உலகம் முழுவதும் ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு வரவேற்பு உள்ளது. இப்படத்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8 ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் டாம் ஹாலண்ட், ஸ்பைடர் மேனாக நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்’, ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் 4-வதாக உருவாகியுள்ள படத்துக்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்குகிறார். இதில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
2026-ம் ஆண்டு ஜூலை 31-ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
படத்தில் பணியாற்றிய அனைவரையும் பாராட்டியுள்ள அவர், டாம் ஹாலண்டின் உழைப்பையும் பாராட்டியுள்ளார். “உங்கள் அற்புதமான நடிப்பை பெரிய திரையில் உலகம் காண்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அயராத உழைப்புக்காகவும், சிறந்த நடிப்பு மற்றும் நட்புக்காகவும் நன்றி” என்று கூறியுள்ளார்.