ஒரே இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரு இனவெறி கைதிகள் இணைந்து தப்பிக்கும்போது இணைபிரியா நண்பர்களாவதுதான் ‘த டிஃபையன்ட் ஒன்ஸ்’ (THE DEFIANT ONES – 1958) திரைப்படத்தின் ஒருவரிக்கதை.
மழை இரவில் கைதிகளை ஏற்றிச் செல்லும் சிறை வேன் சென்றுகொண்டிருக்கிறது. அதில் கறுப்பினக் கைதியான நோயாக் கல்லனும், வெள்ளையினக் கைதியான ஜான் ஜாக்சனும் ஒரே இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்.
பயணத்தின்போது கல்லன் பாடும் ஒரு பாட்டால் இருவருக்கும் தொடங்கும் வாக்குவாதம், இனவெறி மோதலாகி, வேன் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாக, இருவரும் ஒன்றாகத் தப்பித்து ஓடுகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் கூடும் காவல்துறையினர், ஒரு கறுப்பினக் கைதியையும் வெள்ளையினக் கைதியையும் ஒன்றாகப் பிணைத்த சிறை வார்டனைக் கிண்டலடித்த தோடு, “பரஸ்பரம் வெறுப்பு கொண்ட இருவரும் 5 கி.மீ தூரம் செல்வதற்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்றுவிடுவார்கள்” என நம்புகிறார்கள்.
காட்டுக்குள் தப்பிக்கும் கைதிகள் சங்கிலியை கல்லால் உடைக்க முயன்று தோற் கின்றனர். மறுபுறம், ஷெரீப் தலைமையில் மோப்ப நாய்களுடன் தீவிர தேடுதல் வேட்டை தொடங்குகிறது. ஆபத்தான ஆற்றைக் கடக்கும்போது நீரோட்டத்தில் சிக்கும் கல்லனை, ஜாக்சன் காப்பாற்றுகிறான்.
தவளையைச் சுட்டு உணவாக்கிக் கொள்ளும் அவர்கள், ஜாக்சனின் இனவெறிப் பேச்சால் மீண்டும் சண்டையிடுகின்றனர். பின்னர், வழியில் வரும் வாகனத்திடமிருந்து தப்பிக்கச் செங்குத்தான பள்ளத்தில் குதித்து, பெரும் போராட்டத்துக்குப் பின் வெளியேறுகின்றனர்.
அப்போது ஜாக்சனுக்கு ஏற்படும் காயத்துக்கு கல்லன் களிமண் பூசி உதவுகிறான். காவலர்களின் தேடுதல் குழு நெருங்கி வரும் வேளையில், இருவரும் ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைகிறார்கள். பவுர்ணமி வெளிச்சத்தில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஜாக்சன் முகத்தில் கல்லன் கரியைப் பூச, “இப்போது நாம் இருவரும் ஒன்றாகிவிட்டோம்” என ஜாக்சன் நெகிழ்கிறான்.
உணவுக்காக ஒரு கடையில் நுழைந்து ஊர் மக்களிடம் சிக்கித் தூக்குமேடை வரை சென்றவர்களை ஒரு பெரியவர் காப்பாற்றித் தப்பவிடுகிறார். மீண்டும் மலைப்பகுதியில் ஓடும்போது தனித்து வாழும் ஒரு தாயையும் சிறுவனையும் சந்திக்கிறார்கள். அங்குள்ள சுத்தியல் மற்றும் உளியைக் கொண்டு தங்கள் சங்கிலியை உடைக்கிறார்கள்.
கணவனைப் பிரிந்து தனிமையில் வாழும் அவளுக்கும் ஜாக்சனுக்கும் இடையே காதல் மலர்கிறது. மறுநாள், தன்னிடம் உள்ள பழைய காரைச் சரிசெய்து நாம் இருவர் மட்டும் தப்பிக்கலாம் என ஜாக்சனிடம் அவள் கூற, கல்லனும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அந்தப் பெண் கல்லனுக்கு ஒரு சதுப்பு நிலக் குறுக்குவழியைச் சொல்கிறாள். அவன் சென்றதும், அது உயிரைப் பறிக்கும் ஆபத்தான பாதை என்றும், போலீஸில் தங்களைக் காட்டிக்கொடுக்காமல் இருக்கவே அப்படிச் செய்ததாகவும் அவள் ஜாக்சனிடம் கூறுகிறாள். அதிர்ச்சியடையும் ஜாக்சன், அவளை உதறிவிட்டு நண்பனைக் காப்பாற்ற ஓடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த அவளது மகன் ஜாக்சனைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான்.
காயத்துடன் ஓடிவரும் ஜாக்சன், கல்லனைச் சந்தித்து ஆபத்தை எச்சரிக்கிறான். ஷெரீப் நெருங்கும் வேளையில், இருவரும் ஓடும் ரயிலில் ஏற முயல்கின்றனர். கல்லன் ஏறிவிட, பலவீனமடைந்த ஜாக்சனால் முடியவில்லை. சுதந்திரத்தை விட நட்பே பெரிதென உணர்ந்த கல்லன், தப்பிக்கக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் உதறி நண்பனுக்காக ரயிலில் இருந்து கீழே குதிக்கிறான்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து புன்னகையுடன் ஒரே சிகரெட்டை இருவரும் மாறி, மாறிப் புகைக்க, கல்லன் மீண்டும் தன் பாடலைத் தொடங்குகிறான். அங்கு வரும் ஷெரீப், துப்பாக்கியால் மிரட்டாமல் நெகிழ்ச்சியுடன் அமைதியாகப் பார்ப்பதுடன் படம் நிறைவடைகிறது.
1950-களில் அமெரிக்காவில் இனவெறி உச்சத்தில் இருந்த சூழலில், ‘மெசேஜ் இயக்குநர்’ என்றழைக்கப்படும் ஸ்டேன்லி கிராமர் இரு கைதிகளை மையமாக வைத்து அந்த இனவெறிச் சங்கிலியை உடைத்துக் காட்டிய படம் இது.
சிக்கலான கதையமைப்பு கொண்ட இப்படத்தைத் தனது சொந்த நிறுவனம் மற்றும் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கினார். சிவில் உரிமை போராட்டம் தீவிரமடைவதற்கு முன்பே இத்தகைய முற்போக்கான படத்தை உருவாக்கியதற்காக அவர் பெரிதும் பாராட்டப்பட்டார்.
கதாசிரியர்கள் நெடுரிக் யங் மற்றும் ஹரோல்ட் ஜேக்கப் ஸ்மித் இருவரும், இணைந்து இரு துருவக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடு மற்றும் உளவியல் மாற்றங்களை விறுவிறுப்பான ‘சேஸிங்’ கதைக்குள் மிக நுட்பமாகப் பின்னியிருக்கிறார்கள்.
இந்தச் சிறப்பான எழுத்தாக்கத்துக்காக ‘சிறந்த அசல் திரைக்கதை’க்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. மெக்கார்த்தி ஈரா காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த நெடுரிக்யங், நேதன் இ.டக்ளஸ் என்ற புனைப்பெயரில் இவ்விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சாம் லீவிட்டின் கறுப்பு-வெள்ளை ஒளிப்பதிவு, மழை, காடு, சதுப்பு நிலம் என கரடு முரடான நிலப்பரப்புகளில் தப்பியோடும் கைதிகளின் சோர்வை அவரது கேமரா தத்ரூபமாகப் படம்பிடித்தது. ஒளியும் நிழலும் கலந்த கோணங்களில் இனவெறி அரசியலை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியதற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை அவர் வென்றார்.
ஃபிரடெரிக் நுட்சனின் நேர்த்தியான படத்தொகுப்பு, தப்பியோடும் கைதிகளின் பதற்றத்தையும் அவர்களைத் துரத்தும் காவலர்களின் வேகத்தையும் கச்சிதமாக இணைத்து, படத்தின் விறுவிறுப்பை இறுதிவரை குறையாமல் பார்த்துக்கொண்டது.
எர்னஸ்ட் கோல்டின் பின்னணி இசை, படம் முழுவதும் ஒருவிதப் பதைபதைப்பைத் தக்க வைக்க உதவியது. கதாபாத்திரங்களின் உணர்வுப் போராட்டங்களுக்கு ஏற்பக் கச்சிதமான இசையை வழங்கிய அவர், கல்லன் அவ்வப்போது பாடும் அந்த ஒற்றைப் பாடலையே படத்தின் ஆன்மாவாக நிலைநிறுத்தியிருக்கிறார்.
டோனி கர்டிஸ் மற்றும் சிட்னி பாய்ட்டியர் ஆகிய இருவரின் அபார நடிப்பு இப்படத்தின் பெரும் தூண்கள். வன்மத்தில் தொடங்கி உயிர் கொடுக்கும் நட்பில் முடியும் உணர்வுப் போராட்டத்தை இருவரும் உடல்மொழியிலும் பார்வையிலும் அற்புதமாக வெளிப்படுத்தி யிருக்கிறார்கள்.
‘கவர்ச்சி நாயகன்’ பிம்பத்தை ‘டோனி கர்டிஸ்’ உடைக்க, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை சிட்னி பாய்ட்டியர் கம்பீரமாகத் திரையில் கடத்தியிருக்கிறார்.
தனிமையில் தவிக்கும் பெண்ணாக வரும் காரா வில்லியம்ஸ், மனிதாபிமானமிக்க ஷெரீப்பாக வரும் தியோடர் பிகெல் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உட்பட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம், 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது. மேலும், சிட்னி பாய்ட்டியர் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் கறுப்பின நடிகர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையையும் இப்படம் படைத்தது.
ஜாதி, மதம், இனம் என இன்றைய காலகட்டத்திலும் பிரிந்து கிடக்கும் மனிதர்களை இணைப்பது அன்போ, கருணையோ அல்ல, அவர்களின் அடிப்படைத் தேவையும் உயிர்வாழும் போராட்டமுமே என்பதை விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லருக்குள் வைத்துத் தைத்த திரைக்கதைக்காகவே, கருப்பு – வெள்ளை பாரபட்சமின்றி ஒரு வண்ண மாலைப் பொழுதை இக்காவியத்துக்காக ஒதுக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்க்கலாம்)
- ramkumaraundipatty@gmail.com