நண்பன் ஒரு கிரிமினல் என்பதை நம்பாத எழுத்தாளனுக்கு அவன் கிரிமினல் என்று தெரிந்தால் என்னவாகும்? என்பதே ‘த தேர்ட் மேன்’(THE THIRD MAN – 1949) படத்தின் ஒருவரிக் கதை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் வியன்னாவுக்கு, நண்பன் ‘ஹாரி லைமை’ தேடி வருகிறான் அமெரிக்க எழுத்தாளன் ஹாலி மார்ட்டின்ஸ்.
அவனை ஒரு சவப்பெட்டி வரவேற்கிறது. ஹாரி லைம் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக காவலாளி சொல்கிறான். மார்ட்டின்ஸ் மயானத்துக்கு விரைகிறான். அங்கே ஹாரியின் உடல் மூடப்படுகிறது. கடைசிப் பிடி மண்ணைப் போட விரும்பாமல் ஹாரியின் காதலி அன்னா ஷிமிட் மவுனமாக வெளியேறுகிறாள். அவன் இறந்துவிட்டான் என்ற உண்மையை ஏற்க, அவள் மனம் தயாராக இல்லை.
ஹாரியின் மரணம் குறித்து விசாரிக்கும் மேஜர் காலவே, மார்ட்டின்ஸை ஒரு மது விடுதிக்கு அழைத்துச் செல்கிறார். ‘ஹாரி சாதாரண மனிதன் அல்ல, அவன் ஒரு கிரிமினல்’ என்று கூறி மார்ட்டின்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். மறுநாள் ஊருக்குத் திரும்ப டிக்கெட் எடுத்துத் தருவதோடு, அதுவரை மார்ட்டின்ஸ் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் மேஜர்.
தன் நண்பனின் மரணத்திலுள்ள மர்மத்தை தெரிந்து கொள்ளாமல் ஊருக்குச் செல்ல விரும்பாத மார்ட்டின்ஸுக்கு உதவி தேடி வருகிறது. அந்த ஹோட்டலுக்கு வரும் கலாச்சார விழா ஏற்பாட்டாளர், அந்த வாரம் நடக்கும் நிகழ்வில் ‘தற்கால நாவல்கள்’ பற்றி சொற்பொழிவாற்ற அழைக்கிறார். அதுவரை அவனது தங்குமிடச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்.
விபத்தின்போது உடனிருந்த பாரன் கர்ட்ஸ் மற்றும் ரோமானியர் பொபெஸ்கு ஆகியோரைச் சந்திக்கிறான் மார்ட்டின்ஸ். விபத்து நடந்த போது அங்கே 3 பேர் உடலைத் தூக்கிச் சென்றதாகக் காவலாளி கூற, மார்ட்டின்ஸுக்கு குழப்பம் உண்டாகிறது. அந்த ‘மூன்றாவது மனிதன்’ யார்? என்பதை கர்ட்ஸ் சொல்லவில்லை, காவலாளிக்கும் தெரியவில்லை.
ஹாரியின் காதலி அன்னா ஷிமிட்டைச் சந்திக்கிறான் மார்ட்டின்ஸ். அவளுக்கும் ஹாரியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. மீண்டும் காவலாளியைத் தேடிச் செல்லும்போது ‘இரவு வாருங்கள், ரகசியங்களைப் பேசலாம்’ என்று அழைத்தவன் கொல்லப்பட்டிருக்கிறான். கும்பல் மார்ட்டின்ஸை துரத்துகிறது.
தப்பிக்கும் மார்ட்டின்ஸை, மேஜர் காலவே கடிந்து கொண்டு, ஒரு ரகசியக் கோப்பை காட்டுகிறார். ஹாரி லைம், வியன்னாவில் தட்டுப்பாடாக இருந்த பென்சிலினை ராணுவ மருத்துவமனையில் பணி புரிந்த ஜோசப் ஹார்பின் உதவியுடன் திருடி, அதில் தண்ணீர் கலந்து விற்றிருக்கிறான்.
அதனால் பல குழந்தைகள் பலியானதையும், பலர் மனநலம் பாதிக்கப்பட்டதையும் ஸ்லைடு ஷோ மூலம் விளக்குகிறார். தன் பால்ய சினேகிதன் இவ்வளவு பெரிய கிரிமினல் என்பதை மார்ட்டின்ஸால் ஜீரணிக்க முடியவில்லை.
விரக்தியின் விளிம்பில் ஊருக்குக் கிளம்ப முடிவெடுக்கிறான். பாழடைந்த வியன்னாவின் இருண்ட தெருவொன்றில் நடந்து செல்லும்போது, ஒரு வீட்டு வாசலின் இருட்டில் ஒரு பூனை யாரோ ஒருவனின் காலணிகளுக்கு அருகே விளையாடுவதைக் காண்கிறான்.
அது ஹாரிக்கு மட்டுமே பிடித்தமான ‘அன்னா’வின் பூனை! யாரது? என்ற மார்ட்டின்ஸின் அதட்டலில், மேலடுக்கின் ஜன்னல் ஒன்று சட்டெனத் திறக்கப்பட, அதன் வெளிச்சம் அந்த மர்ம மனிதனின் முகத்தில் விழுகிறது.
அங்கே, சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்ட ஹாரி லைம் புன்னகையுடன் நின்று கொண்டிருக்கிறான்! உயிரோடு திரும்பிய நண்பனைப் பார்த்து மார்ட்டின்ஸ் அதிர்ச்சியடைகிறான். தன் நண்பனை அவன் போலீஸிடம் காட்டிக் கொடுத்தானா? பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய அந்த மெடிக்கல் மாஃபியாவின் சக்கரவர்த்தி ஹாரி லைமின் இறுதி முடிவு என்ன? என்பதை பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லும் படம் ‘த தேர்டு மேன்’.
கிரஹாம் க்ரீன் எழுதிய திரைக்கதையை இயக்குநர் கரோல் ரீட் சாதாரண மர்மப் படமாக எடுக்காமல், மனித மனச்சாட்சியை விசாரிக்கும் நீதிமன்றமாக மாற்றி, உலகத்தரம் வாய்ந்த படைப்பாக வழங்கியுள்ளார்.
அந்த ராட்சத ராட்டினத்தின் (Ferris Wheel) உச்சியிலிருந்து கீழே இருக்கும் மனிதர்களைப் புள்ளிகளாகப் பார்க்கும் ஹாரி, அந்தப் புள்ளிகள் அழிந்தால் யாருக்கு என்ன நஷ்டம்? என்று கேட்பான். மனித உயிர்களின் மதிப்பை பணமும் அதிகாரமும் எவ்வாறு கணக்காக மாற்றுகிறது என்பதைக் காட்டுவதோடு, மனிதாபிமானமற்றத் தன்மைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் ராபர்ட் கிராஸ்கர், சாய்வான கேமரா கோணங்கள் மற்றும் கவித்துவமான நிழல் விளையாட்டுக்களுக்காக ஆஸ்கர் விருது வென்றார். எடிட்டர் ஓஸ்வால்ட் ஹாஃபென்ரிக்டர் படத்தின் வேகம் குறையாமல், குறிப்பாக அந்தப் பாதாளச் சாக்கடைக்குள் எதிரொலிக்கும் காலடிச் சத்தங்களோடு நடக்கும் அந்தத் துரத்தல் காட்சியை, எடிட்டிங் மேஜையில் நேர்த்தியாகச் செதுக்கி படத்தின் விறுவிறுப்புக்கு முக்கியக் காரணமாகிறார்.
சிறிய உணவகத்தில் அன்டன் காரஸ் என்ற கலைஞர் வாசித்த ‘சிதர்’ (Zither) இசையில் மயங்கி, அவரையே படத்துக்கு இசையமைக்க வைத்தார் இயக்குநர். அந்த ஒற்றைக் கருவியின் இசையே படம் முழுக்க மர்மமான அழகைக் கூட்டுகிறது. ஹாரி லைமாக வரும் ஆர்சன் வெல்லஸ், மிகக் குறைவான நேரமே வந்தாலும் அசுரத்தனமான நடிப்பால் ஒட்டுமொத்தப் படத்தையும் ஆக்கிரமிக்கிறார்.
நீதியா? நட்பா? எனத் தவிக்கும் சாதாரண மனிதனாக ஜோசப் காட்டன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காதலன் கிரிமினலாக இருந்தாலும் கடைசிவரை விசுவாசம் காட்டும் அன்னா ஷிமிட்டாக, அலிடா வல்லி மிடுக்கான தோற்றத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
தொழில்நுட்ப ரீதியாக இது ‘பிரிட்டிஷ்’ படமாக இருந்தாலும், ஹாலிவுட் ஜாம்பவான் டேவிட் ஓ. செல்ஸ்னிக்கின் முதலீடும், ஹாலிவுட் நட்சத்திரங்களின் பங்களிப்பும் இதை உலகளாவிய கிளாசிக்காக மாற்றின. கிளைமாக்ஸில் நீதியைத் தேர்வு செய்த மார்ட்டின்ஸ், ஹாரியை முடிவுக்கு கொண்டு செல்கிறான்.
மீண்டும் மயானம். ஆரம்பத்தில் மண் போட மறுத்த அன்னா இப்போது அமைதியாக மண் போடுகிறாள். குற்றவாளி என்றாலும் அவள் காதலை மறக்கவில்லை. பேச காத்திருக்கும் மார்ட்டின்ஸை ஏறெடுத்தும் பார்க்காமல் கடந்து செல்லும் அந்த நீண்ட இறுதி ஷாட், உலகப் புகழ்பெற்ற ஒன்று.
இறந்துவிட்டதாகக் கருதப்படும் நாயகனைத் தேடும் புலனாய்வு பாணியை மையமாகக் கொண்ட சமகால படங்களில் இதன் தாக்கத்தை உணர முடியும். சினிமா ரசனை உள்ளவர்களையும் திரைக்கதை பயில்பவர்களையும் இந்த ‘மூன்றாம் மனிதன்’ இப்போதும் ஆச்சரியப்படுத்துவான்!
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)