சாதாரண மிரட்டல் விசாரணைக்காக அழைக்கப்படும் துப்பறிவாளன், ஒரு பணக்கார குடும்பத்தின் இருண்ட ரகசியங்களிலும் தொடர்ச்சியான கொலைகளிலும் சிக்கிக்கொள்வதே ‘தி பிக் ஸ்லீப்’ (THE BIG SLEEP -1946). லாஸ் ஏஞ்சல்ஸின் புகழ்பெற்ற துப்பறிவாளரான பிலிப் மார்லோ, நோயாளி ஜெனரல் ஸ்டெர்ன்வுட்டின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறார்.
ஜெனரலின் இளைய மகள் கார்மென், தனது சூதாட்டக் கடனுக்காகப் புத்தக வியாபாரி கெய்கரால் மிரட்டப் படுவதை விசாரிப்பதே மார்லோவின் பணி. வழக்கை ஏற்று வெளியே வரும் மார்லோவை, மூத்த மகள் விவியன் சந்திக்கிறாள். கடந்த ஒரு மாதமாக மாயமான தன் தந்தையின் நண்பன் ஷான் ரீகனைத் தேடத்தான் அப்பா மார்லோவை அழைத்திருப்பாரோ? என்று அவள் சந்தேகிக்கிறாள்.
கெய்கரின் புத்தகக் கடைக்குச் செல்லும் மார்லோ, அது சட்டவிரோதத் தொழில் நடக்கும் இடம் என உணர்ந்து கெய்கரை அவர் வீடு வரை பின்தொடர்கிறார். திடீரென துப்பாக்கிச் சத்தம்.
மார்லோ உள்ளே நுழைந்தால் கெய்கர் பிணமாகக் கிடக்கிறார். கார்மென் போதை மயக்கத்தில் இருக்கிறார். கார்மெனை விவியனிடம் ஒப்படைத்து விட்டு மார்லோ திரும்பி வந்து பார்க்கையில், கெய்கரின் உடல் அங்கு இல்லை.
அடுத்த நாள், ஸ்டெர்ன்வுட் குடும்ப கார் ஓட்டுநர் ஓவன் டெய்லர், கடலில் இருந்து சடலமாக மீட்கப்படுகிறார். இதற்கிடையில், கார்மெனின் ஆபாசப் புகைப்படங்களை வைத்து ஒரு கும்பல் மிரட்டுவதாக மார்லோவிடம் முறையிடுகிறாள் விவியன்.
விசாரணையில், சூதாட்டக்காரன் ஜோ ப்ரோடி அந்தப் புகைப்படங்களை ஓவன் டெய்லரிடமிருந்து பறித்து, தன் காதலி ஆக்னஸ் மூலம் மிரட்டியவன் என்பது தெரியவருகிறது. விசாரணை நடக்கும்போதே கெய்கரின் டிரைவர் கரோல், ஜோ ப்ரோடியைச் சுட்டுக் கொல்கிறான்.
மார்லோ அவனைக் கைது செய்ய உதவுகிறார். விவியன் மூலம் ஷான் ரீகனுக்கும், கேங்ஸ்டர் எடி மார்ஸின் மனைவி மானோவுக்கும் தொடர்பு இருப்பதை மார்லோ அறிகிறார். எடி மார்ஸின் சூதாட்ட விடுதிக்குச் சென்று மானோவும் ஷான் ரீகனும் ஓடிப்போனது பற்றி விசாரிக்கையில் எடி மார்ஸ் ஆத்திர மடைகிறான்.
பிறகு ஹாரி என்பவன் மூலம் ஆக்னஸைச் சந்திக்கும் மார்லோ, மானோ மறைந்திருக்கும் இடத்தைக் கண்டறிகிறார். ஆனால், மார்ஸின் ஆள் கனினோ, ஹாரியை விஷம் கொடுத்துக் கொல்கிறான்.
ரியலிட்டோ என்ற இடத்தில் மானோவைச் சந்திக்கும் மார்லோ, ஷான் ரீகன் மானோவுடன் ஓடிப்போகவில்லை, அது எடியால் கிளப்பி விடப்பட்ட கதை என்பதைஅறிகிறார்.
ஷான் ரீகனை விரும்பிய கார்மென், தன்னை நிராகரித்த அவனை போதையில் கொன்று விட்டாள். இந்த ரகசியத்தை வைத்தே எடி மார்ஸ், விவியனை மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறான். இறுதியில், எடி மார்ஸை கெய்கரின் இடத்துக்கே வரவழைத்து ஒரு பொறியில் சிக்க வைக்கிறார் மார்லோ.
அங்கிருந்து தப்பிக்க முயலும் எடி மார்ஸ், சொந்த ஆட்களாலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். ஜெனரல் ஸ்டெர்ன்வுட் குடும்பத்தின் மானத்தைக் காக்க, ஷான் ரீகனை எடி மார்ஸ் கொன்றதாக போலீசுக்குத் தகவல் கொடுக்கிறார் மார்லோ. விவியனும் மார்லோவும் இணைகிறார்கள்.
இயக்குநர் ஹோவர்ட் ஹாக்ஸ், ரேமண்ட் சாண்ட்லரின் நாவலை சிக்கலான வலைப் பின்னலாகத் திரையில் நெய்திருக்கிறார்.
ஒருமுறை பார்த்து கதை முழுவதும் புரிந்தவர்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இதன் திரைக்கதையை எழுதியவர்கள், நோபல் பரிசு பெற்ற வில்லியம் ஃபாக்னர், லீ பிராக்கெட் மற்றும் ஜூல்ஸ் ஃபர்த்மேன்!
ஒளிப்பதிவு (சிட்னி ஹிக்காக்ஸ்): ‘ஃபிலிம் நுவார்’ (Film Noir) பாணியின் உச்சம். இருண்ட நிழல்கள், மழையில் நனைந்த சாலைகள், மங்கலான ஒளி என மர்மமான உலகத்தை கண்ணெதிரே நிறுத்தியிருக்கிறார்.
படத்தொகுப்பு (கிறிஸ்டியன் நைபி): ஒவ்வொரு காட்சியும் அடுத்த காட்சிக்கான ஆர்வத்தைத் தூண்டுவதோடு, கதையின் சிக்கலையும் பதற்றத்தையும் சமநிலையுடன் தாங்குகிறது.
இசை (மேக்ஸ் ஸ்டெய்னர்): படத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் அந்த இருண்ட சூழலை தக்கவைப்பதில் பின்னணி இசை பெரும் பங்கு வகிக்கிறது.
ஹம்ப்ரி போகார்ட் (பிலிப் மார்லோ): ஒரு துப்பறிவாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவரே இலக்கணம்.
ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழையும்போது, ஒரு புதிய மர்ம உலகுக்குள் செல்வதுபோல் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இவரது நிதானமான, ஆனால் கூர்மையான நடிப்பு அபாரம்.
லாரன் பேக்கால்: விவியனாக இவர் காட்டும் அந்தத் திமிர், ரகசியத்தை மறைக்கும் பதற்றம், மார்லோவிடம் காதல் வயப்படுவது எனத் தன் கண்களாலேயே கதையை நகர்த்தியிருக்கிறார். நிஜத் தம்பதியரான போகார்ட்-பேக்கால் ஜோடியின் ‘வேதியியல்’ உலகப்புகழ் பெற்றது.
மார்த்தா விக்கர்ஸ் : ஒரு விளையாட்டுத்தனமான, அதேநேரம் ஆபத்தான பெண் ணாக கார்மென் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ஜான் ரிட்ஜ்லி (எடி மார்ஸ்):
நயவஞ்சகமான வில்லத்தனம். கத்திக் கூச்சலிடாமல், அமைதியாகவே மிரட்டும் இவரது நடிப்பு அந்த இருண்ட உலகத்தின் பிரதிபலிப்பு.
வேகமான வசனங்கள், புத்திசாலித்தனமான மோதல்கள் மற்றும் ஆழமான பாத்திரப் படைப்புகள் இப்படத்தை இன்றும் சிறந்த ‘ஸ்டடி மெட்டீரி’யலாக மாற்றியுள்ளது.
மனித மனங்களின் இருண்ட பக்கங்களை ஆராயும் இந்த மர்மத் திரைப்படத்துக்காக ஒரு மதிய நேரத்தைத் தாராளமாக ஒதுக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம்பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com