ஹாலிவுட்

த பப்ளிக் எனிமி (1931): குற்றத்தின் முடிவு | ஹாலிவுட் மேட்னி 41

ராம்குமார் சுப்பாராமன்

சிறு​வய​திலேயே குற்ற உலகில் நுழைந்து அதன் உச்​சத்தை அடைந்த இளைஞன், இறு​தி​யில் சமூகத்​தின் ‘பொது எதிரி’​யாக வீழ்ந்து மடிவதே ‘த பப்​ளிக் எனிமி’ (THE PUBLIC ENEMY 1931) படத்​தின் ஒரு​வரிக் கதை.

1909: சிகாகோ நகரம். நெரிசலான சாலைகள், பரபரப்​பான ரயில் நிலை​யங்​கள். ஒரு தூக்​கு​வாளி​யில் மது​வைச் சுவைக்​கும் சிறு​வன் டாம் பவர்​ஸின் அறி​முகத்​தோடு கதை தொடங்​கு​கிறது; அவனது நண்​பன் மேட். இரு​வரும் திருட்​டு​களில் ஈடு​படு​கின்​றனர். திருடிய பொருளை வாங்​கும் ‘புட்டி நோஸ்’ அவர்​களைக் குற்ற உலகுக்​குள் நுழைக்​கிறான்.

1915: புட்டி நோஸ் கொடுத்த திருட்டு வேலை​யில் ஈடு​படும்​போது, போலீ​ஸாரின் துப்​பாக்​கிச் சூட்​டில் இவர்​களது நண்​பன் இறக்​கிறான். தப்​பித்​து, புட்டி நோஸைத் தேடிச் செல்ல, அவன் தலைமறை​வாகி றான். அதன்​பின் சிகாகோ தாதா ‘பேடி ரேயான்’ என்​பவனிடம் சேர்ந்து பெரும் பணம் சம்​பா​திக்​கின்​றனர். டாமின் சகோ​தரன் மைக் ராணுவத்​தில் சேர்​கிறான்.

1920: மது​விலக்கு சட்​டம் அமலுக்கு வரு​கிறது. “நாளை முதல் மது கிடைக்​காது” என்ற அறி​விப்​பால் ஊரே வாக​னங்​களில் மதுப்​புட்​டிகளை ஏற்​றிக்​கொண்டு அல்​லோல​கல்​லோலப்​படு​கிறது. ரேயான் உத்​தர​வின்​பேரில் அரசு மதுக் கிடங்​கி​லிருந்து டாமும் மேட்​டும் டேங்​கர் லாரி​யில் மது கடத்​துகிறார்​கள். கார், பணம் என்று ஆடம்பர வாழ்க்​கைக்கு மாறும் இவர்​களுக்கு காதலிகளும் கிடைக்​கின்​றனர்.

ரேயான் மூலம் கேங்​ஸ்​டர் ‘நெ​யில்ஸ் நேதன்’ அறி​முக​மாகிறான். அவனது ஆதர​வில், எதிரி கேங்​கான ‘பர்ன்ஸ் கேங்​’கிடம் மது வாங்​கும் கடைகளைத் துவம்​சம் செய்து தங்​கள் வசப்​படுத்​துகின்​றனர்.

ராணுவத்​திலிருந்து திரும்​பிய மைக்​கிற்கு டாம் பார்ட்டி கொடுக்க, “இது மது​வல்ல, ரத்​தம்!” என மைக் கோபத்​துடன் மது​வைக் கொட்​டு​கிறான். பழைய எதிரி புட்டி நோஸ் வந்​திருப்​பதை நேதன் மூலம் அறிந்த டாம் அவனைத் தேடிச் சென்று இரக்​கமின்றி சுட்​டுக் கொல்​கிறான்.

இதற்​கிடையே தாதா நேதன் குதிரையி​லிருந்து விழுந்து இறக்க, கோபத்​தில் டாம் அக்​கு​திரையை விலைக்கு வாங்​கிச் சுடு​கிறான். நேதன் இறந்​த​தால், எதிரி​யான ‘பர்ன்ஸ் கேங்’ இவர்​களின் கம்​பெனிகளை உடைக்​கின்​றனர். பதிலடி கொடுக்​கக் கிளம்​பிய​வர்​களை தடுக்​கும் ரேயான், ‘இப்​போது வேண்​டாம்’ என்​கிறான்.

அங்கு தன்​னிடம் அத்​து​மீறும் ரேயானின் காதலியை அறைந்​து​விட்டு டாம் வெளி​யேற, மேட்​டும் பின்​தொடர்​கிறான். வெளியே ‘பர்ன்ஸ் கேங்’ தாக்​குதலில் டாமின் கண்​முன்னே மேட் சுடப்​பட்டு இறக்​கிறான்.

கொந்​தளிக்​கும் டாம், எதிரி​களின் கோட்​டைக்​குள் தனி ஆளாக நுழைந்து அனை​வரை​யும் சுட்டு வீழ்த்​துகிறான். இந்​தத் தாக்​குதலில் அவனும் பலத்த காயமடைந்து உயிருக்​குப் போராடு​கிறான். அவனை குடும்​பத்​தினர் பார்க்​கின்​றனர். மைக்​கிடம் மன்​னிப்பு கேட்​கிறான் டாம். பிறகு டாமை, எதிரி கும்​பல் ரகசி​ய​மாகக் கடத்​துகிறது.

இரவு டாம் வரு​வதற்​காக வீட்​டில் எல்​லோரும் காத்​திருக்க, கதவைத் திறக்​கும் மைக்​கின் காலடி​யில், டாமின் சடலம் சரிந்து விழுகிறது! எந்​த​வித​மான வசனங்​களும் இன்​றி, வன்​முறைப் பாதை ஒரு மனிதனை எவ்​வளவு இழி​வான மரணத்​துக்கு இட்​டுச் செல்​லும் என்​பதை இந்த இறு​திக் காட்​சி​யின் மூலம் ஆழமாகப் பதிவு செய்து முடிகிறது படம்.

“டாம் பவர்​ஸின் முடிவு​தான் ஒவ்​வொரு ரவுடி​யின் முடி​வும். ‘த பப்​ளிக் எனிமி’ ஒரு மனிதனோ, கதா​பாத்​திரமோ அல்ல; சமூகம் தீர்க்க வேண்​டிய ஒரு பிரச்​சினை” என்​பதை உணர்த்​தி​யபடி திரை இருள்​கிறது.

வார்​னர் பிரதர்ஸ் தயாரிப்​பில், கியூபெக் கிளாஸ்​மன், ஜான் பிரைட் ஆகியோரின் கதையை ஹார்வி எப்​.​தியூ திரைக்​கதை​யாக்க, இயக்​குநர் வில்​லி​யம் ஏ. வெல்​மேன், 1930-களின் மது​விலக்கு கால குற்ற உலகை யதார்த்​தத்​தின் வலிமை குறை​யாமல் பதிவு செய்​துள்​ளார். கேங்​ஸ்​டர் வாழ்க்​கையை மகிமைப்​படுத்​தாமல், அதன் இறுதி அழிவை வலி​யுறுத்​தி​ய​தாலேயே இந்​தப் படம் கேங்​ஸ்​டர் பட வரலாற்​றில் மைல்​கல்​லாகப் போற்​றப்​படு​கிறது.    

ஒளிப்​ப​திவு – டேவ் ஜென்​னிங்ஸ்: 1930-களின் நகர்ப்​புறச் சூழலை இயல்​பான ஒளி–நிழல்​களு​டன் பதிவு செய்​து, பின்​னாளில் உரு​வான ஃபிலிம் நோயர் பாணிக்கு முன்​னோட்​ட​மாக அமைந்​துள்​ளது.

படத்​தொகுப்பு -எட்​வர்ட் எம். மெக்​டெர்​மாட்: வேக​மான காட்சி மாற்​றங்​கள் கதை​யின் துடிப்​பை​யும், குற்ற உலகின் பரபரப்​பை​யும் வலுப்​படுத்​துகின்​றன.

ஜேம்ஸ் காக்னி (டாம் பவர்​ஸ்): கேங்​ஸ்​டர் கதா​பாத்​திரத்​தில் வெளிப்​படுத்​திய துடிப்​பும், ஆக்​ரோஷ​மும், இயல்​பான உடல்​மொழி​யும் ஹாலிவுட்​டின் முக்​கிய நட்​சத்​திரங்​களில் ஒரு​வ​ராக அவரை உயர்த்​தி​யது. முஷ்டியை மடக்கி செல்​லக் குத்து குத்​தும் மேனரிசம் ரசனை. கிளை​மாக்​சில் அவர் மரக்​கட்​டை​போல் குப்​புற விழும் காட்​சிப் பதற வைக்​கிறது.

எட்​வர்ட் வுட்ஸ் (மேட் டாயில்): குற்ற உலகில் நண்​பர்​களின் விசு​வாசம், பேராசை மற்​றும் அபா​யத்தை இவரது நடிப்பு இயல்​பாக வெளிப்​படுத்​துகிறது.

மே கிளார்க் (கிட்​டி): இவருடைய முகத்​தில் டாம் பழத்தை எறி​யும் காட்​சி, உலக சினி​மா​வின் மறக்க முடி​யாத தருணம். படத்​தின் பிர​தான டைட்​டில் கார்​டில் இவரது பெயர் இடம்​பெற​வில்லை என்​பது ஹாலிவுட்​டின் விசித்​திர​மான முரண்.

ஜீன் ஹார்லோ (க்​வென் ஆலன்): குறுகிய திரைநேரத்​திலேயே தனது கவர்ச்​சி​யான திரை இருப்​பால் கவனம் ஈர்க்​கிறார்.

டொனால்ட் குக் (மைக் பவர்​ஸ்): டாமின் நேர்​மை​யான சகோ​தர​ராக சட்​டத்தை மதிக்​கும் மனிதனின் குரலாகத் திகழ்​கிறார். அமை​தி​யான, அதே​நேரம் அழுத்​த​மான நடிப்பு.

பேரில் மேர்​சர் (மா பவர்​ஸ்): ஒரு மகன் குற்ற உலகில், இன்​னொரு மகன் நாட்​டிற்​காக ராணுவத்​தில். இந்த இரு எதிர்​துரு​வங்​களுக்கிடை​யில் எந்த மகனை​யும் விட்​டுக் கொடுக்க முடி​யாமல் தாயாக அவர் தவிக்​கும் வேதனையை மிகுந்த நுட்​பத்​துடன் வெளிப்​படுத்​தியிருக்​கிறார்.

இப்​படத்​தின் யதார்த்​த​மும், வன்​முறை​யும் அன்று பெரும் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​ய​தால், ஹாலிவுட் தணிக்​கைத் துறை விழித்​துக்​கொண்டு தனது விதி​களை கடுமை​யாக்​கத் தொடங்​கியது.

காலம் மாறலாம். குற்றத்தின் வடிவம் மாறலாம். ஆனால் குற்​றத்​தின் முடிவு ஒரு​போதும் மாறாது. எவ்​வளவு பெரிய குற்​றச் சாம்​ராஜ்ய​மாக இருந்​தா​லும், அதன் இறு​தி, வீழ்​வது​தான் என்​பதை 90 ஆண்​டு​களுக்​கு முன்​பே துணிச்​சலுட​னும்​, யதார்த்​த​மாக​வும்​ பதிவு செய்​திருக்​கும்​ இப்​படத்​தை ரசித்​து மகிழலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ ​பார்​க்​கலாம்​)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT