நடிகர் துல்கர் சல்மான்
என்னை வணிகக் கதாநாயகனாகப் பார்க்கும் தன்னம்பிக்கை இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை என்று நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் தந்தை மம்மூட்டியின் சினிமா வாழ்க்கை எனக்கு முன்மாதிரியாக இருக்கிறது. பிரம்மாண்டமான வணிகப் படங்களுக்கும் உள்ளடக்கத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களுக்கும் சமமாக இடமளிக்க அவரால் முடிகிறது. அந்த வகையான அங்கீகாரத்தைத்தான் நான் பெற விரும்புகிறேன். ஆனால், அது என்னைப் பயமுறுத்தும் விஷயம். அதனாலேயே ஒருமுறை அதற்கு முயற்சிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்தயில் சல்மான்கான் பற்றி கேட்கிறார்கள்.
அவர் படத்தில் இருந்தாலே பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துவிடுவார். அவரது படங்களுக்குப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும். பல வருடங்களாக, நீண்ட உழைப்பின் மூலம் அவர் சம்பாதித்த ரசிகர்களின் பலம் அது. ஆனால் எனக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. ஒரு படத்தின் வெற்றி, எனது நட்சத்திர இருப்பால் மட்டுமே உறுதியாகாது. ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க முயற்சிக்கும்போது, தயாரிப்பாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரும்.
ஒரு படத்தை வெற்றி பெறச் செய்ய, நான் மட்டும் போதும் என நினைக்கவில்லை. அதற்கும் அப்பால் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். திரைப்படத்தில் நல்ல கதையும் நேர்மையும் இருக்க வேண்டும். கதைகளில் உள்ள உணர்வுப்பூர்வமான நெருக்கமே என்னை அதிகம் ஈர்க்கிறது. வணிக வெற்றி முக்கியம் என்றாலும் பார்வையாளர்களை ஈர்க்க மனதுக்கு நெருக்கமான ஏதாவது ஓர் அம்சம் கதையில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்று துல்கர் தெளிவுபடுத்தினார்.