ஹாலிவுட்

த பிக் கிளாக் (1948) - தன்னைத்தானே கண்டுபிடிக்கும் பொறுப்பு | ஹாலிவுட் மேட்னி 40

ராம்குமார் சுப்பாராமன்

ஒரு கொலைக் குற்ற வழக்​கில் சந்​தேக நபரைக் கண்​டு பிடிக்​கும் பொறுப்பு சந்​தேக நபரிடமே ஒப்​படைக்​கப்​படு​வது​தான் ‘த பிக் கிளாக்’ (THE BIG CLOCK 1948) படத்​தின் ஒரு​வரிக் கதை. நியூ​யார்க்​கில், ஜனோத் பப்​ளி​கேஷன்ஸ் கட்​டிடத்​தில் காவலர்​கள் தீவிர​மாகத் தேடிக் கொண்​டிருக்கிறார்​கள்.

அங்​குள்ள பிரம்​மாண்​ட​மான ‘த பிக் கிளாக்’ கடி​காரத்​தின் உள்​ளே, ‘க்​ரைம்​வேய்​ஸ்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஸ்ட்​ர​வுட் ஒளிந்​திருக்​கிறார். அவரைக் கண்​டதும் சுட உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

கடி​கார எந்​திரங்​களுக்​குப் பின்​னால் நின்​றபடி, ‘36 மணி நேரத்​துக்கு முன்பு வரை நான் நல்ல குடும்​பத் தலை​வன், இப்​போது தேடப்​படும் குற்​ற​வாளி. எப்​படி இந்த எலிப்​பொறி​யில் சிக்​கினேன்?’ என்ற அவரது மனக்​குரலுடன் கதை பின்​னோக்​கிச் செல்​கிறது.

நிறு​வனத்​தின் சர்​வா​தி​கார முதலாளி ஏர்ல் ஜனோத், பத்​திரி​கை​யின் விற்​பனைச் சரிவை சரிக்​கட்ட ஆலோ​சனை நடத்​துகிறார். அங்கு ஜார்ஜ் முன்​வைத்த முக்​கிய ஆலோ​சனை ஜனோத்​துக்​குப் பிடித்​துப்​போக, அதை உடனே தொடங்க உத்​தர​விடு​கிறார்.

ஆனால் ஜார்​ஜோ, நீண்​ட​நாளாகத் திட்​ட​மிட்​டிருந்த தன் தேன்​நில​வுப் பயணத்​துக்​காக, வெஸ்ட் வர்​ஜீனியா செல்ல டிக்​கெட் முன்​ப​திவு செய்​திருக்​கிறான். அவனது விடு​முறையை ரத்து செய்து அந்த க்ரைம் ஸ்டோரியைத் தொடரச் சொல்​கிறார், ஜனோத்.

பலமுறை தேனில​வைத் தள்​ளிப் போட்ட ஜார்​ஜ், இம்​முறை முதலா​ளியை எதிர்த்​துப் பேசுகிறான். வேறு எங்​கும் வேலை கிடைக்​காத​படி செய்​வ​தாக மிரட்​டி, ஜார்ஜை வேலையை விட்டு நீக்​கு​கிறார் ஜனோத்.

விரக்​தி​யில் பாருக்​கு செல்​லும் ஜார்​ஜ், ஜனோத் மீது கடும் கோபத்​தில் இருக்​கும் அவருடைய ரகசி​யக் காதலி பவுலின் யார்க்​கைச் சந்​திக்​கிறான். இரு​வரும் மது அருந்​திக்​கொண்டே ஊர் சுற்​றுகிறார்​கள்.

மனை​வி​யுடன் செல்ல வேண்​டிய ரயிலைத் தவற​விடும் ஜார்​ஜ், நள்​ளிர​வில் பவுலின் வீட்​டில் போதை​யில் மயங்​கு​கிறான். அப்​போது ஜனோத் வரு​வதை அறிந்​து, பவுலின் அவனை உசுப்​பி​விட, தன் தொப்​பியை மறந்​து​விட்டு இருண்ட படிக்​கட்​டில் இறங்​கும்​போது மேலே ஏறி வரும் ஜனோத்தை அரைகுறை​யாகப் பார்க்​கிறான்.

அறைக்​குள் நுழை​யும் ஜனோத், பவுலினை சந்​தேகப்​பட்​டு, வாக்​கு​வாதம் செய்​கிறார். பிறகு அவளை கொடூர​மாகக் கொலை செய்​கிறார். பின்​னர் தன் விசு​வாசி ஸ்டீவ் ஹேகனை அழைக்க, அவன் சாதுர்ய​மாக யோசித்து பவுலினுடன் கடைசி​யாகச் சுற்​றிய அந்த ‘அறியப்​ப​டாத மனிதன்’ மேல் பழியைப் போடத் திட்டமிடு​கிறான்.

அடுத்த நாள், ஜனோத்​தும் ஹேக​னும் ஹனிமூனில் இருக்​கும் ஜார்ஜை மீண்​டும் வேலைக்கு அழைத்​து, அறியப்​ப​டாத குற்​ற​வாளியைத் தேடும் பொறுப்பை ஒப்​படைக்​கிறார்​கள். அவர்​கள் தேடு​வது தன்​னைத்​தான் என்​பதை அறி​யும் ஜார்​ஜ், தன் ‘க்​ரைம் மேகசின்’ குழுவை வைத்து அந்​தப் போலித் தேடு​தலைத் தொடங்​கு​கிறான்.

பவுலின் சுற்​றிய இடங்​களுக்​குச் சென்று விசா​ரிக்​கிறது குழு. அலு​வல​கக் கரும்​பல​கை​யில் ஆதா​ரங்​கள் ஒவ்​வொன்​றாகக் குவி​கின்​றன. ஜார்ஜ் சென்ற பழைய கலைப் பொருட்​கள் கடை, குடித்த விசித்​திர​மான மது, பெண் ஓவியர் லூயிஸ் பேட்​டர்​சனின் சாட்​சி​யம் என ஜார்​ஜின் அடை​யாளங்​கள் எழுதப்​படு​கின்​றன.

அந்த ‘அறியப்​ப​டாத மனிதன்’ கட்​டிடத்​துக்​குள்​தான் இருக்​கிறான் என்​பதை நேரில் பார்த்த சாட்​சிகள் மூலம் அறி​யும் ஹேகன், காவலா​ளி​களுக்கு அவனை கண்​டதும் சுட ஆணை பிறப்​பிக்​கிறான்.

தப்​பிக்க வழி​யில்​லாமல் பிரம்​மாண்​ட​மான பிக் கிளாக் கடி​கார அறைக்​குள் ஒளிந்து கொள்​கிறான் ஜார்​ஜ். கடும் கட்​டுப்​பாடு​களுக்கு இடையே ஜார்ஜ் எப்​படி தப்​பித்​தான்? ஜனோத்தை எப்​படி மாட்ட வைத்​தான் என்​பதை டிக், டிக் துடிப்​புடன் சொல்​லி​யிருப்​பது​தான் இப்​படத்​தின் கதை.

கென்​னத் ஃபியரிங்​கின் நாவலை அடிப்​படை​யாகக் கொண்​டு, ஜானதன் லட்​டிமரின் திரைக்​கதை​யில், ஜான் ஃபாரோ இயக்​கிய இந்த ஃபிலிம் நோயர், உலக சினி​மா​வின் சிறந்த ‘இன்​வெர்ட்​டட் க்ரைம் த்ரில்​லர்’ படைப்​பு​களில் ஒன்​று.

கடி​காரத்​தின் அத்​தனை பகு​தி​களை​யும் வில்​லன் ஜனோத்​தின் கூர்​மை​யான வசனங்​களி​லும், திரைக்​கதை​யின் தனித்​து​வ​மான நேரக் கணக்​கிலும் (டைம் நேரேட்​டிவ்) இணைத்​து, அந்​தப் பிரம்​மாண்ட கிளைமாக்ஸ் செட்​டிலும் பயன்​படுத்​தி​யிருக்​கும் உத்தி வியக்க வைக்​கிறது. 1940-களின் அதிவேக திரைக்​கதைகளில் ஒன்​றாக இன்​றும் இது போற்​றப்​படு​கிறது.

