ஹாலிவுட்

தி ரோரிங் ட்வென்டீஸ் (1939): கேங்ஸ்டர் யுகத்தின் வீழ்ச்சி | ஹாலிவுட் மேட்னி 54

ராம்குமார் சுப்பாராமன்

முதல் உல​கப்​போரில் நண்​பர்​களான மூன்று அமெரிக்​கப் படைவீரர்​கள், போருக்​குப் பின் குற்ற உல​கில் நுழைய, காதலும் துரோகமும் அவர்​களை எதி​ரி​களாக்​கு​வதே ‘தி ரோரிங் ட்வென்டீஸ் (THE ROARING TWENTIES- 1939)’ திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

1918-ல் முதல் உல​கப்​போரின் அகழிகளில் அமெரிக்க வீரர்​களான எட்டி, ஜார்ஜ், லாயிட் மூவரும் சந்​திக்​கிறார்​கள். ராணுவ வீரர்​களை உற்​சாகப்​படுத்த வரும் கடிதங்​களில், ஜீன் என்ற இளம்​பெண், எட்​டியை ஹீரோவாகப் பாவித்​துக் கடிதம் எழுதி​யிருக்​கிறாள். போர் முடிந்து மூவரும் பிரி​கிறார்​கள். நாடு திரும்​பும் எட்​டிக்கு பழைய மெக்​கானிக் வேலை கிடைக்​க​வில்லை. வேலை தேடி அலைந்து விரக்​தி​யடையும் அவன், நண்​பன் டானியுடன் இணைந்து டாக்ஸி ஓட்​டு​கிறான்.

1920-ல் அமெரிக்​கா​வில் மது​விலக்​குச் சட்​டம் அமலாக, கள்​ளச்​சா​ராய வியாபாரம் பெருகு​கிறது. ஒரு கள்​ளச்​சா​ராயப் பார்​சலை, பனாமா என்ற பெண்​ணிடம் டெலிவரி செய்​யும்​போது போலீ​ஸில் சிக்​கு​கிறான் எட்டி. பனாமாவுக்​காகப் பழியை ஏற்​றுச் சிறை செல்​லும் அவனை, அபராதம் கட்டி மீட்​கும் பனாமா, கள்​ளச்​சா​ராய லாபத்​தைக் காட்​டு​கிறாள். மாபெரும் கள்​ளச்​சா​ராயச் சாம்​ராஜ்​யத்தை உரு​வாக்​கு​கிறான் எட்டி. நேர்​மையான நண்​பன் லாயிட் அவனது வழக்​கறிஞராகிறான்.

போரின்​போது கடிதம் எழுதிய ஜீனை சந்​திக்​கும் எட்டி, தனது கிளப்​பில் அவளுக்​குப் பாடகி வேலை தரு​கிறான். அவள்​மீது காதல் வயப்​படு​கிறான். ஆனால் அவளோ லாயிட்​டைக் காதலிக்​கிறாள்.

நிக் பிரவுன் என்ற தாதாவிடம் உயர்​ரக சாராயத்தை விற்​பனைக்​குக் கேட்​கிறான் எட்டி. அவன் மறுக்​கவே, பிரவுனின் மதுபானக் கப்​பலைக் கொள்​ளை​யடிக்​கிறான். அங்கு வேலை செய்​யும் ஜார்​ஜை சந்​தித்து, இரு​வரும் பிரவுனுக்​குத் துரோகம் செய்து கூட்​டாளி​களாகிறார்​கள்.

கொள்​ளை​யடித்த எட்​டியைப் பழிவாங்க பிரவுன் அவனது கிளப்​பைத் தாக்​கு​கிறான். வன்​முறை பிடிக்​காமல் லாயிட், எட்​டி​யிட​மிருந்து வில​கு​கிறான். தங்​களைக் கொல்​லத் திட்​ட​மிடும் பிரவுனை சுட்​டுக் கொல்​கிறார்​கள் எட்​டியும் ஜார்​ஜும்.

ஜீன் – லாயிட் காதல் விவகாரம் தெரிந்து மனமுடைகிறான் எட்டி. போரின்​போது உற்​சாகப்​படுத்த எழுதப்​பட்ட கடிதங்​கள் காதலுக்கு உத்​தர​வாதமல்ல என்​பதை உணர்​கிறான்.

1929-ல் பங்​குச்​சந்தை வீழ்ச்​சி​யின்​போது எட்​டியும் தனது செல்​வத்தை இழக்​கிறான். பணத் தேவைக்​காக ஜார்ஜை அணுகு​கிறான். சந்​தர்ப்​பத்​தைப் பயன்​படுத்​திக்​கொள்​ளும் ஜார்ஜ், எட்​டி​யின் நிறு​வனத்​தைச் சொற்ப தொகைக்கு எழுதி வாங்​கி​விட்டு, அவனுக்கு ஒரே ஒரு டாக்​ஸியை மட்​டும் விட்​டுத் தரு​கிறான்.

