மம்மூட்டி நடிப்பில் கே.மது இயக்கிய படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. 1988-ல் வெளியான இப்படத்தில் சேதுராம அய்யர் கேரக்டரில் மம்மூட்டி நடித்திருந்தார். எஸ்.என்.சுவாமி கதை எழுதியிருந்தார். ராதா வினோத் ராஜு என்ற ஐபிஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாக வைத்து மம்மூட்டியின் கேரக்டர் உருவாக்கப்பட்டது.
இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 1989-ல் இப்படத்தின் 2ம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரிலும், 3ம் பாகம் ‘சேதுராம அய்யர் சிபிஐ’ என்ற பெயரிலும், 4ம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ என்றும் 5ம் பாகம் ‘சிபிஐ 5: தி பிரெய்ன்’ என்ற பெயரிலும் வெளியானது. இந்த 5 பாகங்களிலும் கே.மது, எஸ்.என்.சுவாமி, மம்மூட்டி, முகேஷ், ஜகதி குமார் இணைந்து பணியாற்றி இருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் 6ம் பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் கே.மது தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “’சிபிஐ’ படத்தின் 5 பாகங்களையும் பார்த்து விட்டீர்களா ? 6வது பாகத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா ? அப்படியென்றால், அந்தப் படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே இப்படத்தை ஜோபின் டி. சாக்கோ இயக்குவார் என்று கூறப்படுகிறது.