‘தி பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்’ - 1936: காதல், தத்துவத்துக்கு மாறிய குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 24

‘தி பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்’ - 1936: காதல், தத்துவத்துக்கு மாறிய குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 24
Updated on
3 min read

மரணம் நோக்​கிப் புறப்​பட்ட மனிதன், மற்​றொரு​வர் வாழ்க்​கைக்​காகத் தனது இறப்பை மாற்​றிய கதை ‘தி பெட்​ரிஃபைட் ஃபாரஸ்ட்’ (THE PETRIFIED FOREST - 1936). அமெரிக்​கா​வின் அரிசோனா பாலை​வனத்​தின் வெறிச்​சோடிய எல்​லை​யில் ‘பிளாக் மெசா’ என்ற சாலை​யோர உணவகத்​துக்கு ஆலன் ஸ்குயர் என்ற ஆங்​கில எழுத்​தாளர் வரு​கிறார்.

ஒரே ஒரு நாவல் எழு​தி, பதிப்​பாளரின் மனை​வியைத் திரு​மணம் செய்​து, 8 ஆண்​டு​கள் அவளது தயவில் சோம்​பித் திரிந்​து, பின்​னர் அவளால் நிராகரிக்​கப்​பட்​ட​வர் அவர். நோக்​க மில்​லாமல் வாழ்​வதை​விட மரணத்​தையே சிறந்த முடி​வாகக் கருதும் ஆலன், பசிபிக் கடலைக் காணச் செல்​லும் பயணத்​தின் வழி​யில் உணவகத்​துக்​குள் நுழைகிறார்.

அங்கே பிரஞ்​சுத் தாய்க்​கும் அமெரிக்​கத் தந்​தைக்​கும் பிறந்த இளம் கலைஞர் கேப்​ரியெல்லைச் சந்​திக்​கிறார். அவளது தந்தை ஜேசன் மேபிள், போலி ராணுவ பெரு​மை​யில் வாழ்​பவர். தாத்தா கிராம்ப் மேபிள் - கையில் செல்​வம் இருந்​தும் பேத்​தி​யின் கனவு​களுக்​காகச் செல​விட மறுக்​கும் சுயநல கஞ்​சர்.

ஆலனுக்கு உணவு பரி​மாறிய கேப்​ரியெல், அவர் எழுத்​தாளர் என்று தெரிந்​ததும், தான் வாசிக்​கும் பிரெஞ்​சுக் கவிதைப் புத்​தகத்​தைக் காட்​டு​கிறாள். கேப்​ரியலுக்கு பிரான்​ஸ் சென்று தன் அம்​மாவைச் சந்​திக்க வேண்​டும், அங்கு கலை பயில வேண்​டும் என்​பதே தீராத லட்​சி​ய​மாக இருக்​கிறது.

ஆலனின் கடந்த காலத்​தைக் கேட்​டு, “உன் மனைவி உன்னை வெறுப்​பது சரி​தான்” என்று முதலில் கூறும் அவள், பின்​னர் அவனது நேர்​மை​யைக் கண்​டு, “ஆனால், நீ நேசிக்​கப்​படத் தகு​தி​யானவன்” என்று மாறுகிறாள். அவள் வரைந்த ஓவி​யங்​களை ஆலன் சிலாகிப்​பது அவளுக்​குப் பிடித்​துப்​போகிறது.

உணவகத்​தில் தன்​னைக் காதலிக்​கும் போஸ் என்ற கட்​டுமஸ்​தான கால்​பந்து வீரனை​விட ஆலனையே அவள் நேசிக்க விரும்​பு​கிறாள். ஆனால் ஆலன் அவளது காதலை மறுத்​து, ஒரு பிரி​யா​விடை முத்​தம் மட்​டும் பெற்​றுக்​கொண்டு கிளம்​பு​கிறார். உணவகத்​துக்கு வந்த பணக்​கார சிஷோம் தம்​ப​தி​யரிடம் அவரை வழி​யில் இறக்​கி​ விடு​மாறு கேப்​ரியல் கேட்​கிறாள்.

கொலை​காரன் ட்யூக் மாண்​டீ, ஆலனுடன் வரும் சிஷோம் தம்​ப​தி​யரின் வண்டியைக் கைப்​பற்​றி, அந்த உணவகத்தை முற்​றுகை​யிடு​கிறான். ரேடியோ​வில் ட்யூக்கை போலீ​ஸார் தேடும் அறி​விப்பு கேட்​கிறது. ஆலனும், பாலைவன மண் புயலைச் சமாளிக்க முடி​யாமல் சிஷோம் தம்​ப​தி​யரும் மீண்​டும் அங்கு வரு​கிறார்​கள். ஆலனைப் பார்த்​ததும் கேப்​ரியல் உணர்ச்​சிவசப்​படு​கிறாள். ட்யூக் அனை​வரை​யும் பிணைக் கைதி​களாக்​கு​கிறான்.

அங்கு நில​வும் பதற்​ற​மான சூழலில் தத்​து​வப் போர் நிகழ்​கிறது. அரசாங்​கத்​தின் இயலாமையை கிராம்ப் சாடு​கிறார். ட்யூக்​கிடம் “அர​சாங்​கம் கைவிட்​ட​தால் நீ கொள்​ளைக்​காரன் ஆனாய். வாய்ப்​பின்றி தவிப்​ப​தால் நான் விரக்​தி​யில் இருக்​கிறேன். நாம் இரு​வரும் காலா​வ​தி​யானவர்​கள்” என்​கிறார் ஆலன்.

உயிர் வாழ்​வ​தில் அர்த்​தம் காணாத ஆலன், தனது மரணத்தை அர்த்​த​முள்​ள​தாக்​கத் துணி​கிறார். தனது 5,000 டாலர் மதிப்​பிலான காப்​பீட்​டுப் பத்​திரத்தை கேப்​ரியல் பெயருக்கு மாற்​றி​விட்​டு, சிஷோம் தம்​ப​தி​யரை சாட்​சிக் கையெழுத்​திட வைத்​து​, தன்​னைச் சுட்​டுக் கொல்​லு​மாறு ட்யூக்​கிடம் வேண்​டு​கிறார்.

தான் இறந்​தால் மட்​டுமே அந்​தப் பணம் அவளுக்​குக் கிடைக்​கும், அதன்​மூலம் தன் கனவை நிறைவேற்ற அவள் பாரிஸ் செல்ல முடி​யும் என்​பதே அவரது திட்​டம். போலீ​ஸார் முற்​றுகை​யிடும்​போது தப்ப முயலும் ட்யூக்​கைத் தடுத்​துத் தன்​னைச் சுடச் சொல்லி ஆலன் கெஞ்​சுகிறார். வேறு வழி​யின்றி ட்யூக் சுட, குண்​டுச் சத்​தம் கேட்டு ஓடிவரும் கேப்​ரியெல் கரங்​களில் ஆலன் விழுகிறார்.

தன் ஒரு​நாள் காதலி​யின் கனவை நிறைவேற்ற தன் மொத்த வாழ்க்​கை​யை​யும் தி​யாக​மாக்கி உயிர் துறக்​கிறார் ஆலன். இறு​தி​யில் ட்யூக் பிடிபடு​கிறான். ஆலனின் விருப்​பப்​படி அவரை அந்த ‘கல்​மரக் காட்​டில்’ (Petrified Forest) புதைக்க முடிவு செய்​கிறார்​கள்.

கேப்​ரியெல் இறு​தி​யாக ஆலனைப் பார்த்து “உன் நிலத்​தில் நான் விதைத்த விதை, இனி செழித்து வளரும்​... இதுவே கடவுள் நம்மை சந்​திக்க வைத்த காரணம்” என்று கூறு​வதோடு படம் முடிகிறது. `பெட்​ரிஃபைட் ஃபாரஸ்ட்' — கல்​லாக மாறிய காடு.

மில்​லியன் ஆண்​டு​களுக்கு முன் உயிரோடு இருந்த மரங்​கள் இன்று கல்​லாக உறைந்து நிற்​ப​தைப் போல கன​விழந்த மனிதர்​கள் உறைந்து நிற்​கும் உலகத்தை எழு​திய ராபர்ட் ஷெர்​வுட்​டின் நாடகத்​தை, அதன் ஆன்​மாவைச் சிதைக்​காமல் சார்​லஸ் கென்​யான் – டெல்​மர் டேவிஸ் திரைக்​கதை​யில், ஆர்க்கி மேயோ சிறப்​பாக இயக்​கி​யுள்​ளார்.

லெஸ்லி ஹோவர்ட், பிராட்வே நாடகத்​தி​லும் ஆலன் ஸ்கொய​ராக ஒரு தோல்​வி​யுற்ற கற்​ப​னா​வாதக் கலைஞ​னாக நடித்​தார். மரணத்​தைத் தேடும் மனிதனிடம் சோகம் இல்​லை, ஓர் அமை​தி​யான தீர்​மானம் மட்​டுமே இருந்​தது; அந்த நுட்​பத்தை அவர் அசாத்​தி​ய​மாக வெளிப்​படுத்​தி​யிருக்கிறார்.

கொள்​ளை​யன் ட்யூக் மாண்​டீ, கண்​களில் வெறுமை, குரலில் அமை​தி​யான ஆபத்​து, உடல்​மொழி​யில் கட்​டுப்​படுத்​தப்​பட்ட வன்​முறை என அது​வரை ஹாலிவுட் பார்த்​தி​ராத வில்​ல​னாகத் தி​கழ்ந்​தார்.

கேப்​ரியெல்​லாக வரும் பெட்டி டேவிஸ், கனவு காணும் அப்​பா​வித்​தனம், புத்​தி​சாலித்​தனம் மற்​றும் ஆலன் மீது வளரும் காதல் ஆகிய​வற்றை மிகை நடிப்பு இல்​லாமல் வெளிப்​படுத்​தி​னார். லியோ எஃப். ஃபோர்ப்​ஸ்​டீன் வழங்​கிய இசை, கதை​யின் ஆழமான உணர்​வு​களைச் சிதைக்​காமல், பாலை​வனத்​தின் வறட்​சி​யைப் பிர​திபலித்​தது.

சால் போலிட்​டோ​வின் நேர்த்​தி​யான ஒளிப்​ப​திவு, பின்​னாளில் புகழ்​பெற்ற ‘ஃபிலிம் நாய்ர்’ பாணிக்கு முன்​னோடி​யான ‘ப்​ரோட்​டோ-​நாய்ர்’ (Proto-noir) நுட்​பங்​களை அறி​முகப்​படுத்​தி​யது. ஓவன் மார்க்​ஸ் தனது படத்​தொகுப்​பின் மூலம், ஒரே இடத்​தில் நடக்​கும் இந்த நாடகத்​தைச் சினிமா மொழி​யில் உயிர்ப்​பித்​தார்.

அமை​தி​யான காட்​சிகளில் நீண்ட ஷாட்​களை​யும், ஆபத்​தான தருணங்​களில் வேக​மான வெட்​டு​களை​யும் பயன்​படுத்தி சிறப்​பான தாளக​தியை உரு​வாக்​கி​னார். “உங்​களின் கடைசி வாய்ப்​பு என்​பது வெறும் எரிபொருளுக்​கானது மட்​டுமல்ல, அது சிதைந்​து​ போகும் மனித வாழ்​வின் இறுதி வாய்ப்​பைக் குறிக்​கிறது.

நமது அரசாங்​கம் ஒரு கொள்​ளைக்​காரனின் கேலிச்​சித்​திரம்” என்​பது போன்ற அதி​கார வர்க்​கத்​தைச் சாடும் கூர்​மை​யான வசனங்​கள், அரசாங்​கத்​தால் கைவிடப்​பட்ட சமூகம் மனிதனை எப்​படி மாற்​றுகிறது என்ற கேள்​வியை ஆழமாகப் பதிவு செய்​கிறது. ஒரு குற்​றப்

​படம், காதல்​ படமாகி பிறகு தத்​து​வார்த்​த சமூகப்​ படமாக முடிவடைகிறது. ஒரு வெயில்​ கால பகல்​ நேரத்​தை இப்​படம்​ பார்த்​து வசந்​த​மாக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘தி பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்’ - 1936: காதல், தத்துவத்துக்கு மாறிய குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 24
‘சன்செட் பவுலேவார்டு’ - 1950: ஹாலிவுட்​ தன் ஆன்மாவை தரிசித்த தருணம் | ஹாலிவுட் மேட்னி 23

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in