ஹாலிவுட்

ஸாரி, ராங் நம்​பர் (1948): மரண அழைப்பு | ஹாலிவுட் மேட்னி 46

ராம்குமார் சுப்பாராமன்

தவறான தொலைபேசி இணைப்​பில் கேட்​கும் ஒரு கொலைத் திட்​டத்​தைத் தடுக்க முயற்​சிக்​கும் பெண், அந்​தக் கொலை​யின் இலக்​கு, தான்​தான் என்​பதை உணர்ந்து தப்​பிக்​கப் போராடு​வதே ‘ஸாரி, ராங் நம்​பர்’ (SORRY, WRONG NUMBER-1948) படத்​தின் ஒரு​வரி கதை.

இரவு நேரம். காட்​டரல் ஃபார்​மாசூட்​டிகல்ஸ் நிறுவன துணைத் தலை​வர் ஹென்றி ஸ்டீவன்​சனின் அலு​வலக அறைக்​குள் டெலிஃ​போன் ரிசீவர் ஒன்று கவிழ்த்து வைக்​கப்​பட்​டிருக்​கிறது. அங்​கிருந்து காட்சி பின்​னோக்கி நகர, அந்த மருந்து கம்​பெனி அதிபர் ஜே.பி.​காட்​டரலின் மகளான லியோ​னா, படுக்​கையறை​யில் இருந்​த​படி வீடு திரும்​பாத கணவன் ஹென்​றியைத் தொடர்​பு​கொள்ள டயல் செய்​கிறாள்.

அப்​போது எதிர்​பா​ராத​வித​மாகத் தொலைபேசி இணைப்​பில் ஒரு குறுக்கு உரை​யாடல் (Cross-talk) ஒலிக்​கிறது. சரி​யாக இரவு 11:15 மணிக்​கு, வீட்​டின் அருகே உள்ள பாலத்​தில் ரயில் கடக்​கும் இரைச்​சலைப் பயன்​படுத்​தி, வீட்​டில் தனி​யாக இருக்​கும் பெண்​ணைக் கத்​தி​யால் குத்​திக் கொன்​று​விட்டு நகைகளைத் திருடிச் செல்ல வேண்​டும் என்று ‘ஜார்​ஜ்’ ன்ற நபருக்கு ஒரு மர்​மக் குரல் கட்​டளை​யிடு​கிறது. பதறும் லியோ​னா, ஆபரேட்​டரை​யும் காவல் நிலை​யத்​தை​யும் அழைக்​கிறாள். ஆனால், அதி​காரி டஃபி அதை வானொலி நாடக​மாக இருக்​கலாம் என அலட்​சி​யப்படுத்​துகிறார்.

கணவனின் அலு​வல​கச் செய​லா​ளர் எலிசபெத்​துக்கு போன் செய்து விசா​ரிக்​கும்​போது, காலை​யில் ‘மிசஸ் பிரடெரிக் லார்ட்’ என்ற பெண் ஹென்​றியைச் சந்​திக்க வந்​த​தாகச் சொல்​கிறாள். அந்​தப் பெண் வேறு யாரு​மல்ல; ஹென்​றி​யின் பழைய காதலி​யான சாலி. பல ஆண்​டு​களுக்கு முன் சாலி​யுடன் நடன​மாடிய ஹென்​றியைப் பணபலத்​தா​லும் பிடி​வாதத்​தா​லும் கவர்ந்​திழுத்​துத் திரு​மணம் செய்​தவள் லியோ​னா.

இப்​போது சாலிக்கு போன் செய்​கிறாள் லியோ​னா. அவள், தன் கணவர் ஹென்​றி​யின் மீது சந்​தேகம் கொண்​டிருப்​பதை அறிந்து அதை எச்​சரிக்​கவே அவரைப் பார்க்​கச் சென்​ற​தாகச் சொல்​கிறாள். டுத்து வரும் ஒரு தந்​தி​யில், ஹென்றி போஸ்​டன் மருந்து மாநாட்​டுக்​குச் சென்​று​விட்​ட​தாக​வும் ஞாயிறு​தான் வரு​வ​தாக​வும் செய்தி அனுப்​பி​யிருக்​கிறான். தொடர் தொலைபேசி அழைப்​பு​களின் மூலம் நடந்த சம்​பவங்​களை யோசித்​துப் பார்க்​கும் லியோ​னா, பாலத்​தின் அருகே உள்ள தனித்த வீட்​டில் 11:15 மணிக்​குக் கொல்​லப்​படப்போகும் பெண்,​ தான் என்​பதை உணர்ந்து அதிர்ச்​சி​யடைகிறாள்.

மருத்​து​வர் பிலிப் அலெக்​சாண்​டரை போனில் அழைக்​கிறாள். அவர், லியோ​னா​வுக்கு இதயக் கோளாறில்​லை; இதை ஏற்​கெனவே ஹென்​றி​யிடம் தெரி​வித்​து​விட்​ட​தாக கூறுகிறார். இதனால் அதிர்ச்​சி​யடை​யும் லியோனா “பொய்​யர்​கள்” எனக் கதறி அழுகிறாள். ப்​போது வால்டோ எவான்ஸ் என்​பவன் போனில், லியோ​னா​விடம் உண்​மையை சொல்​கிறான். காட்​டரல் கம்​பெனி வேதி​யிய​லா​ள​ரான தனது பலவீனத்​தைப் பயன்​படுத்தி மடக்​கிய ஹென்​றி, மருந்​துகளைத் திருடி மாஃபியா தலை​வன் மொரானோ​விடம் விற்று வந்​திருக்​கிறான்.

பிறகு மொரானோவை ஏமாற்​றித் தனி​யாகத் தொழில் செய்​த​போது, அதைக் கண்​டறிந்த மொரானோ நஷ்ட ஈடாக, 2 லட்​சம் டாலர் கேட்டு ஹென்​றியை மிரட்​டி​னான். மனைவி இறந்​து​விடு​வாள், அவளது இன்​சூரன்ஸ் பணத்​தில் கடனை அடைத்​து​விடலாம் எனக் கணக்​குப் போட்ட ஹென்​றி, டாக்​டர் கூறிய உண்​மை​யால் லியோனா சாக மாட்​டாள் என்​பதை அறிந்து அவளைக் கொல்ல வாடகை ஆட்​களை ஏவி​னான். இப்​போது மொரானோ பிடிபட்​டு​விட்​ட​தால் அந்​தப் பணத்​துக்​குத் தேவை​யில்லை என்ற தகவலைச் சொல்​லி​விட்டு எவான்ஸ் போனை வைக்​கிறான். கணவனே தீட்​டிய கொலைத் திட்​டம் கண்​டு, லியோனா மரண பயத்​தில் உறை​கிறாள்.

நேரம் 11:10. வீட்​டின் கீழ்த்​தளத்​தில் யாரோ டெலிஃபோன் ரிசீவரைத் தூக்​கும் ‘கிளிக்’ ஒலி கேட்​கிறது; கொலை​யாளி உள்ளே நுழைந்​து​விட்​டான். அப்​போது ரயில் நிலை​யத்​திலிருந்து ஹென்​றி​யின் அவசர அழைப்பு வரு​கிறது. கொலை​யைத் தடுக்​கும் முனைப்​புடன் அவன், “லியோ​னா... இன்​னும் 3 நிமிடங்​கள்​தான் உள்​ளன. படுக்​கையை விட்டு எழுந்து ஜன்​னல் வழியே கத்​து!” எனக் கதறுகிறான்.

ஆனால், பயத்​தால் கால்​கள் மரத்​துப்​போன லியோ​னா​வால் எழ முடியவில்​லை. மாடிப்​படிகளில் காலடிச் சத்​தம் கேட்க, அறைக் கதவு திறந்து ஒரு கரிய நிழல் படுக்​கையை நோக்​கிப் படர்​கிறது. பாலத்​தின் மீது ரயில் இடி​முழக்​கத்​துடன் கடக்க, லியோ​னா​வின் மரண ஓலம் அந்த இரைச்​சலில் மூழ்​கிப் போகிறது.

பயத்​துடன் ஹென்றி மறு​படி டயல் பண்​ணுகிறான். கொலை​யாளி ரிசீவரை எடுத்து மிக அமை​தி​யான குரலில் பேசுகிறான்:

“Sorry, wrong number.” தான் எழு​திய 22 நிமிட வானொலி நாடகத்​தை, அதன் சுவாரசி​யம் குறை​யாமல் விறு​விறுப்பான திரைக்​கதை​யாக்கி உள்​ளார் எழுத்​தாளர் லூசில் ஃபிளெட்​சர். அந்​தக் கதையை ஒற்​றைப் படுக்​கையறையை மையக்​கள​மாகக் கொண்​டு, அடுக்​கடுக்​கான ‘நெஸ்​டட் ஃபிளாஷ்பேக்’ உத்​தி​யுடன் முழுப் படத்​தை​யும் திகில் அனுபவ​மாக மாற்​றி​யுள்​ளார் இயக்​குநர் அனடோல் லிட்​வாக்.

