ஹாலிவுட்

‘சன்செட் பவுலேவார்டு’ - 1950: ஹாலிவுட்​ தன் ஆன்மாவை தரிசித்த தருணம் | ஹாலிவுட் மேட்னி 23

ராம்குமார் சுப்பாராமன்

காதலிக்க மறுத்​தவனை தற்​கொலை முயற்​சி​யால் காதலித்​தவள், வில​கிச் செல்ல முயற்​சித்​தவனை உலகை விட்டு அனுப்​புவது ‘சன்செட் பவுலே​வார்​டு’ (SUNSET BOULEVARD -1950) திரைப்​படத்​தின் ஒரு​வரிக்​கதை. சன்செட் பவுலே​வார்டு சாலை​யில் உள்ள ஒரு மாளி​கை​யின் நீச்​சல் குளத்​தில், திரைக்​கதை எழுத்​தாளர் ஜோ கில்​லிஸின் சடலம் மிதக்​கிறது.

ஒரு சடலமே தனது மரணத்​துக்கு வழி​வகுத்த நிகழ்​வு​களை விவரிக்​கும் ‘வாய்​ஸ்​-ஓவர்’ பாணி​யில் படம் தொடங்​கு​கிறது. 3 மாதத் தவணை கட்​ட​வில்லை என்று ஜோவின் காரை ஜப்தி செய்ய வரு​கிறார்​கள். கடன்​காரர்​களிட​மிருந்து தப்​பிக்க முயலும் ஜோ, தற்​செய​லாக மவுனப்பட காலத்து நட்​சத்​திரம் நார்மா டெஸ்​மாண்​டின் மாளி​கைக்​குள் நுழைகிறான்.

முதலில் அவனை, தன் குரங்​குக்​குச் சவப்​பெட்டி கொண்டு வந்​தவன் என நினைக்​கும் நார்​மா, பிறகு அவன் ஓர் எழுத்​தாளன் என அறிந்​து, தான் எழு​திய ‘சலோமி’ திரைக்​கதையைச் செப்​பனிட அவனைத் தன் வீட்​டிலேயே தங்க வைக்​கிறாள்.

அவனுக்கு புது உடுப்​பு​கள், விலை உயர்ந்த பரிசுகள் வாங்​கிக் கொடுத்து மகிழ்​கிறாள். புத்​தாண்டு விருந்​தின்​போது நார்மா தனது காதலை வெளிப்​படுத்த, ஜோ ஏற்க மறுக்​கிறான். ஆத்​திரமடைந்த நார்மா அவனை அறைந்​து​விட்​டுத் தனிமை​யில் முடங்​கு​கிறாள்.

          

அங்​கிருந்து வெளி​யேறித் தனது நண்​பன் ஆர்​டியைச் சந்​திக்​கும் ஜோ, முன்பு தன் கதையை விமர்​சித்த பெட்டி என்ற இளம்​பெண்ணை அங்கு சந்​திக்​கிறான். பெட்டி அவனது பழைய திரைக்​கதை​யில் உள்ள சில காட்​சிகளைப் பாராட்​டு​கிறாள். ஜோ தனது பொருட்​களை எடுப்​ப​தற்​காக அழைக்​கும்​போது, நார்மா தற்​கொலைக்கு முயன்ற அதிர்ச்​சித் தகவலை மேக்ஸ் கூறுகிறான்.

தார்​மீகக் குற்ற உணர்ச்​சி​யால் மீண்​டும் மாளி​கைக்கே திரும்​பும் ஜோ, நார்​மாவுடன் நெருக்​க​மான உறவில் பிணைக்​கப்​படு​கிறான். நார்​மா, தான் திருத்​திய ‘சலோமி’ திரைக்​கதையை பாராமவுண்ட் ஸ்டூடியோ​விலுள்ள புகழ்​பெற்ற இயக்​குநர் சிசில் பி.டெமிலுக்கு அனுப்பி வைக்​கிறாள். ஸ்டூடியோ​விலிருந்து அழைப்​பு​கள் வரத் தொடங்​கு​கின்​றன. நார்மா அவரைச் சந்​திக்​கச் செல்​கிறாள். ஆனால் டெமிலின் உதவி​யாளர்​தான் அவளது பழைய காரை படப்​பிடிப்​புக்கு கேட்​ப​தற்​காக அழைத்​தார் என்​பதை அறிந்து அவளை சமாளித்து அனுப்பி விடு​கிறார்.

