு சமூக ஊடக பயனரிடமும் கை கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தொழில்நுட்பத்தால் ஏற்படும் முன்னேற்றங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்காகத்தான். மாறாக அதைச் சிக்கலாக்குவதற்காக இல்லை.
ஒவ்வொரு பெண்ணும், அவள் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தாலும் கூட, ஒருவரின் மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர்தான். நாம் பாதுகாக்கப்பட்ட சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கவே விரும்புகிறோம்.
என் சக நடிகர்களும் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் சார்பாகவும் அதைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கையை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.