தென்னிந்திய சினிமா

முதல் பார்வை: வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

சி.காவேரி மாணிக்கம்

தன் லட்சியத்துக்காக காதலியைப் பிரிய நேரிடும் ஒருவன், அதனால் அனுபவிக்கும் அவஸ்தைகள்தான் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்'.

காதலர்களான விஜய் தேவரகொண்டா - ராஷி கண்ணா இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். எழுத்தாளராவதை லட்சியமாகக் கொண்ட விஜய் தேவரகொண்டா, அதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிடுகிறார்.

எனவே, பொருளாதாரத் தேவையை ராஷி கண்ணா மட்டுமே பார்த்துக் கொள்கிறார். அத்துடன், விஜய் தேவரகொண்டாவுக்கு ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைத்துத் தருவது, சமைத்துத் தருவது என அக்கறையாகக் கவனித்துக் கொள்கிறார். ஆனால், விஜய் தேவரகொண்டாவோ எழுதவும் செய்யாமல், ராஷி கண்ணாவிடம் சரியாகப் பேசாமல் தான்தோன்றித்தனமாக இருக்கிறார்.

இதனால் எரிச்சலாகும் ராஷி கண்ணா, ஒருகட்டத்தில் பொங்கி எழுந்து ப்ரேக்கப் சொல்கிறார். அவர் பிரிவைத் தாங்க முடியாமல் கஷ்டப்படும் விஜய் தேவரகொண்டா, ஒருவழியாக இரண்டு கதைகள் எழுதுகிறார். தான் நினைத்தபடி விஜய் தேவரகொண்டா எழுத்தாளர் ஆனாரா? பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது மீதிக்கதை.

திரைக்கதைக்குள் சில கதைகள் என்பதால், அதற்குத் தகுந்தவாறு தோற்றங்களில் வித்தியாசம் காட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. ஆனால், ‘அர்ஜுன் ரெட்டி’யை அடிக்கடி நினைவுபடுத்துவதால், எரிச்சலாக இருக்கிறது.

அழுதுகொண்டே இருக்கும் கதாபாத்திரம் ராஷி கண்ணாவுக்கு. தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், அது கைகூடவில்லை. தமிழில் டப்பிங் பேசியவர் அதிகமாக அழுததால், நிறைய வசனங்கள் புரியவே இல்லை.

விஜய் தேவரகொண்டா எழுதிய முதல் கதையில் நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம். கிராமத்து வெள்ளந்தி மனைவியாக இயல்பாக நடித்துள்ளார். அதே கதையில் வரும் கேத்ரின் தெரேசா, தன் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார். ஆனால், அவர் ஏன் அப்படிச் செய்கிறார் என்பதற்கான காரணங்கள் இல்லாததால், அந்த நியாயம் அடிபட்டுப் போகிறது.

இரண்டாவது கதையில் வரும் இசபெல், ஹீரோயின் கணக்கு காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளார். அந்த அளவுக்குத்தான் அவருடைய கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கோபி சுந்தரின் பின்னணி இசை, படத்துக்குப் பெரிய பலம். படம் தொய்வடையும் இடங்களில், பின்னணி இசையால் பார்வையாளனை படத்தோடு ஒன்றவைக்க முயற்சிக்கிறார். ஜெய கிருஷ்ணா ஒளிப்பதிவு, ரசிக்கத்தக்க வகையில் உள்ளது.

திரைக்கதை சொதப்பல், இந்தப் படத்தின் ஆகப்பெரிய மைனஸ். கதை நிகழும் காலம், ஃப்ளாஷ்பேக், விஜய் தேவரகொண்டா எழுதிய கதைகள் என மாறி மாறி வருவதால், படம் பார்ப்பவர்கள் சற்றே குழம்ப நேரிடுகிறது.

‘எழுதுவது என்பது சாதாரணமான விஷயமல்ல’, ‘ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?’ என்றெல்லாம் ஆரம்பத்தில் டயலாக் பேசுவார் விஜய் தேவரகொண்டா. ஆனால், அவர் எழுதிய முதல் கதை, கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஒருவன், நகரத்துப் பெண் மீது ஆசைப்படும் அதரப் பழசான கதை.

பாரிஸில் நிகழ்வதாகக் காட்டப்படும் காதலிக்குக் கண்ணைக் கொடுக்கும் இரண்டாவது கதையும் பழசோ பழசு. முதல் கதையையாவது ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்காக ரசிக்கலாம். ஆனால், இரண்டாவது கதை படத்தில் ஏன் இருக்கிறது என்றே தெரியவில்லை. அதை அப்படியே எடிட்டிங்கில் தூக்கியிருந்தால், படம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.

விட்டுக் கொடுப்பதுதான் காதல் என்பதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் க்ரந்தி மாதவ். ஆனால், சைக்கோ போல நடந்துகொள்ளும் விஜய் தேவரகொண்டா கதாபாத்திரத்தின் வழி சொன்னது மிகப்பெரிய சறுக்கல்.

ஒரு ஹீரோ, தன் பக்கத்து நியாயத்தை பார்வையாளனிடம் சொல்லும்போது, அதனுடன் நாமும் ஒன்றிப்போக வேண்டும். ஆனால், விஜய் தேவரகொண்டா கேமராவைப் பார்த்துப் பேசும்போதெல்லாம் எரிச்சல்தான் வருகிறது.

‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்பதற்குப் பதிலாக ‘வேர்ல்ட் ஃபேமஸ் சைக்கோ’ எனத் தலைப்பு வைத்திருக்கலாம்.

இதை ‘மிஸ்’ பண்ணிடாதீங்க...

SCROLL FOR NEXT