தனது மகன் ராம்சரண் மற்றும் மருமகள் உபாசனா தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை நடிகர் சிரஞ்சீவி சந்தோஷத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் ‘மனசங்கர வரபிரசாத் காரு’ வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் பெரும் உற்சாகத்தில் இருந்தார் சிரஞ்சீவி. தற்போது அவருடைய உற்சாகத்தை மேலும் இரட்டிப்பாக்கும் விதத்தில் அவரது மகன் ராம்சரண் - உபாசனா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இந்தப் பிரசவம் நடைபெற்றது. இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சிரஞ்சீவி குடும்பத்தினருக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
மகனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது தொடர்பாக சிரஞ்சீவி, “அளவற்ற மகிழ்ச்சியுடனும், நன்றியால் நிரம்பிய மனதுடனும் ராம்சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு கிளிம்காரா கொணிதெலா என்ற பெண் குழந்தை இருக்கிறது.