ஒளிப்​ப​திவு (சால் போலிட்​டோ): படுக்​கையறைக்​குள் அலை​பா​யும் கேம​ரா​வும், ஃபிலிம் நோயர் பாணி அடர்ந்த நிழல்​களும் தொடர் பதற்​றத்தை உரு​வாக்​கு​கின்​றன. இருண்ட நடை​பாதைகள், ஜன்​னல் திரைகள் வழியே வீட்​டின் பயங்​கரத் தனிமை​யை​யும் லியோ​னா​வின் தவிப்​பை​யும் நேர்த்​தி​யாகக் கடத்​தி​யுள்​ளார்.

படத்​தொகுப்பு (வாரன் லோ): தொலைபேசிக் குரலின் பின்​னணி​யில் ஃபிளாஷ்பேக்​கு​களை​யும் நிகழ்​காலத்​தை​யும் இணைத்​து, 11:15 மணி நெருங்க நெருங்​கக் காட்​சிகளின் வேகத்​தைக் கூட்​டிப் பதற்​றத்தை உச்​சக்​கட்​டத்​துக்​குக் கொண்டு சென்​றுள்​ளார்.

இசை (ஃபி​ரான்ஸ் வாக்​ஸ்​மேன்): தொலைபேசி மணி, ரயில் இரைச்​சல், மாடிப்​படி காலடிச் சத்​தத்​துடன் பின்​னணி இசையை மிகக் கச்​சித​மாகக் கோர்த்​துள்​ளார்.

பார்​பரா ஸ்டான்விக் (லியோ​னா): பணக்​காரத் திமிரோடு பிறரை ஆதிக்​கம் செய்​யும் பெண்​ணாக​வும், படுக்​கை​யில் முடங்​கும் நோயாளி​யாக​வும் இரு​வேறு பரி​மாணங் களில் அசத்​தி​யுள்​ளார். கொலைத் திட்​டம் தனக்​கானதுதான் என்​பதை உணரும் தருணத்​தில் மரண பயத்​தை வெறும் முக​பாவனை​களாலும் மூச்​சிரைப்​பாலும் வெளிப்​படுத்​தும் இவரது அசாத்​திய நடிப்பு ஆஸ்​கர் பரிந்​துரையைப் பெற்​றுத் தந்​தது.

பர்ட் லான்​காஸ்​டர் (ஹென்​றி): வறுமையி​லிருந்து மீளப் பணக்​கார மனை​வி​யின் வலை​யில் விழுந்​து, கடனில் சிக்கி மனை​வியையே கொல்​லத் துணிவதும், பின் அவளைக் காப்​பாற்​றத் துடிக்​கும் கழி​விரக்​கப் பதற்​ற​மும் வெளிப்​படும் இவரது நடிப்​பு, மிகச் சிக்​கலான எதிர்​மறைக் கதா​பாத்​திரத்தை இயல்​பாகப் பிர​திபலிக்​கிறது.

இவர்​களு​டன், தொடக்​கம் முதல் இறு​திவரை தகவல் தொடர்​புச் சாதன​மான தொலைபேசி​யும் உயிரோட்​ட​முள்ள முக்​கியக் கதா​பாத்​திர​மாகப் பயணித்து பயமுறுத்​துகிறது. ‘திரு​மணம் என்​பது எப்​போதும் பாது​காப்​பான புகலிடம் அல்ல; சில நேரங்​களில் அது அழி​வின் தொடக்​க​மாக​வும் மாறக்​கூடும்’ எனும் கருத்தை இப்​படம் அழுத்​த​மாகப் பதிவு செய்கிறது. அதன் திரைக்​கதை அமைப்பு ஆரம்​பத்​தில் சில விவாதங்​களை எழுப்​பி​னாலும், விமர்சன ரீதி​யாக மட்​டுமின்றி வசூல் ரீதி​யாக​வும் பெரும் வெற்​றியைப் பெற்​றது.

ஒரு படுக்​கை​யை​யும் ஒரு தொலைபேசி​யை​யும் மட்​டுமே வைத்​துக்​கொண்​டு, 89 நிமிடங்​கள்​ பார்​வை​யாளர்​களைப்​ பதற்​றத்​தின்​ உச்​சத்​தில்​ வைத்​திருக்​கும்​ இந்​த ‘ராங்​ நம்​பரை’, கைபேசியை அணைத்​துவிட்​டு ரசிக்​கலாம்​!

(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)

SCROLL FOR NEXT