

ஒரு தற்கொலை வழக்கை விசாரித்ததன் விளைவாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி, அதற்குக் காரணமான மாஃபியா கும்பலையும், துணைநிற்கும் ஊழல் காவல்துறையையும் எதிர்த்துப் போராடுவதே ‘தி பிக் ஹீட்’ (THE BIG HEAT - 1953) திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.
மேஜையில் உள்ள துப்பாக்கியை ஒரு கை எடுக்கிறது; டுமீல்! டாம் டங்கன் என்ற காவல்துறைப் பணியாளர் தற்கொலை செய்துகொள்கிறார். சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி பெர்த்தா, அருகிலிருக்கும் கவரைப் படிக்கிறாள். அதில் மாஃபியா தலைவன் மைக் லகானாவுடனான ஊழல் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிகிறாள். உடனே லகானாவுக்கு பேசுகிறாள். லகானா தன் கொடுமையான கூட்டாளி வின்ஸிற்குத் தெரியப்படுத்துகிறான். இந்த வழக்கை போலீஸ் அதிகாரி டேவ் பானியன் விசாரிக்கிறார்.
‘உடல்நலக் குறைவால்தான் டங்கன் இறந்தான்’ என்கிறாள் பெர்த்தா. ஆனால், டங்கனின் காதலி லூசி சாப்மன், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்யவிருந்ததாக பானியனிடம் சொல்கிறாள். பிறகு லூசி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறாள். இதன் பின்னணியில் லகானா இருப்பதை அறியும் பானியன், அவனது வீட்டுக்குச் சென்று எச்சரித்து, அவனது ஆட்களுடன் மோதுகிறார். விளைவு, பானியனைக் கொல்ல வைக்கப்பட்ட கார் வெடிகுண்டில் அவரது மனைவி கேட்டி கொல்லப்படுகிறாள்.
உயர் அதிகாரிகள், பழைய எதிரிகள்மீது பழிபோட முயற்சிக்க, லகானாவின் உத்தரவுப்படி அவர்கள் செயல்படுவதாக பானியன் குற்றம் சாட்டுகிறார். அவரைப் பணியிடைநீக்கம் செய்கிறார்கள். மனைவியைக் கொன்றவர்களைத் தனி ஆளாக பழிவாங்க நினைக்கிறார் பானியன்.
கார் வெடிகுண்டின் பின்னணியை விசாரிக்கும் பானியன், தனக்கு கிடைக்கும் தகவலால் பார் ஒன்றுக்குச் செல்கிறார். அங்கே பெண்ணின் கையைச் சிகரெட்டால் சுடும் வின்ஸிடம் சண்டையிடுகிறார். இதைக் கவனிக்கும் வின்ஸின் காதலி டெபி, பானியனைப் பின்தொடர்ந்து அவருக்கும் வின்ஸுக்கும் இடையிலான பிரச்சினையைத் தெரிந்துகொள்கிறாள்.
இதையறியும் வின்ஸ், டெபி மீது சூடான காபியை ஊற்றி முகத்தைச் சிதைக்கிறான். காதலனால் முகம் சிதைக்கப்பட்ட டெபி, பானியனிடம் அடைக்கலமாகிறாள். அவள் மூலமாக கேட்டியின் மரணத்துக்குக் காரணமான லாரி கார்டனையும், வெடிகுண்டு வைக்க உதவிய மெக்கானிக் ஸ்லிமையும் பற்றிய தகவல்களை அறிகிறார்.
பின்னர், பெர்த்தாவைச் சந்திக்கும் பானியன், அவள் மாஃபியா கும்பலை மிரட்டிப் பணம் பறித்து சொகுசாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார். பானியன் மூலம் பெர்த்தாவைப் பற்றித் தெரிந்துகொண்ட டெபி, மொத்தப் பிரச்சினைக்கும் காரணமான பெர்த்தாவின் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்து அவளைச் சுட்டுக் கொல்கிறாள். பிறகு வின்ஸைத் தேடிச் செல்லும் அவள், அவன் முகத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி பதிலடி கொடுக்கிறாள். வின்ஸ் அவளைத் துப்பாக்கியால் சுடுகிறான். உயிருக்குப் போராடும் டெபியிடம் அவள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன் மனைவியின் இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் பானியன்.
இறுதியில், டங்கன் விட்டுச் சென்ற ரகசியக் கடிதம் மூலம் லகானாவின் மாஃபியா கும்பலும் அதற்குத் துணைபோன ஊழல் அதிகாரிகளும் கைது செய்யப்படுகின்றனர். இழப்புகளைக் கடந்து பானியன் மீண்டும் காவல்துறைப் பணிக்குத் திரும்புவதோடு படம் நிறைவடைகிறது.
1950-களின் அமெரிக்கக் குற்றவுலக அரசியல், காவல்துறையின் ஊழல், கேங்க்ஸ்டர் கும்பல்களின் அதிகாரம், பழிவாங்குதல் ஆகியவற்றைப் பேசும் திரைப்படம் இது. ஒரு சாதாரணத் தற்கொலை விசாரணையாகத் தொடங்கும் கதை, குற்றவுலகுக்கு எதிரான தனிமனிதப் போராட்டமாக மாறுகிறது.
வில்லியம் பி. மெக்கீவர்ன் எழுதிய நாவலை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றியுள்ளார் சிட்னி போஹ்ம். பெண் கதாபாத்திரங்கள் வலுவாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. குடும்பப் பாசம் கொண்ட கேட்டி, வன்முறைக்கு எதிராகத் திரும்பும் டெபி, சுயநலத்துக்காகக் குற்றவுலக ரகசியங்களைப் பயன்படுத்தும் பெர்த்தா என இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள் கதையின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஜெர்மன் எக்ஸ்பிரஷனிசத்தின் முன்னோடிகளில் ஒருவரான இயக்குநர் ஃபிரிட்ஸ் லாங், தனது இருண்ட காட்சியமைப்பு, மனிதர்களின் உளவியல் பலவீனங்கள், வன்முறையின் கொடூரத்தை உணர்த்தும் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் இந்தப் படத்தைச் சிறப்பான படைப்பாக மாற்றியிருக்கிறார். கொலம்பியா பிக்சர்ஸ் சார்பாக ராபர்ட் ஆர்தர் தயாரித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு - சார்லஸ் லாங்: கருப்பு வெள்ளை என்றாலும் கண்ணுக்கு இதமான ஒளிப்பதிவு. குற்றவாளிகளின் வீடுகள், ஓட்டல் அறைகள், பார்கள், இரவு நேரச் சந்திப்புகள் என ஒவ்வொரு இடத்திலும் பதற்றமான மனநிலையை உருவாக்குகிறது.
படத்தொகுப்பு - சார்லஸ் நெல்சன்: நிதானமான வெட்டுகளிலும் தொய்வில்லாத வேகம். விசாரணை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள், டேவின் தனிப்பட்ட வாழ்க்கை எனக் காட்சிகள் சீராக நகர்கின்றன. இசை - மிஷா பகாலெய்னிகோஃப்: காட்சிகளின் உணர்ச்சியை மிகையாகத் திணிக்காமல் பின்னணி இசை கதையின் பதற்றத்தைத் தாங்கிச் செல்கிறது.
கிளென் ஃபோர்ட் - டேவ் பானியன்: நேர்மையான காவல்துறை அதிகாரி, அன்பான கணவர், மகளின்மீது பாசம் கொண்ட தந்தை, பழிவாங்கத் துடிக்கும் மனிதர் என பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்துகிறார். மனைவியின் மரணத்துக்குப் பிறகு அவருடைய முகத்தில் தெரியும் வெறுமையும் கோபமும் அருமை.
ஜோசலின் பிராண்டோ - கேட்டி பானியன்: டேவின் மனைவியாக இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கணவனிடம் அனுமதி கேட்டு ஐ லவ் யூ சொன்னவள், அடுத்த நிமிடமே குண்டுவெடிப்பில் பலியாகி அனைவரையும் கண் கலங்க வைக்கிறார்.
குளோரியா கிரஹாம் - டெபி மார்ஷ்: குற்றவாளியின் அழகிய காதலி. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், பின்னர் குற்றவுலகத்தை எதிர்க்கும் பெண்ணாகவும் மாறுகிறார். அவருடைய நடிப்பில் திமிர், நகைச்சுவை, அச்சம், வலி, பழிவாங்கும் உணர்வு என பல அம்சங்கள் இருக்கின்றன.
அலெக்சாண்டர் ஸ்கௌர்பி - மைக் லகானா: குற்றவுலகத்தின் தலைவன். வெளிப்படையாக மரியாதைக்குரிய மனிதராகவும், உள்ளுக்குள் கொடூரமான குற்றவாளியாகவும் இருவிதமான முகங்களைக் காட்டுகிறார்.
லீ மார்வின் - வின்ஸ் ஸ்டோன்: கொடூரக் குற்றவாளியாக, முகபாவனைகளாலும் உடல்மொழியாலும் அச்சத்தை ஏற்படுத்துகிறார். சிகரெட்டால் பெண்ணின் கையைச் சுடும் காட்சி மற்றும் கொதிக்கும் காபியை டெபியின் முகத்தில் வீசும் காட்சியில் காட்டும் நடிப்பு நம்மை அவருக்கு வில்லனாக்குகின்றன.
ஒரு நகரத்தின் காவல்துறையும் அரசியல் அதிகாரமும் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தால், நீதி என்பது சாமானிய மனிதனுக்கு எட்டாக்கனியாகிவிடுகிறது என்பதை 1953-லேயே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். பழிவாங்கலை மையமாகக் கொண்ட கதையை ஆர்ப்பாட்டமின்றி, அதன் உணர்வும் வேகமும் குறையாமல் படமாக்கியிருக்கிறார் ஃபிரிட்ஸ் லாங்.
திரைப்படக் கலையின் நுட்பங்களையும், சிறந்த ஃபிலிம் நுவார் அனுபவத்தையும் பெற விரும்புபவர்கள், இத்திரைப்படத்தை ரசித்துப் பார்க்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)