

வாரிசுரிமை மறுக்கப்பட்ட தாயின் சாபத்தை நிறைவேற்ற, உயர்குடிக் குடும்பத்து வாரிசுகளைக் கொன்று, பிரபு பட்டத்தை அடையும் இளைஞன், இறுதியில் தான் எழுதிய கொலைக் குறிப்புகளால் மாட்டிக்கொள்வதே ‘கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கோரோனெட்ஸ் (KIND HEARTS AND CORONETS -1949)’ படத்தின் ஒருவரிக் கதை.
சிறைச்சாலையின் வெளிப்புறக் கதவில் லூயிஸ் மஸ்ஸினி என்பவர், நாளை காலை 8 மணிக்கு தூக்கிலிடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கிறது. சிறைக்குள், லூயிஸ் மஸ்ஸினி தனது வாழ்க்கைக் குறிப்புகளை எழுத ஆரம்பிக்கிறான். டி’அஸ்காய்ன் என்ற பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த அவனது அம்மா, இத்தாலிய பாடகனைக் காதலித்ததால் குடும்பத்தாரால் ஒதுக்கப்படுகிறாள்.
2-ம் சார்லஸ் மன்னர் வழங்கிய சிறப்பு உரிமையின்படி, அவளது மகனுக்கு வாரிசுரிமை இருந்தும் குடும்பத்தினர் மதிக்கவில்லை. குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவளது கடைசி ஆசையும் நிறைவேறாததால் வாரிசுகளைக் கொன்று பிரபுப் பட்டத்தை அடைய சபதம் எடுக்கிறான் லூயிஸ்.
சிறுவயதுத் தோழி சிபெல்லா, லூயிஸ் ஏழை என்பதால் அவனை நிராகரித்துவிட்டு பணக்காரனான லியோனலைத் திருமணம் செய்கிறாள். தான் விரும்பிய அனைத்துக்கும் அந்தப் பிரபுக்கள் குடும்பமே தடையாக இருப்பதாக நினைக்கும் லூயிஸ், தனது தாயின் ஓவியத்தின் பின்புறத்தில் ‘ஃபேமிலி ட்ரீ’ உருவாக்கி, வாரிசுகளுக்குக் குறி வைக்கிறான்.
முதலில் வங்கியாளர் மகனின் படகை அவிழ்த்துவிட்டு, அவனது மரணத்துக்குக் காரணமாகிறான். புகைப்படக் கலைஞரான ஹென்றியை தீ விபத்து ஏற்படுத்திக் கொல்கிறான். அவன், மனைவி எடித்தைக் காதலித்து குடும்பத்துக்குள் நுழைகிறான். மதகுருவுக்கு விஷம் கலந்த மதுவைக் கொடுத்தும் லேடி அகதாவை பலூனில் பறக்கும்போது அம்பெய்தியும் கடற்படை அட்மிரலை கப்பல் விபத்திலும் ராணுவ ஜெனரலுக்கு வெடிகுண்டு அனுப்பியும் கொல்கிறான்.
இதற்கிடையே, கஷ்டத்தில் இருக்கும் லியோனல் உதவி கேட்க, லூயிஸ் மறுத்து அவனுடன் சண்டையிடுகிறான். திருமண வாழ்வில் ஏமாற்றமடைந்த சிபெல்லா மீண்டும் லூயிஸை அணுக, அவனோ எடித்தைத் திருமணம் செய்யப்போவதாகக் கூறுகிறான்.
இறுதியாக பொறியில் சிக்கிய 8-வது வாரிசை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் லூயிஸ், டியூக் பட்டத்தைப் பெற்று பதவியேற்கிறான். பதவியேற்பு விழாவுக்கு ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரும் வந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். தான் செய்த கொலைகளுக்கு துப்பு எதையும் விட்டுவைக்கவில்லை என்று நிம்மதியாக இருக்கும் போது, லியோனலின் மரணத்துக்கு அவன் தான் காரணம் என்று போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். செய்யாத கொலைக்காக லூயிஸுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறைக்கு வரும் சிபெல்லா, லியோனலின் தற்கொலைக் கடிதம் தன்னிடம் இருப்பதாகக் கூறி, எடித்தைக் கைவிட்டு தன்னைத் திருமணம் செய்தால் தப்பிக்கலாம் என்று பேரம் பேசுகிறாள். லூயிஸ் சம்மதிக்கிறான். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் வரை விடுதலை அறிவிப்பு வராததால், விரக்தியில், தான் செய்த கொலைகளை விரிவாக எழுதுகிறான். தூக்கிலிடப்படுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் கடிதம் கிடைத்து விடுதலையாகிறான்.
