எப்போதும் கட்டுக்கதைகள் சொல்லும் சிறுவன், ஒரு தம்பதியர் செய்த கொலையை நேரில் பார்த்ததாகக் கூறியும் யாரும் நம்பாத நிலையில், அதே கொலையாளிகளிடமிருந்து அவன் உயிர் தப்பப் போராடுவதுதான் ‘த விண்டோ’ (THE WINDOW- 1949) திரைப்படத்தின் கதை.
நியூயார்க் நகரின் லோயர் ஈஸ்ட் சைடு பகுதியின் ஒரு பழைய குடியிருப்பின் ஜன்னலுக்குள் கேமரா நுழைய, அங்கே டாமி என்ற 9 வயதுச் சிறுவன், தன் விளையாட்டுத் துப்பாக்கியால் நண்பர்களைச் சுட்டு விளையாடுகிறான். விளையாடி ஜெயித்த பணத்தை வாங்கிவிட்டு, “எங்கள் அப்பாவுக்கு டெக்ஸாசில் ஒரு பெரிய பண்ணை வீடு இருக்கிறது; அங்குள்ள செவ்விந்தியர்களைச் சுட்டுக் கொன்ற பிறகு சில நாட்களில் அங்கு குடியேறப் போகிறோம்” என்று அளந்து விடுகிறான்.
வீட்டுக்கு வந்து அப்பா எட், அம்மா மேரியிடம் “தெருவில் பல கொள்ளைக்காரர்களைச் சுட்டுக் கொன்றேன்” என்று பொய் சொல்கிறேன். அப்போது கட்டிட மேலாளர், “பண்ணை வீட்டுக்குக் குடிபெயரப் போவதாக உங்கள் மகன் சொன்னதால் வீட்டை வாடகைக்குக் காட்ட வந்தேன்” என்று ஒரு தம்பதியை அழைத்து வருகிறார். மேரியும் எட்டும் அதிர்ச்சியடைகிறார்கள். “உன் பொய்களால் ஒருநாள் பெரிய ஆபத்து வரும்” என மகனை எச்சரித்துவிட்டு, எட் இரவுப் பணிக்குச் செல்கிறார்.
அறையில் புழுக்கம் தாங்காமல் வெளிப்புறத் தீயணைப்புப் படிக்கட்டில் படுக்கும் டாமி, குளிர்ச்சிக்காக மேல் தளத்துக்கு ஏறி ஜன்னல் வழியே பார்க்கிறான். அங்கே மேல்வீட்டுத் தம்பதியான கெல்லர்சனும் ஜீனும் சேர்ந்து, ஒரு மாலுமியைக் கொடூரமாகக் கொலை செய்வதை கண்டு அதிர்ச்சியடைகிறான்.
தூங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை எழுப்பி, “மேல்வீட்டுக்காரர்கள் ஒருவரைக் கொன்றுவிட்டார்கள்” என்று பதறுகிறான். காலையில் வேலை முடிந்து வீடு திரும்பும் அப்பாவிடமும் இதைச் சொல்கிறான். ஆனால் இருவருமே நம்ப மறுக்கிறார்கள். வேறு வழியின்றி அருகிலுள்ள காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளிக்கிறான். அவனை நம்பி வரும் போலீஸாரிடம், “இவன் எப்போதுமே கதை கட்டிவிடுவான்” என்று மேரி சமாதானப்படுத்துகிறாள். ஆனாலும் சிறு சந்தேகத்தில் பழுதுபார்ப்பவர் போல் கெல்லர்சன் வீட்டுக்குள் செல்லும் அதிகாரி, தரையில் உள்ள ரத்தக்கறையைக் கூரை ஒழுகிய நீர்க்கறை எனத் தவறாக எண்ணி அலட்சியமாகத் திரும்பிவிடுகிறார்.
எட் வந்ததும் நடந்தவற்றைச் சொல்லும் மேரி, டாமியை இழுத்துக்கொண்டு மேல் வீட்டுக்குச் சென்று, என் மகன் உங்கள்மீது கட்டுக்கதைகளைச் சொல்கிறான்; மன்னிப்புக் கேட்க அழைத்து வந்தேன்” என்று ஜீனிடம் கூறுகிறாள். அப்போது ஜீன் அமைதியாக இருந்தாலும், கணவனிடம் பேசும்போது டாமிக்கு உண்மை தெரிந்து விட்டதோ எனச் சந்தேகிக்கிறாள். அன்று மாலையில், டாமியின் சித்திக்கு உடல்நிலை சரியில்லை என்ற தந்தி, தவறாகத் தங்களுக்கு வந்ததாகக் கூறி ஜீன் கொடுக்கிறாள். “இது அவர்களின் சதி வலை” எனப் புலம்பும் டாமியிடம், தந்தி உண்மைதான் என்பதைப் போனில் பேசி உறுதிப்படுத்திவிட்டு மேரி ஊருக்குக் கிளம்புகிறாள். டாமியை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு எட் வேலைக்குச் சென்றுவிடுகிறார்.
நள்ளிரவில் கள்ளச்சாவி மூலம் டாமியின் அறைக்குள் நுழையும் கெல்லர்சன் தம்பதி, அவன் கொலையைப் பார்த்ததை நாசூக்காகப் பேசி உறுதி செய்கிறார்கள். “போலீஸிடம் நியாயம் கேட்கலாம்” என அவனை வெளியே அழைத்துச் செல்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சியை உணர்ந்து டாமி தப்பியோட முயல, அவனை மயக்கமடையச் செய்து ஒரு பாழடைந்த கட்டடத்துக்குத் தூக்கிச் செல்கிறார்கள். அங்கே அவனை உயரத்திலிருந்து தள்ளி விபத்தாகச் சித்தரிக்க முயல்கையில், மயக்கம் தெளிந்த டாமி சுதாரித்து ஓடி ஒளிகிறான்.
இருள் சூழ்ந்த நள்ளிரவில் பாழடைந்த கட்டடத்தின் ஆபத்தான உடைந்த உத்திரங்களில் நடக்கும் அந்தப்பூனை-எலி ஆட்டத்தில், அந்தச் சிறுவன் தப்பித்தானா, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா என்பதை விவரிப்பதே ‘த விண்டோ (1949)’ படத்தின் முழுக் கதை.
“ஓநாய் வந்துவிட்டது!” என்று பொய்யாகக் கூச்சலிட்டு ஊரை ஏமாற்றிய சிறுவன், நிஜமாகவே ஓநாய் வந்தபோது யாராலும் நம்பப்படாமல் போன புகழ்பெற்ற ஈசாப் நீதிக்கதையை மையப்படுத்தி எழுதப்பட்ட சஸ்பென்ஸ் க்ரைம் திரைப்படம் இது. ‘The Boy Cried Wolf’ என்ற நீதிக்கதையின் தலைப்பை “The Boy Cried Murder” என்று மாற்றியமைத்திருந்தார் எழுத்தாளர் கார்னெல் வூல்ரிச்.
ஹிட்ச்காக்கின் உலகப் புகழ்பெற்ற ‘ரியர் விண்டோ’ ரைப்படத்துக்கு மூலக்கதை எழுதியவரும் இவரே. இதற்கு அழுத்தமான, இறுக்கமான திரைக்கதையை எழுதியுள்ளார் மெல் டினெல்லி. ஹாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், ஹிட்ச்காக்கின் ‘நோடோரியஸ்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவராகவும் விளங்கிய டெட் டெட்ஸ்லாஃப் இயக்கிய படம் இது. அந்த அனுபவத்தைக் கொண்டு நியூயார்க்கின் ஒடுக்கமான அறைகள், படிக்கட்டுகள், தீயணைப்புப் பாதைகள் மற்றும் இருண்ட சாலைகளை த்ரில்லருக்கு ஏற்றவாறு நேர்த்தியாகப் பயன்படுத்தியிருக்கிறார். 20 நிமிட இறுதிப் பகுதி இதயத்துடிப்பை எகிற வைக்கிறது.
ஒளிப்பதிவு (வில்லியம் ஸ்டெய்னர்): பழைய குடியிருப்பின் குறுகிய படிக்கட்டுகள், இரவு நேரக் கட்டிட இடிபாடுகள் மற்றும் இருள் சூழ்ந்த நிழல்களை லைட்டிங்கில் மிரட்டலாகப் பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் கேமரா கோணங்களைக் கையாண்டிருக்கிறார்.
படத்தொகுப்பு (ஃபிரடெரிக் நட்ஸன்): வெறும் 73 நிமிடங்களே ஓடும் படத்தில், எங்கும் தொய்வில்லாமல் காட்சிகளை வெட்டி விறுவிறுப்பு ஏற்றியிருக்கிறார்.
இசை (ராய் வெப்): RKO-நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர். படம் முழுவதும் “என்ன ஆகுமோ?” என்ற பதைபதைப்பிலேயே நம்மை வைத்திருக்கிறார்.
டாமி (பாபி டிரிஸ்கால்): வால்ட் டிஸ்னியின் ஒப்பந்த நட்சத்திரமாக இருந்த இந்தச் சிறுவன், விளையாட்டுத்தனம், குறும்பு, பயம், குற்ற உணர்ச்சி, மரண பீதி என அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறப்பு ஆஸ்கர் விருது வென்றான். ர்பரா ஹேல் மற்றும் ஆர்தர் கென்னடி: டாமியின் தாய் மேரி வூட்ரி, தந்தை எட் வூட்ரியாக இருவரும் குறும்புக்காரச் சிறுவனைக் கண்டிக்கும் யதார்த்தமான பெற்றோராக நடித்துள்ளனர்.
பால் ஸ்டூவர்ட் மற்றும் ரூத் ரோமன்: கொடூரமான ஜோ கெல்லர்சன் - ஜீன் கெல்லர்சன் தம்பதியராக இருவரும் அடர்த்தியான வில்லத்தனம் காட்டியுள்ளனர். “டாமி இவர்களிடம் மாட்டிக்கொள்ளக் கூடாதே” என்ற பயத்தை நமக்குள் ஏற்படுத்துகிறார்கள்.
முழுக் கதையும் ஒரு சிறுவனின் பார்வையில் நகரும் இத்திரைப்படத்தை 1947-ல் RKO நிறுவனத்திடமிருந்து ஹோவர்ட் ஹியூஸ் கைப்பற்றியபோது, இந்தப் படம் வசூல் செய்யாது என்று கருதிக் கிடப்பில் போட்டார். ஆனால் 1949-ல் வெளியானபோது, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது.
“அவன் சொல்வது உண்மைதான்; ஆனால் அதை யாரும் நம்பவில்லை” என்ற நிலையைத் தொடக்கத்திலேயே உருவாக்குவதனால், பார்வையாளர்கள் டாமியுடன் சேர்ந்து அவனது பயத்தையும் பதற்றத்தையும் அனுபவித்தார்கள். ஈசாப் நீதிக்கதையை மிரட்டலான த்ரில்லராக மாற்றிய இப்படத்தை, நாம் ஜன்னலை மூடி வைத்தே ரசிக்கலாம்!
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)