திறமையான கூட்டாளிகளுடன் திட்டமிட்டு நடத்தப்படும் நகைக்கடைக் கொள்ளை, எதிர்பாராத விபத்தால் தோல்விக்கும் துரோகத்துக்கும் வழிவகுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைப்பது தான் ‘தி ஆஸ்ஃபால்ட் ஜங்கிள் (THE ASPHALT JUNGLE-1950)’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
அமெரிக்காவின் ஒரு பெரிய நகரத்தின் சாலைகளில் ரோந்து கார்கள், முந்தைய தினம் நடந்த குற்றங்களை ரேடியோவில் அறிவித்தபடி அலைபாய்கின்றன. அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்களோடு குற்றத்தில் தொடர்புடைய டிக்ஸ் ஹேண்ட்லியும் இடம்பெற, அவனை யாரும் அடையாளம் காட்டவில்லை. காவல்துறை ஆணையர் ஹார்டி, ஊழல் பேர்வழி லெப்டினன்ட் டிட்ரிச்சைக் கண்டித்து டிக்ஸைத் தேடச் சொல்கிறார்.
அந்த நேரத்தில் குற்றவுலகில் ‘டாக்’ என்று அழைக்கப்படும் எர்வின் ரீடென்ஷ்னைடர் சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறான். வந்ததும், நகைக்கடைக் கொள்ளைக்கான திட்டத்தைத் தீட்டுகிறான். கொள்ளைத் திட்டத்துக்கு 50,000 டாலர் முதலீடு தேவைப்படுவதால் சூதாட்டத் தரகர் காபியைச் சந்திக்கிறான். அவர் வழக்கறிஞர் அலோன்ஸோ எம்மெரிச்சிடம் டாக்கை அனுப்புகிறான். காதலியால் பணத்தை இழந்து கடனில் தவிக்கும் எம்மெரிச், பண உதவி செய்யவும் நகைகளை விற்றுத் தரவும் சம்மதிக்கிறார். ஆனால், கொள்ளைக்குப் பின் டாக்கை ஏமாற்றி நகைகளை அபகரித்துக்கொள்ள நண்பன் பாப், பிரானத்துடன் திட்டம் தீட்டுகிறார்.
டாக், கொள்ளைக்கான கூட்டாளிகளைத் தேர்வு செய்கிறான். தப்பிச் செல்ல உதவும் வாகன ஓட்டுநராக கஸ் மினிஸ்ஸியும், பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறப்பதில் நிபுணனாக லூயிஸும், துணிச்சலான அடியாளாக டிக்ஸ் ஹேண்ட்லியும் அவனுடன் இணைகிறார்கள்.
கொள்ளையடிக்கும் இரவில் கஸ் வாகனத்துடன் காத்திருக்க, லூயிஸ் பாதாளச் சாக்கடைக் குழாய் வழியே நுழைந்து நகைக்கடைச் சுவரை உடைக்கிறான். பின்பக்கக் கதவைத் திறந்து டாக், டிக்ஸ் இருவரையும் உள்ளே அனுமதிக்கிறான். லூயிஸ் வெடிவைத்து பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறக்கும்போது ஏற்படும் அதிர்வால் அலாரம் ஒலிக்கிறது; நகைகளைப் பையில் அள்ளிப் போடுகிறான், டாக். அங்கு வரும் காவலாளிக்கும் டிக்ஸுக்கும் இடையே நடக்கும் மோதலில் துப்பாக்கி வெடித்ததில் லூயிஸின் வயிற்றில் குண்டு பாய்கிறது.
காயமடைந்த லூயிஸை, கஸ் அவனது வீட்டுக்குக் கொண்டு செல்ல, மருத்துவர் வரத் தாமதமானதால் மனைவியின் கண்முன்னேயே லூயிஸ் உயிரிழக்கிறான். இதற்கிடையே, கொள்ளையடித்த நகைகளுடன் எம்மெரிச்சைச் சந்திக்கச் செல்லும் டாக் மற்றும் டிக்ஸை, பிரானம் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறான். டிக்ஸும் துப்பாக்கியைக் காட்ட, இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையில் பிரானம் கொல்லப்படுகிறான். டிக்ஸ் காயமடைகிறான்.
எம்மெரிச், பிரானத்தின் உடலை ஆற்றில் வீசிவிடுகிறார். அவர் உடலை மீட்கும்போது கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் எம்மெரிச்சைத் தேடி வருகிறார்கள். சம்பவ தினத்தன்று காதலி ஏஞ்சலாவுடன் இருந்ததாகப் பொய் சொல்லுமாறு அவளிடம் எம்மெரிச் கெஞ்சுகிறார். ஆனால், போலீஸாரின் மிரட்டலில் ஏஞ்சலா உண்மையைக் கூறிவிடுகிறாள். தனது போலிமுகம் வெளிப்பட்ட அதிர்ச்சியில் எம்மெரிச் தற்கொலை செய்துகொள்கிறார்.
பொதுமக்கள் மத்தியில் டாக்கின் புகைப்படம் பரவுகிறது. காவல்துறையிடமிருந்து தப்பிக்க நகரத்தை விட்டு வெளியேறும் டாக், வழியில் ஓர் உணவகத்தில் நடனமாடும் இளம்பெண்ணை ரசிப்பதற்காகப் பயணத்தைத் தாமதப்படுத்துகிறான். தேடிவரும் காவல்துறையினர் அவனைக் கைது செய்கிறார்கள்.
கொள்ளைக் குழுவில் மூவர் இறந்ததையும், மூவர் சிறையில் இருப்பதையும், ஒருவன் தப்பியோடியதையும், டிட்ரிச் கைது செய்யப்பட்டதையும் பத்திரிகையாளர்களிடம் காவல் ஆணையர் ஹார்டி அறிவிக்கிறார்.