மது​விலக்​குச் சட்​டம் முடிவுக்கு வரு​கிறது. பல ஆண்​டுகளுக்​குப் பின், டாக்ஸி ஓட்​டும் எட்டி, தனது வண்​டி​யில் ஏறும் ஜீனை வீட்​டில் இறக்​கு​கிறான். லாயிட் இப்​போது அரசு வழக்​கறிஞராகி, பெரும் தாதாவாக வளர்ந்​திருக்​கும் ஜார்​ஜுக்கு எதிராக வழக்​குத் தொடரத் தயாராகிறான். லாயிட்​டைக் கொல்ல ஜார்ஜ் திட்​ட​மிடுவதை அறியும் ஜீன், தனது கணவனைக் காப்​பாற்ற எட்​டி​யிடம் கெஞ்​சுகிறாள்.

முதலில் மறுக்​கும் எட்டி, பனாமாவின் அறி​வுரையால் ஜீனின் குடும்​பத்​தைக் காப்​பாற்ற முடிவெடுக்​கிறான். ஜார்​ஜை தேடிச் சென்று அவனது ஆட்​களுக்கு மத்​தி​யிலேயே சுட்​டுக் கொல்​கிறான். அங்​கிருந்து தப்​பியோடும் எட்டி மீது குண்டு பாய்​கிறது. பனி படர்ந்த தேவாலயப் படிகளில் சுருண்டு விழுந்து இறக்​கிறான். தெரு​வில் கிடக்​கும் சடலம் யாருடையது என்று விசா​ரிக்​கும் போலீ​ஸிடம் பனாமா, “இவன் ஒரு காலத்​தில் பெரிய ஆளாக இருந்​தான்” என்று கூறு​வதோடு ஒரு கேங்ஸ்​டர் யுகத்​தின் காவிய வீழ்ச்சி முடி​கிறது.

‘இது நிஜ மனிதர்​களின் கலவை; சம்​பவங்​கள் உண்​மையானவை’ என கதை ஆசி​ரியர் மார்க் ஹெல்​லிங்​கர் படத்​தின் ஆரம்​பத்​திலேயே, ‘இப்​படி ஒரு காலம் எதிர்​காலத்​தில் மீண்​டும் வந்​து​விடக் கூடாது’ என்ற எச்​சரிக்​கைக் குறிப்​பைப் பதிவு செய்​துள்​ளார். ராபர்ட் ரோசன், ஜெர்ரி வால்ட், ரிச்​சர்ட் மெக்​காலே கூட்​ட​ணி​யின் அழுத்​த​மான திரைக்​கதையும், ரவுல் வால்​ஷின் பிரம்​மாண்ட இயக்​கமும் வார்​னர் பிரதர்​ஸின் தயாரிப்​பும் அந்த இருண்ட கால​கட்​டத்​தின் சாட்​சி​ய​மான இப்​படத்தை ஒரு வரலாற்று ஆவண​மாகவும் கிளாசிக் காவிய​மாகவும் மாற்றியுள்​ளன.

ஒளிப்​ப​திவு (எர்னி ஹாலர்): ஆஸ்​கர் விருது வென்ற இவர், இரவுநேர நகரம், மதுக்​கூடங்​கள், கதாபாத்​திரங்​களின் முகங்​கள் ஆகிய​வற்​றில் ஒளி, நிழல்​களின் வழி​யாக உணர்​வு​களைக் கடத்து​கிறார். கொலை, கொள்​ளைக் காட்​சிகளி​லும் இறுதி​யில் தேவாலயப் படிகளில் நாயகன் வீழ்ந்து மடிவதிலும் ஒளிப்​ப​தி​வின் நேர்த்தி மனதைக் கவர்​கிறது.

படத்​தொகுப்பு (ஜாக் கிலிஃபர்): செய்​தித்​தாள்​கள் சுழன்று வரு​வது, துப்​பாக்​கி​கள் சுடப்படுவது, மது பீப்​பாய்​கள் உருளுவது என மாண்​டேஜ் உத்​தி​கள் மூலம் ஒரு தசாப்த கால வரலாற்​றைச் சுருக்​க​மாகக் கடத்​தி​யிருக்​கிறார்.

நைட் கிளப் பாடல்​கள் 1920-களின் ‘ஜாஸ் காலத்தை’ கண்​முன் நிறுத்து​கின்​றன. லியோ எஃப். ஃபோர்ப்​ஸ்டீனின் இசை இயக்​கமும், ரே ஹெய்ண்​டார்ஃபின் இசை ஒருங்​கிணைப்​பும் உணர்​வு​களைச் சிறப்​பாகக் கடத்து​கின்​றன. ஜான் டீரிங்​கின் பின்​னணி குரல், படத்​தின் கால​கட்​டத்​தைப் பார்​வை​யாளர்​களுக்கு அறி​முகப்​படுத்து​கிறது.

ஜேம்ஸ் காக்னி (எட்டி பார்ட்​லெட்): குற்ற உல​கில் நுழைந்து மாபெரும் சாம்​ராஜ்​யத்தை உரு​வாக்​கும் தாதா! தான் நேசிக்​கும் பெண் தனது நண்​பனை காதலிக்​கிறாள் என்​பதை அறிந்து வில​கு​வதிலும், இறுதி​யில் அவளது குடும்​பத்​தைக் காப்​பாற்​றத் தன் உயிரையே பணயம் வைப்​ப​திலும் ஆன்டி ஹீரோவாகத் தொடங்கி, மனிதநேயமிக்க நாயக​னாக உயர்​கிறார்.

ஹம்ப்ரி போகார்ட் (ஜார்ஜ் ஹாலி): பணத்​துக்​காக எதையும் செய்​யும் ஈவிரக்​கமற்ற கொடூரன். முன்​னாள் ராணுவ சார்​ஜென்ட்​டைக் கொல்​வது, நண்​பன் எட்​டிக்கே துரோகம் செய்​வது எனத் தனது மிரட்​டலான நடிப்​பால் அச்​சுறுத்து​கிறார்.

ஜெஃப்ரி லின் (லாயிட் ஹார்ட்): சூழ்​நிலை​யால் குற்ற உல​கில் சிக்​கினாலும், வன்​முறையைக் கண்டு வெளியேறுகிற நேர்​மையான வழக்​கறிஞர். இரு முரட்டு கேங்ஸ்​டர்​களுக்கு நேர்​மாறான இவரது கதாபாத்​திரம் படத்​துக்​குச் சரியான முரணை​யும் சமநிலை​யையும் தரு​கிறது.

பிரி​சில்லா லேன் (ஜீன் ஷெர்​மன்): போர்க்​காலத்​தில் முகம் தெரியாத ராணுவ வீரனுக்கு உற்​சாக மூட்​டக் கடிதம் எழுதும் இளம்​பெண். பின்​னர் நைட் கிளப் பாடகி​யாக உயர்​கிறாள். கணவனைக் காப்​பாற்ற நாயக​னிடம் கெஞ்​சும் காட்​சிகளில் யதார்த்​த​மான நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

கிளாடிஸ் ஜார்ஜ் (பனாமா): எட்​டி​யின் வளர்ச்​சிக்​கும் வீழ்ச்​சிக்​கும் துணைநிற்​கும் விசுவாச​மான பெண். அவன்​மீது கொண்ட அன்பை வெளிப்​படுத்​தாமல், மடிந்து விழும் அவனை மடி​யில் தாங்​கிப் பிடிப்​ப​து​வரை உணர்வு​பூர்​வ​மான நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

முதல் உல​கப்​போர், மது​விலக்கு, பங்​குச்​சந்தை வீழ்ச்சி என வரலாற்று நிகழ்​வு​களை மூன்று மனிதர்​களின் வாழ்​வோடு இணைத்து, கேங்ஸ்​டர் சாம்​ராஜ்​யத்​தின் எழுச்​சி​யையும் வீழ்ச்​சி​யையும் தனது அசுரவேகத் திரைமொழி​யாலும் விறு​விறுப்​பான காட்​சி​யமைப்​பாலும் நேர்த்​தி​யாகப் பதிவு செய்​துள்​ளார் இயக்​குநர் ரவுல் வால்ஷ்.

வரலாற்​றைக் கதாபாத்​திரங்​களின் வாழ்க்கை வழி​யாக உணர்த்​து​வது, கதாநாயக​னின் வீழ்ச்​சிக்கு அவன் சார்ந்த குற்ற உல​கத்​தையே காரண​மாக்​கு​வது, வலு​வான எதிர்​நாயகனை உரு​வாக்​கு​வது, குற்ற உல​கப் பின்​னணி​யில் காதலுக்கு இடமளிப்​பது எனப் பல திரைக்​கதை நுட்​பங்​களைக் கற்​றுத் தரு​கிறது இப்​படம். கதையின் மையக் கருத்​தைத் தாங்கி நிற்​கும் நேர்த்​தி​யான முடிவுடன், திரைக்​கதைப் பாட​மாக விளங்​கும் இத்​திரைக்​கா​வியத்​துக்​காக ஒரு பொன்​மாலைப் பொழுதைத் தாராளமாக ஒதுக்​கலாம்.

(செவ்​வாய்​தோறும் படம் பார்ப்போம்)

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT