'எம்புரான்' படத்தின் கதையைக் கேட்டு எனது கண்கள் ஆச்சரியத்தில் உயர்ந்துள்ளன என்று பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், டொவினோ தாஸ், விவேக் ஓபராய், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. மலையாளத் திரையுலகில் இந்தப் படத்துக்கு முன்பாக இருந்த அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது. மேலும், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையும் கடும் போட்டிக்கும் இடையே விற்பனையாகியுள்ளது.
இந்தப் படத்தின் முடிவு, அடுத்த பாகத்துக்கான முன்னோட்டத்தோடு முடியும். அடுத்த பாகத்தின் பெயர் 'எம்புரான்' என்று அறிவித்தது படக்குழு. 'லூசிஃபர்' படத்துக்குக் கதை எழுதிய முரளி கோபியே இரண்டாம் பாகத்துக்கான கதையையும் எழுதியுள்ளார். தற்போது தான் நடித்து வந்த படங்களின் பணிகளுக்கு இடையே, முரளி கோபியுடன் 'எம்புரான்' கதைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார் பிரித்விராஜ்.
'எம்புரான்' பணிகள் தொடர்பாக பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "எழுத்தாளரோடு இருக்கிறேன். என்னுடைய கண்கள் ஆச்சரியத்தில் உயர்ந்துள்ளன. ஏனெனில் இவர் என்னிடம் கூறியதை நான் எப்படிப் படமாக்கப் போகிறேன் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் முரளி கோபியுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார்.
தவறவிடாதீர்