படுகாயமடைந்த டிக்ஸ் தன்னை நேசிக்கும் டாலுடன் காரில் தப்பித்து, தனது நீண்ட காலக் கனவான கென்டக்கி குடும்பப் பண்ணையைச் சென்றடைகிறான். அங்கு குதிரைகள் மேயும் இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழக்கிறான்.
தேடப்படும் குற்றவாளியாக அறிமுகமாகும் டிக்ஸின் கதை, அவனது கனவுப் பண்ணையின் புல்வெளியிலேயே முடிவதோடு படம் நிறைவடைகிறது.
டபிள்யூ.ஆர். பர்னெட்டின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, பென் மேடோவுடன் இணைந்து குற்றவாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், கொள்ளைத் திட்டத்தில் அவர்கள் வகுக்கும் வியூகங்களையும் மையப்படுத்தி, ஒரு புளுபிரின்ட் போல் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜான் ஹூஸ்டன். எம்.ஜி.எம் தயாரித்த இந்தப் படம், பின்னால் வந்த பல கொள்ளைப் படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது.
ஒளிப்பதிவு (ஹெரால்ட் ரோஸன்): மொத்தப் படத்தையும் நேரில் பார்ப்பது போன்ற ஆவணப்படத் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். இறுதியில் டிக்ஸின் குடும்பப் பண்ணைக் காட்சியில் நகரத்தின் இருண்ட உலகத்துக்கும் கிராமப்புறத்தின் திறந்த வெளிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விஷுவலாக உணர்த்துகிறார்.
படத்தொகுப்பு (ஜார்ஜ் போம்லெர்): ஒரே நேரத்தில் பல இடங்களில் பல கதாபாத்திரங்களுக்கிடையே நடைபெறும் செயல்பாடுகளைக் குழப்பமின்றிக் கொண்டு சேர்த்ததில் இவரின் பணி கச்சிதம்.
இசை (மிக்லோஸ் ரோஸா): ஒவ்வொரு பதற்றமான காட்சியிலும் இசையால் பார்வையாளர்களைப் பதற்றமடையச் செய்யாமல், தேவையான இடங்களில் உணர்வுப்பூர்வமான பின்னணியை வழங்கியிருக்கிறார்.
டாக் (சாம் ஜாஃபி): கொள்ளையைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் தனது திறமையை நூறு சதவீதம் நம்பும் மூளைக்காரன். எத்தகைய பதற்றமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், கொஞ்சம்கூட டென்ஷன் ஆகாமல் நிதானமாகச் செயல்படுபவனைச் சிறு சபலமே வீழ்த்தி விடுகிறது.
எம்மெரிச் (லூயிஸ் கால்ஹெர்ன்): திருடர்களிடமிருந்தே திருட நினைக்கும் தந்திரமும், இளம்பெண் மீதான சபலமும் கொண்ட வழக்கறிஞர். இறுதியில் தோல்வியை ஏற்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் இவரின் நடிப்பு தனித்துவமானது.
டிக்ஸ் (ஸ்டெர்லிங் ஹெய்டன்): அடியாளாக வந்தாலும் குதிரைப் பண்ணைக் கனவுடன் கொள்ளையில் ஈடுபட்டு மரிக்கும் பரிதாபமான கதாபாத்திரம்.
ஏஞ்சலா (மர்லின் மன்றோ): வயதான வழக்கறிஞரைச் சபலப்படுத்தும் இளம் பெண்ணாகக் கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரத்திலும் முத்திரை பதித்து, பின்னாளில் பலரின் தூக்கம் கெடுத்த கனவுக் கன்னி.
ஹார்டி (ஜான் மெக்இன்டயர்): காவல்துறையின் செயல்பாடுகளைக் கம்பீரமாகக் கையாளும் காவல் ஆணையர்.
கஸ் (ஜேம்ஸ் விட்மோர்) & லூயிஸ் (அந்தோணி கருஸோ): கூன் விழுந்த முதுகுடன், நண்பர்கள் மீது ஆழமான விசுவாசம் கொண்ட கஸ்; பேராசையின்றி தன் மனைவி, குழந்தையின் நலனுக்காக மட்டுமே பெட்டகங்களை உடைக்கும் குடும்பஸ்தனாக வரும் லூயிஸ் என இருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
காவல் ஆணையர் ஹார்டி பத்திரிகையாளர் சந்திப்பில், ‘மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்; கொள்ளையடிக்கப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள்; பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். வருடம் முழுவதும், தினமும் 24 மணி நேரமும் இவை தொடர்கின்றன. நவீன உலகின் ஒவ்வொரு நகரத்திலும் இதுதான் நிலை’ என்று கூறுகிறார். எழுபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்ட இவ்வசனம், இன்றைய சமூகச் சூழலுக்கும் பொருந்துவது மனதை வலிக்கச் செய்கிறது.
ஜான் ஹூஸ்டன், கொள்ளைத் திட்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்திவிட்டு, எதிர்பாராத சிறு விபத்தால் ஒவ்வொருவருக்கும் நேரும் முடிவுகளைச் சித்தரித்த விதம் கொள்ளையர்கள் மீதும் இரக்கம் கொள்ள வைக்கிறது. இயக்கம், திரைக்கதை, ஒளிப்பதிவு, சாம் ஜாஃபியின் துணை நடிப்பு என நான்கு ஆஸ்கர் பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.
பேராசையும் துரோகமும் கொண்ட மனிதர்கள் சக மனிதர்களை வேட்டையாடித் திரியும் இந்தத் தார் சாலைக் காட்டுக்குள், எந்த ஆபத்துமின்றி ஒரு மாலைப்பொழுதில் உலா வரலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)