ஒளிப்​ப​திவு - ஜான் எஃப். சீட்ஸ்: அசாத்​தி​ய​மான கருப்​பு-வெள்ளை ஒளிப்​ப​தி​வில் நவீன கார்ப்​பரேட் செட்​டுக்​குள் ஜெர்​மன் ‘எக்​ஸ்​பிரஷனிச’ பாணியி​லான நிழல்​களை​யும், கடி​கார முட்​களுக்கு நடுவே பாய்ந்து வரும் ஒளியை​யும் பயன்​படுத்தி ஒரு மரணப் பொறியை கண்​முன்னே நிறுத்​தி​யுள்​ளார்.

படத்​தொகுப்பு மேற்​பார்வை - ஈடா வாரன்: கதை​யின் தொடக்க நள்​ளிர​வுத் துரத்​தலில் தொடங்​கி, 36 மணி நேரப் பின்​னோக்​கிய நகர்​வு, மற்​றும் அலு​வல​கக் கரும்​பல​கை​யில் ஆதா​ரங்​கள் குவி​யும் காட்​சிகள் வரை, கடி​கார முட்​களின் வேகத்​துக்கு ஏற்ப காட்​சிகளை வெட்டி இணைத்​து, நரம்புகளை முறுக்​கேற்​றும் அசாத்​தி​ய​மான திரைக்​கதை ஓட்​டத்​தைக் கண்​முன்னே நிறுத்​தி​யுள்​ளார்.

இசை - விக்​டர் யங்: கடி​காரத்​தின் தாளக் கதிக்கு இணை​யாகப் பின்​னணி இசையைக் கூட்​டி, மரண பயத்​தை​யும் காலத்​தின் நெருக்​கத்​தை​யும் காதுகளின் வழியே கடத்​தி​யுள்​ளார்.

ரே மில்​லண்ட்: தன் திறமையே தனக்கு வினை​யாக மாறும் இடங்​களி​லும், கடி​காரத்​துக்குள் மாட்​டிக்​கொண்டு தவிக்​கும் காட்​சிகளி​லும் பயத்​தை​யும் பதற்​றத்​தை​யும் தன் உடல்​மொழி​யால் மிக நேர்த்​தி​யாக வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

சார்​லஸ் லாட்​டன்: அதீத பொறாமை​யால் செய்​யும் நள்​ளிர​வுக் கொலை, துரோகம், இறு​தி​யாக லிஃப்ட் ஷாப்ட்​டுக்​குள் மரண பயத்​துடன் கதறும் கிளை​மாக்ஸ் வரை அக்​மார்க் சர்​வா​தி​கார கார்ப்​பரேட் வில்​ல​னாக மிரட்​டி​யுள்​ளார்.

ஜார்ஜ் மேக்​ரெடி மற்​றும் மவுரீன் ஓ’சுல்​லிவன்: முதலா​ளி​யின் துரோகத்​தைக் கண்டு உண்​மையை வெறி​கொண்டு உடைக்​கும் ஹேக​னாக, ஜார்ஜ் மேக்​ரெடி​யும், கணவனின் நிலை​யைப் புரிந்து கொண்டு நடக்​கும் ஜார்​ஜெட்​டாக மவுரீன் ஓ’சுல்​லிவனும் உணர்​வுப்​பூர்​வ​மான நடிப்பை வழங்​கி​யுள்​ளனர்.

“கார்ப்​பரேட் அதி​காரம் உண்​மையை வளைத்​துக் காட்​டலாம்; ஆனால் அதை வெல்ல முடி​யாது” என்ற கருத்தை வலிமை​யாகப் பதிவு செய்​யும் ‘த பிக் கிளாக்’ ஒரு திரைக்​கதை பார்​வை​யாளரை முதல் காட்​சி​யில் இருந்து கடைசி வரை எப்​படி இழுத்​துச் செல்ல வேண்​டும்

என்​ப​தற்​கான ஆகச்​சிறந்​த பாடம்​ இது. திரைக்​கதை ஆர்​வலர்​கள்​ தவற​விடக்​ கூடாத படைப்​பு.

(செவ்​வாய்​ தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT