தாயால் தவறாக வளர்க்கப்பட்டு, உலகின் உச்சியை அடைய நினைக்கும் சைக்கோபதி கேங்ஸ்டர் ஒருவன், எரிவாயுக் கலனின் உச்சியில் சாம்பலாவதை விவரிப்பதே ‘ஒயிட் ஹீட்’ (WHITE HEAT – 1949) திரைப்படத்தின் ஒருவரிக்கதை.
கலிபோர்னியா மலைச் சுரங்கத்தில் அஞ்சல் ரயிலை வழிமறித்து, நான்கு ஊழியர்களைக் கொன்று 3 லட்சம் டாலர்களைக் கொள்ளையடிக்கிறான் கோடி ஜாரெட். கடும் தலைவலியில் துடிக்கும் அவனது தலையை வருடி, “மகனே, நீ உச்சியை அடையப் பிறந்தவன்” என்று உற்சாகமூட்டித் தேற்றுகிறாள் தாய் மா ஜாரெட்.
கொள்ளைப் பணத்தைப் பங்கு பிரிக்கும்போது போலீஸ் தேடி வர, இந்த மாபெரும் கொலை வழக்கிலிருந்து தப்பிக்கப் புத்திசாலித்தனமாகத் திட்டமிடுகிறான் கோடி. அதே நேரத்தில் வேறொரு மாகாணத்தில் நடந்த சாதாரணக் கொள்ளையை, தானே செய்ததாக ஒப்புக்கொண்டு, ஓராண்டு சிறைத்தண்டனை பெறுகிறான்.
ஆனால், கோடியின் மீது சந்தேகம் கொள்ளும் போலீஸ் அதிகாரி எவான்ஸ், ‘ஹாங்க் ஃபாலோன்’ என்ற ரகசிய அதிகாரியை ‘பார்டோ’ என்ற பெயரில் கோடி இருக்கும் சிறைக்கே கைதியாக அனுப்புகிறான். சிறைக்குள் நுழைந்த பார்டோ, ஒரு விபத்தில் கோடியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.
கோடிக்குத் தலைவலி வரும்போதெல்லாம் அவனது தாயைப் போலவே, தலையை வருடி ஆறுதல் கூறி, அவனது அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெறுகிறான். இருவரும் சில கைதிகளின் உதவி யுடன் சிறையிலிருந்து தப்பிக்கத் திட்டமிடுகின்றனர்.
வெளியில், கோடியின் மனைவி வெர்னாவும் கூட்டாளி பிக் ஹெட்டும் நெருங்கி பழகிக் கொண்டு கோடியைச் சிறையிலேயே தீர்த்துக்கட்டச் சதி செய்கின்றனர். சிறைக்கு வந்து மகனிடம் இதை எச்சரிக்கும் மா ஜாரெட், “பிக் ஹெட்டை நானே கவனித்துக் கொள்கிறேன்” எனக் கூறிவிட்டுக் கிளம்புகிறாள்.
சில நாட்களுக்குப் பின் சிறை உணவுக் கூடத்தில், புதிதாக வந்த கைதி மூலம் “மா ஜாரெட் சுட்டுக் கொல்லப்பட்டாள்!” என்ற செய்தி எட்டியதும், கோடி வெறிபிடித்த மிருகம் போல் அலறிச் சிறையையே கலவர பூமியாக்குகிறான்.
அவனை மனநல மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுக்கும்போது, சாதுர்யமாகத் துப்பாக்கியைக் கடத்தி, பார்டோ மற்றும் கூட்டாளிகளுடன் மருத்துவரின் காரிலேயே சிறையிலிருந்து வெளியேறுகிறான். நேராகப் பிக் ஹெட்டின் இருப்பிடத்துக்குச் செல்கிறான்.
உண்மையில் மா ஜாரெட்டைக் கொன்ற வெர்னா, தந்திரமாகப் பழியை பிக் ஹெட் மீது சுமத்துகிறாள். தாயின் மரணத்துக்குப் பழிவாங்கும் கொதிப்பில் கோடி, பிக் ஹெட்டை இரக்க மின்றிக் கொன்றுவிடுகிறான். அதன்பின், ரசாயனத் தொழிற்சாலையைக் கொள்ளையடிக்கக் கோடி, திட்டமிடும் போது அவனது கூட்டாளிகள் காலியாக இருக்கும் ஒரு பெட்ரோல் லாரியைக் காண்பிக்கின்றனர்.
அதில் மறைந்து கொண்டு கொள்ளையடிக்கக் கிளம்புகின்றனர். அப்போது லாரியின் அடிப்பகுதியில் ரகசிய டிரான்ஸ்மீட்டரைப் பொருத்தி, சிக்னல்களை அனுப்புகிறான் பார்டோ. அந்தச் சிக்னலைப் பின்தொடர்ந்து வரும் போலீஸ் படை, தொழிற்சாலையைச் சுற்றிவளைக்கிறது. வெடிக்கும் துப்பாக்கிச் சண்டைக்கு நடுவே, தன் உயிர் நண்பனாக நம்பிய பார்டோவே போலீஸ் உளவாளி என்பதை அறியும் கோடி, முற்றிலும் சிதறிப்போகிறான்.
தப்பிக்க வழியின்றி, தொழிற்சாலையின் உச்சியிலிருக்கும் பிரம்மாண்ட எரிவாயுக் கலனின் (Gas Tank) மீது ஏறி, போலீஸாரை நோக்கி வெறித்தனமாகச் சுடுகிறான். தீயும் புகையும் சூழும் அந்த இறுதி நொடியில், வானத்தைப் பார்த்து, “Made it, Ma! Top of the World!” என்று வெறிக்கூச்சலிட, அடுத்த கணமே அந்த டேங்க், பேரொலியுடன் வெடித்துச் சிதறுகிறது.
கீழே நிற்கும் அதிகாரி எவான்ஸ், “இறுதியாக கோடி உலகத்தின் உச்சியை அடைந்துவிட்டான்... ஆனால் அது அவன் முகத்திலேயே வெடித்துச் சிதறிவிட்டது” என்று கூறுவதுடன் படம் நிறைவடைகிறது. 1940-களின் அமெரிக்கக் கூட்டுக்கொள்ளைக் கலாச்சாரப் பின்னணியில், அதிரடித் திரைமொழியின் முன்னோடியான இயக்குநர் ரவுல் வால்ஷ்,
தாயின் தவறான அரவணைப்பு எவ்வாறு ஒருவனை அழிவின் உச்சிக்குத் தள்ளுகிறது என்பதை ஆழமான உளவியல் காவியமாகக் காட்சிப்படுத்திய திரைப்படம் இது.
வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், வர்ஜீனியா கெல்லாக்கின் மூலக்கதையை இவான் கோஃப், பென் ராபர்ட்ஸ் இருவரும் புத்திசாலித்தனமான திரைக்கதையாக்கி உள்ளனர். சிறுவயதில் தலைவலி வந்ததுபோல் நடித்துத் தாயின் பாசத்தைப் பெற்றவனுக்கு, வளரும்போது அதுவே உண்மைத் தலைவலியாகி மனச்சிதைவை ஏற்படுத்துவதாகக் காட்டியிருப்பது அசாத்திய உளவியல் நுட்பம்.
ஜிபிஎஸ் இல்லாத அக்காலத்திலேயே நடமாடும் வயர்லெஸ் கருவிகள் மூலம் குற்றவாளியைத் துல்லியமாகக் கண்டறியும் காட்சிகள் அன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் உச்சமாகத் திகழ்கின்றன. ஒளிப்பதிவாளர் சிட் ஹிக்கோக்ஸ், கறுப்பு–வெள்ளை ஒளியமைப்பில் மலைச் சுரங்கங்கள், இரவுத் தொழிற்சாலைகள், சிறைக்கொட்டகைகள் என இருளும் அச்சமும் சூழ்ந்த வெளிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ளார்.
படத்தொகுப்பாளர் ஒவன் மார்க்ஸ், குற்றவாளிகளின் முரட்டுத் தாக்குதல்களையும் போலீஸின் உளவு வலையையும் கச்சிதமாக இணைத்திருக்கிறார். குறிப்பாகச் சிறை உணவகக் காட்சியில், அம்மாவின் மரணச் செய்தி ஒவ்வொரு கைதியாகக் கடந்து கோடியை வந்தடைவதும், மா ஜாரெட்டின் காரைப் போலீசார் ஏ, பி, சி எனப் பிரிந்து துரத்துவதும் படத்தின் விறு விறுப்பைக் கூட்டுகின்றன.
மேக்ஸ் ஸ்டெய்னரின் பின்னணி இசை படம் முழுவதும் உளவியல் பதற்றத்தைத் தக்கவைக்கிறது. குறிப்பாக, இறுதிக்காட்சியில் கோடியின் வெறிக்கூச்சலுக்கு முன்பாக இசையை முற்றிலுமாக நிறுத்தி, அந்த மரண அமைதியையே மிகப்பெரிய உணர்வுத் தாக்கமாக மாற்றியிருக்கிறார்.
வெளியில் கொடூரமான குற்றவாளியாகவும் உள்ளுக்குள் தாயின் அன்புக்காக ஏங்கும் சிதைந்த மனிதனாகவும் கோடியின் உணர்வுப் போராட்டத்தைத் தீவிர உடல்மொழியால் உயிர்ப்பித்த ஜேம்ஸ் காக்னியின் நடிப்பு ஹாலிவுட்டின் மிகச்சிறந்த மைல்கல். ரகசிய போலீஸாக எட்மண்ட் ஓ’பிரையன் அமைதியான கம்பீரத்துடன் இப்படத்தின் உளவியல் மோதலுக்கு வலுவான எதிர்தளத்தை உருவாக்கியுள்ளார்.
கோடியின் சதிகார மனைவி வெர்னாவாக, வர்ஜீனியா மேயோ, பேராசையும் துரோகமும் கலந்த ‘ஃபெம் ஃபட்டேல்’ பாத்திரத்தை இயல்பாக வெளிப் படுத்தியுள்ளார். மா ஜாரெட்டாக வரும் மார்கரெட் வைச்சர்லி, பாசமுள்ள தாயாகவும் இரக்கமற்ற கும்பல் தலைவியாகவும் இரு முரண்பட்ட முகங்களை வெளிப்படுத்தி, கோடியின் மனப்பிறழ்வுக்கான வேரைத் திரையில் அழுத்தமாகப் பதியச்செய்துள்ளார்.
கோடி ஜாரெட் கதாபாத்திரமும் “Made it, Ma! Top of the World!” என்ற வசனமும் உலக சினிமா வரலாற்றின் அடையாளங்கள். தாயின் தவறான அன்பும் மகனின் அந்தஸ்து வெறியும் உருவாக்கும் பேராபத்தை உளவியல் காவியமாக மாற்றியிருப்பதே இப்படம், க்ரைம் நோயர் சினிமாவில் தனியிடம் பிடித்திருக்கக் காரணம்.
மனிதனுள் மறைந்திருக்கும் இருண்ட அகவெடிப்புகளைத் தவிர்க்க முடியாது என்பதை, எரிவாயுக் கலனின் உச்சியில் சாம்பலாகும் கோடியின் வழியே இப்படம் உணர்த்துகிறது. காலத்தைத் தாண்டி ஜொலிக்கும் இந்த உளவியல் காவியத்தை, ஓர் ஓய்வு நாளில் அமைதியாகக் கண்டுகளிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com