வெளியே சிபெல்லாவும் எடித்தும் காத்திருக்கின்றனர். அப்போதுதான் கொலைக் குறிப்புகளைச் சிறையிலேயே விட்டுவந்தது லூயிஸின் நினைவுக்கு வருகிறது. அந்தக் குறிப்புகளை நோக்கிக் கேமரா நகர, லூயிஸ் மாட்டிக் கொள்வானோ என்ற சஸ்பென்ஸுடன் முடிகிறது இந்தப் பிரிட்டிஷ் திரைப்படம். ஆனால் அமெரிக்கப் பதிப்பில், ‘ஹேய்ஸ் கோட்’ தணிக்கை விதியின் ‘குற்றம் தண்டனையின்றித் தப்பக்கூடாது’ என்ற கொள்கையின்படி, சிறைக் காவலர்கள் கொலைக் குறிப்புகளைக் கண்டுபிடிக்கும் கூடுதல் காட்சியுடன் படம் முடிகிறது.
ராய் ஹார்னிமேன் எழுதிய ‘இஸ்ரேல் ரேங்க்’ நாவலைத் தழுவி, ஜான் டைட்டனுடன் இணைந்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ராபர்ட் ஹேமர். 8 வாரிசுகளின் மரணங்களுக்கு வழிவகுக்கும் ஒருவனின் கதையை, பழிவாங்கும் கதைகளுக்கே உரிய ரத்தக் களரியின்றி, உயர்குடிக்கே உரிய பிரிட்டிஷ் நையாண்டியுடன் ஒரு கொலைக் கதையைக் கலைநயமிக்க படைப்பாக உருமாற்றியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் – டக்ளஸ் ஸ்லோகோம்பே: 20-ம் நூற்றாண்டின் தொடக்ககால எட்வர்டியன் இங்கிலாந்தின் சூழலையும் அதன் பிரம்மாண்டத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகிறார். நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில், அலெக் கின்னஸ் ஏற்ற ஆறு கதாபாத்திரங்கள் ஒரே ஃபிரேமில் தோன்றும் புகழ்பெற்ற காட்சியைப் படமாக்கிய விதம் அசாத்தியமான தொழில்நுட்ப உழைப்பு!
கேமராவை ஒரே இடத்தில் நிலையாக நிறுத்தி, ஒளி புகாத மறைப்புகளைப் பயன்படுத்தி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியாகப் படமாக்கி, ஒரே ஃபிலிமில் பலமுறை பதிவுசெய்து அக் காட்சியை உருவாக்கியுள்ளனர். பின்னாளில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்’ திரைப்பட வரிசையின் முதல் மூன்று படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தவர் இவர்; மூன்று முறை ஆஸ்கர் பரிந்துரை பெற்றவர்.
படத்தொகுப்பாளர் – பீட்டர் டேனர்: அடுத்தடுத்து கொலைகள் நடந்தாலும், உறுத்தலான வெட்டுகள் இல்லாதபடி காட்சிகள் மென்மையாக நகர்கின்றன. படத்தைக் கவிதை போல் கோர்த்ததில் இவரது உழைப்பும் அளப்பரியது. கூடவே, படத்தோடு பயணிக்கும் எர்னஸ்ட் இர்விங்கின் ‘தி பில்ஹார்மோனியா ஆர்கெஸ்ட்ரா’இசை, கதையோட்டத்துக்கு சிறப்பைச் சேர்க்கிறது.
டென்னிஸ் பிரைஸ் – லூயிஸ் மஸ்ஸினி: சாந்தமான முகத்துடன் அத்தனை கொலைகளைச் செய்தாலும், ‘நாமும் சேர்ந்து அவருக்கு உதவலாமே’ என எண்ண வைக்கும் அளவுக்கு அவரது பாந்தமான நடிப்பு நம்மைப் பரவசப்பட வைக்கிறது. அலெக் கின்னஸ்: டி’அஸ்காய்ன் குடும்பத்தின் 8 உறுப்பினர்களாக, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான உடல்மொழியையும் குணாதிசயத்தையும் அளித்து அற்புதமாக நடித்துள்ளார்.
ஜோன் கிரீன்வுட் – சிபெல்லா: பணத்துக்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வஞ்சகப் பெண்ணாகச் சிறப்பாக நடித்துள்ளார்.
வலெரி ஹாப்சன் – எடித்: இயல்பான, மென்மையான நடிப்பால் வெகுவாகக் கவர்கிறார். ஆட்ரே ஃபைல்ட்ஸ் – மாமா: காதல் திருமணத்தால் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு, மகனுக்குள் பழிவாங்கும் உணர்வை விதைத்துச் செல்லும் பரிதாபமான அம்மாவாக கவர்கிறார்.
நாயகனின் ‘வாய்ஸ் ஓவரி’ல் கதை விவரிக்கப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. கொடூரமான கொலை நடந்து கொண்டிருக்கும்போது பின்னணியில் நாயகனின் குரல் மிக அமைதியாகவும் கண்ணியமாகவும் ஒலிக்கும். காட்சியின் குரூரத்துக்கும் குரலின் நளினத்துக்கும் இடையிலான இந்த முரண்பாடுதான் படத்தின் டார்க் காமெடியை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது.
வித்தியாசமான திரைக்கதை உத்திகளைக் கற்றுக்கொள்ள விரும்பும் திரை ஆர்வலர்கள், இந்தப் படத்துக்காக ஒரு மாலைப்பொழுதை ஒதுக்கலாம்!
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)