நடிகை ஹன்சிகா கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2024-ம்ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. இந்நிலையில் ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், விவாகரத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “தவறுதலாக ஒரு ரயிலில் ஏறிவிட்டால், அதிலிருந்து இறங்கி விடுவதுதான் சிறந்தது. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவளித்தனர். இப்போது இருக்கும் நிலையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் தாயும் சகோதரரும் என்னிடம், ‘உனக்கு எதுவும் சவுகரியமாக இல்லை என்றால் அதைத் தொடர வேண்டாம்’ என்று சொன்னார்கள். நான் மிகவும் இருண்ட மனநிலையில் இருந்ததை அவர்கள் கண்டார்கள். இயல்பாகவே நான் மகிழ்ச்சியான, கலகலப்பான நபர்.
அப்படிப்பட்ட நான், அந்த மனநிலையில் இருந்தது அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அதனால், ‘நீ என்ன முடிவு எடுத்தாலும் துணை நிற்போம்’ என்றார்கள். இன்றுவரை, எங்கள் இருவருக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்பது வேறு யாருக்கும் தெரியாது; இரண்டு நபர்களுக்கு இடையில் நடக்கும் விஷயங்கள் பற்றி வேறொரு நபரிடம் சொல்வதற்கோ, கருத்துத் தெரிவிப்பதற்கோ எதுவுமே இல்லை” என்று கூறியுள்ளார்.