டெமிலைச் சந்​தித்த பிறகு யதார்த்​தம் புரி​யாமல், மீண்​டும் திரை​யில் தோன்​றத் தீவிர அழகு சிகிச்​சைகளில் ஈடு​படு​கிறாள் நார்​மா. ஜோ, இரவு​களில் ரகசி​ய​மாக பெட்​டி-யைச் சந்​தித்​துத் திரைக்​கதை விவாதங்​களில் மூழ்​கு​கிறான். இதை அறி​யும் நார்​மா, பெட்​டி​யிடம் ஜோ பற்றி அவதூறு பரப்ப முயல்​கிறாள்.

ஆத்​திரமடைந்த ஜோ, பெட்​டியை நேரில் வரவழைத்​து, தான் ஒரு சுயநல​வாதி என நடித்து அவளைப் பிரித்து அனுப்​பி​விடு​கிறான். பின் தானும் அந்த மாளி​கையை விட்டு வெளி​யேற முடி​வெடுத்து நார்​மா​விடம் “உன்னை உலகம் மறந்​து​விட்​டது, உனக்கு வரும் கடிதங்​கள் அனைத்​தும் பொய்” என்ற கசப்​பான உண்​மை​களைப் போட்​டுடைக்க, அதைத் தாங்க முடி​யாத நார்​மா, ஜோவைத் துப்​பாக்​கி​யால் சுட, அவன் பிண​மாக நீச்​சல் குளத்​தில் விழுகிறான்.

போலீ​ஸாரும் பத்​திரி​கை​யாளர்​களும் அந்த மாளி​கை​யைச் சூழ்​கிறார்​கள். நார்மா முழு​மை​யாகத் தன் சுயநினைவை இழந்​து, தான் ஒரு திரைப்​படப் படப்​பிடிப்​பில் இருப்​ப​தாக நம்​பு​கிறாள். அதை உணர்ந்த மேக்ஸ் ‘ஆக் ஷன்’ சொல்ல, அந்த மாளி​கை​யின் படிக்​கட்​டு​களில் ஒரு பேரரசி​யைப் போல இறங்கி வரு​கிறாள்.

செய்தி கேம​ராக்​களை நோக்​கி, “மிஸ்​டர் டெமில், நான்எனது க்ளோஸ்​-அப் காட்​சிக்​குத்தயார்” என்று அவள் சொல்​லும் அந்த ஒரு வசனத்​துடன் படம் முடிவடைகிறது.

‘சன்​செட் பவுலே​வார்​டு’ வெறும் புனை​வல்ல; ஹாலிவுட் தனது கலைஞர்​களை எப்​படித் தூக்​கியெறிகிறது என்​ப​தற்​கான சாட்​சி​யாக இப்​படத்​தைப் பில்லி வைல்​டர் உரு​வாக்​கி​யிருக்​கிறார்.

இதை நிரூபிக்க நிஜ​மான திரை ஆளுமைகளை அவர்​கள் பெயரிலேயே நடிக்க வைத்​தார். நிஜ வாழ்க்​கை​யிலும் ஸ்வான்​சனை (நார்​மா) ஒரு ‘சூப்​பர் ஸ்டா​ராக’ மாற்​றிய இயக்​குநர் சிசில் பி. டெமில், படத்​தில் தனது படப்​பிடிப்​புத் தளத்​திலேயே தோன்​றி, பழைய நாயகிக்​குத் தன்​னிடம் இனி இடமில்லை என்​பதை மவுனத்​தால் உணர்த்துகிறார்.

மவுனப் பட மேதை பஸ்​டர் கீட்​டன் வார்த்​தைகளின்​றிச் சீட்டு விளை​யாடும் ‘மெழுகுச் சிலை’களில் ஒரு​வ​ராகத் தோன்றி ஒரு யுகத்​தின் முடிவை உணர்த்​துகிறார். நார்​மா​வின் ஓட்​டுந​ராக வரும் எரிக் வான் ஸ்ட்​ரோஹெய்ம், நிஜத்​தி​லும் ஸ்வான்​சனை இயக்​கிய மாபெரும் இயக்​குநர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பத்​திரி​கை​யாளர் ஹெடா ஹாப்​பரும் நிஜப் பத்​திரி​கை​யாள​ராகவே நடித்​திருக்​கிறார். நார்மா டெஸ்​மாண்​டாக நடித்த குளோரியா ஸ்வான்​சன், மவுனப் படக் காலத்​தின் நாடகத்​தன்​மை​யை​யும் நவீன உளவியல் நடிப்​பை​யும் தன் கண்​களின் தீவிரத்​தால் இணைத்து நடிப்​பில் புது பரி​மாணம் காட்​டி​யிருக்​கிறார். வறுமை​யில் வாடும் எழுத்​தாளரின் (ஜோ கில்​லிஸ்) விரக்​தி​யான மனநிலையை ‘வில்​லி​யம் ஹோல்​டன்’ மிக இயல்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

ஜான் எஃப். சீட்​ஸின் ஒளிப்​ப​திவு, ‘ஃபிலிம் நாய்ர்’ பாணி​யின் உச்​சத்​தைத் தொடு​கிறது. படத்​தில் வரும் ஆழமான நிழல்​களும், குறைந்த ஒளி​யும் நார்​மா​வின் சிதைந்த மனநிலை​யின் காட்​சிக் குறி​யீடு​களாகின்​றன. குறிப்​பாக, நீச்​சல் குளத்​தின் அடியி​லிருந்து எடுக்​கப்​பட்ட அந்​தத் தொடக்​கக் காட்சி இன்​றும் வியக்க வைக்​கிறது.

எடிட்​டர் ‘ஆர்​தர் ஷ்மிட்’ நகர வாழ்க்​கை​யின் வேகத்தை அதிவேக ரிதமிலும், நார்​மா​வின் மாளி​கைக்​குள் நில​வும் தேக்​க​மான சோகத்தை நீள​மான காட்​சிகளாக​வும் மாற்​றி, பார்வையாளர்​களுக்கு உளவியல் அழுத்​தத்​தைத் தரு​கிறார்.

ஃபி​ரான்ஸ் வாக்​ஸ்​மேனின் இசை​யும், எடித் ஹெட்​டின் ஆடை வடிவ​மைப்​பும் படத்​தின் ஆன்​மாவை மேலும் வலுப்​படுத்​துகின்​றன. நார்​மாவுக்​கான நாடகமய​மான இசை​யும், ஜோவுக்​கான நவீன பின்​னணி இசை​யும் கதா​பாத்​திரங்​களின் முரண்​பாட்டை வெளிப்​படுத்​துகின்​றன. நார்​மா​வின் ஆடைகளோ, அவளது கடந்த காலக் கம்​பீரத்​தை​யும் தற்​போதைய மாயையை​யும் ஒருசேரக் காட்​சிப்​படுத்​துகின்​றன.

‘சன்​செட் பவுலே​வார்​டு’ ஒரு கதையை எப்​படி எழுத வேண்​டும் என்​ப​தற்​கான பாடப்​புத்​தகம் மட்​டுமல்ல; உலக சினிமா வரலாற்​றின் மிகச்​சிறந்த நடிப்​புத் திறமைக்​கான சாட்​சி​யும் கூட.

இயக்​குநர் பில்லி வைல்​டர், சார்​லஸ் பிராக்​கெட் மற்​றும் மார்​ஷ்மேன் ஜூனியருடன் இணைந்து உரு​வாக்​கிய திரைக்​கதை, உலக சினி​மா​வின் மிகச்​சிறந்த படைப்​பு​களில் ஒன்​றாகக் கருதப்​படு​கிறது. படத்​தின் தொடக்​கத்​திலேயே நாயக​னின் மரணத்​தைக் காட்​டி​விட்​டு, அந்த முடிவு எப்​படி நிகழ்ந்​தது என்​பதை நோக்​கிப் பின்​னோக்கி நகரும் இந்த முடி​வில் இருந்து தொடங்​கும் உத்தி (Ending-first narrative) படத்​துக்கு தனித்​து​வ​மான அடை​யாளம் தரு​கிறது.

இது ‘நாய்ர்’, காமெடி, துன்​பியல், நையாண்டி மற்​றும் உளவியல் நாடகம் என அனைத்​தும் கலந்த ஓர் அபூர்​வக் கலவை. ஹாலிவுட் தனது ஆன்​மாவை தானே கண்​ணாடி​யில் தரிசித்த தருணம். 11 ஆஸ்​கர் விருதுகளுக்​குப்​ பரிந்​துரைக்​கப்​பட்​டு மூன்​றைக்​ கைப்​பற்​றிய இத்​ திரைக்​கா​வி​யத்​தை ஒவ்​வொரு சினி​மா ஆர்​வலரும்​ காண வேண்​டியது அவசியம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT