ஹாலிவுட்

‘ஸ்கார் ஃபேஸ்’ 1932 - நவீன கேங்ஸ்டர் படங்களின் பாடப்புத்தகம் | ஹாலிவுட் மேட்னி 21

ராம்குமார் சுப்பாராமன்

உலகம் தன்​னுடையது என்ற பேராசை​யுடன் துப்​பாக்​கி​யால் ஆள நினைத்​தவன் அதே துப்​பாக்​கி​யால் வீழ்த்​தப்​படு​வதே ‘ஸ்​கார் ஃபேஸ்’ (SCAR FACE-1932) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை. கேங்ஸ்டர் ‘லூ​யிஸ் கோஸ்​டில்​லோ’ தனது பெரு​மை​களைப் பேசிக் கொண்​டிருக்​கும் போது விசிலடித்​த​படியே தோன்​றும் ஒரு நிழல் உரு​வம் அவனை சுட்​டுக் கொல்​கிறது.

முகத்​தில் தழும்​புடன் இருக்​கும் டோனி கமோண்டே தனது தலை​வன் ஜானி லோவோ​வின் உத்​தர​வுப்​படியே இந்​தக் கொலை​யைச் செய்​கிறான். போலீஸ் விசா​ரணைக்கு உள்​ளாகும் டோனியை, அவனது வழக்​கறிஞர் விடுவிக்​கிறார். டோனிக்கு அம்​மா, தங்கை செஸ்கா என்று உறவு​கள் உண்​டு.

செஸ்கா ஆண் நண்​பருடன் பழகு​வதைக் கண்​டிக்​கிறான் டோனி. தன் சகாக்​களான ஏஞ்​சலோ மற்​றும் ‘கினோ’ ரினால்​டோவுடன் இணைந்​து, மது விற்​பனை மையங்​களை மிரட்​டித் தன் வசப்​படுத்​துகிறான் டோனி. துப்​பாக்​கிச் சூடு மற்​றும் பெட்​ரோல் குண்​டு​கள் மூலம் தெற்​குப் பகு​தி​யைத் தனது கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரு​கிறான். வடக்​குப் பகு​தி​யில் கைவரிசை காட்ட வேண்​டாம் என்ற ஜானி​யின் எச்​சரிக்​கையை மீறி, ஐரிஷ் கேங்ஸ்டர் ஓ’ஹா​ரா​வுக்கு ரினால்டோ மூலம் பூக்​கடை​யில் வைத்து மலர் வளை​யம் அனுப்​பு​கிறான்.

          

ஓ’ஹா​ரா​வின் மறைவுக்​குப் பழி​வாங்க அவனது வாரிசு டாம் காஃப்​னி, துப்​பாக்​கி​களு​டன் தெற்​குப்பகு​திக்​குள் புகுந்து சூறை​யாடு​கிறான். டோனி அவனுக்​குத் தகுந்த பதிலடி கொடுக்​கிறான். இரு கும்​பல்​களுக்கு இடையி​லான இந்​தப் போர் மக்​களிடையே பீதியை உண்​டாக்​கு​கிறது. இந்த வன்​முறைக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என போலீஸ் துறைத் தலை​வர் உள்பட மக்​கள் உறு​தி​யேற்​கிறார்​கள்.

டாம் காஃப்னி மற்​றும் அவனது ஆட்​களை ஒரு ‘பவுலிங்’ அரங்​கில் வைத்​துத் துவம்​சம் செய்​கிறான் டோனி. தன்னை மீறி வளரும் டோனி​யின் ஆதிக்​கத்​தைக் கண்டு கொதிக்​கும் ஜானி லோவோவை, ஓர் இரவு விடு​தி​யில் சந்​திக்​கும் டோனி, அவனது காதலி ‘பாப்​பி’யை அழைத்​துத் துணிச்​சலாக நடன​மாடு​கிறான்.

இதனால் ஆத்​திரமடை​யும் லோவோ, கூலிப்​படையை ஏவி டோனியைக் கொல்ல முயல்​கிறான். அந்​தத் தாக்​குதலில் இருந்து தப்​பிக்​கும் டோனி, ரினால்​டோ​வின் உதவி​யுடன் ஜானி லோவோ​வின் கதையையே முடித்​து​விடு​கிறான்.

ஜானி​யின் வீழ்ச்​சிக்​குப்​பிறகு, நிழல் உலகின் சக்​கர​வர்த்​தி​யாக உரு​வெடுத்த டோனி, சட்​டம் மற்​றும் ஊடகங்​களின் பிடியி​லிருந்து தப்​பிக்​கத் தனது காதலி பாப்​பி​யுடன் புளோரிடா செல்​கிறான். இதற்​கிடை​யில், அவனது தங்கை செஸ்கா, டோனி​யின் நம்​பிக்​கைக்​குரிய ரினால்​டோவுடன் ரகசி​ய​மாகத் தனது காதலை வளர்க்​கிறாள்.

ஊர் திரும்​பிய டோனி, தனது தங்கை ஒரு​வனுடன் தங்​கி​யிருப்​பதை அறிந்து ஆவேசமடைகிறான். அந்த நபர் தனது சகா ரினால்​டோ​தான் என்று தெரிந்​தும், ஆத்​திரத்​தில் அவனைச் சுட்​டுக்​கொல்​கிறான். அவன் இறந்த பிறகு​தான், அவர்​கள் இரு​வரும் ஏற்​கெ​னவே திரு​மணம் செய்​து​கொண்ட தம்​ப​தி​கள் என்ற உண்மை டோனிக்​குத் தெரிய​வரு​கிறது.

போலீஸ் டோனியைத் தேடி வர, வீட்​டில் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் உதவி​யாளர் ஏஞ்​சலோ கொல்​லப்​படு​கிறான். தன் கணவனைக் கொன்ற அண்​ணனைப் பழி​வாங்க நினைக்​கும் செஸ்​கா, பாசத்​தால் தடு​மாறி இறு​தி​யில் போலீஸ் குண்டு பாய்ந்து இறக்​கிறாள்.

நிலைகுலைந்த டோனி, கண்​ணீர் புகைக் குண்​டு​களுக்கு மத்​தி​யில் படியி​லிருந்து இறங்கி வந்து போலீ​ஸாரிடம் உயிர் பிச்சை கேட்​கிறான்; ஆனால் தப்​பிக்க முயலும்​போது சுட்​டுக் கொல்​லப்​படு​கிறான். அவன் வீதி​யில் பிண​மாக விழும் தருணத்​தில், மேலே இருக்​கும் விளம்​பரப் பலகை​யில் ‘The World Is Yours’ என்ற வாசகம் ஏளன​மாக மின்​னுகிறது.

துப்​பாக்கி முனை​யில் உலகை ஆள நினைத்​தவன், அதே உலகத்​தின் காலடி​யில் மடிகிறான். கேங்ஸ்டர் ‘அல் கபோன்’ வாழ்க்​கை​யைத் தழு​விய அர்​மிட்​டேஜ் டிரெயிலின் நாவலை அடிப்​படை​யாகக் கொண்​டு, சினிமா மேதை ஹோவர்ட் ஹாக்ஸ் இயக்​கிய காவியமே இந்த ‘ஸ்​கார் ஃபேஸ்’ படம் தொடங்​கியதும் திரை​யில் தோன்​றும் வாசகங்​கள் அரசாங்​கத்​துக்​கும் மக்​களுக்​கும் விடுக்​கப்​படும் நேரடி எச்​சரிக்​கை​யாக அமை​கின்​றன.

இதில் வரும் ஒவ்​வொரு சம்​பவ​மும் நிஜ நிகழ்​வு​களின் மறு​ப​திப்​பு. ‘இதற்கு நீங்​கள் என்ன செய்​யப் போகிறீர்​கள்?’ என்று அதி​கார​வர்க்​கத்​தைச் சவுக்​கால் அடிக்​கிறது இத்​திரைப்​படம். மது​விலக்கு காலத்​தில் கொடிகட்​டிப் பறந்த சட்​ட​விரோத மது வணி​கத்​தை​யும், குண்​டர் கலாச்​சா​ரத்​தை​யும் துகிலுரித்​துக் காட்​டிய இயக்​குநர் ஹோவர்ட் ஹாக்​ஸ், ‘துப்​பாக்கி எடுத்​தவன் துப்​பாக்​கி​யாலேயே அழி​வான்’ என்ற உண்​மை​யைத் திரை​யில் அழுத்​த​மாகப் பதிவு செய்​திருக்​கிறார்.

பால் முனி (டோனி): நிஜ ரவுடி அல் கபோனின் உடல்​மொழியைத் திரை​யில் கொண்​டு​வந்த ‘மெத்​தட் ஆக்​டர்’. கேலி, கிண்​டல், சீரியஸ் மற்​றும் தங்கை மீதான அதீத பாசம் என அனைத்து உணர்​வு​களை​யும் அனாயச​மாக வெளிப்​படுத்​துகிறார். வின்ஸ் பார்​னெட் (ஏஞ்​சலோ): டோனி​யின் செய​லா​ள​ராக வரும் இவரது கதா​பாத்​திரம் சிறந்த ‘காமிக் ரிலீஃப்’. குண்டு மழை பொழி​யும்​போதும், “சத்​தமா பேசுங்க, கேக்​கல” என்று இவர் செய்​யும் சேட்​டைகள் உச்​சகட்ட நகைச்​சுவை.

ஜார்ஜ் ராஃப்ட் (கினோ): டோனி​யின் வலதுகர​மாக வரும் இவர், எப்​போதும் கையில் நாண​யத்​தைச் சுண்​டிக்​கொண்டே இருப்​பார். இது பின்​னாளில் வந்த பல கேங்க்​ஸ்​டர் படங்​களுக்கு அடை​யாள​மாகவே மாறியது. ஆன் வோராக் (செஸ்​கா): டோனி​யின் தங்​கை​யாக நடித்த இவரது நடிப்பு அந்த காலத்​திலேயே துணிச்​சலானது. “எனக்கு 18 வயதாகி​விட்​டது, என் இஷ்டப்​படி​தான் நடப்​பேன்” என அவர் காட்​டும் அந்​தச் சுதந்​திர​மான அணுகு​முறை வியக்க வைத்​தது.

ஒளிப்​ப​திவு (லீ கார்ம்ஸ் மற்றும் எல்.வில்​லி​யம் ஓ’கானல்): நிழல்​களின் பயன்​பாடு மூலம் மரணத்​தைப் பேசும் இவர்​களின் ஒளிப்​ப​திவு மிரட்​டலானது. ஒவ்​வொரு கொலைக்​கும் முன்பு திரை​யில் தோன்​றும் ‘எக்​ஸ்’ என்ற குறி​யீடு, படத்​தின் ஒவ்​வொரு பிரேமிலும் மரணம் சூழ்ந்​திருப்​பதை உணர​வைக்​கும் தொழில்​நுட்​பப் புரட்​சி.

எடிட்​டிங் (எட்​வர்ட் கர்​டிஸ்): காலண்​டர் தாள்​கள் பறக்க, அவற்​றின் மீது துப்​பாக்​கிக் குண்​டு​கள் துளைப்​பது போன்ற காட்​சிகள் மூலம், மாதம் முழு​வதும் தொடரும் வன்​முறையை எளி​தாக ரசிகர்​களுக்​குக் கடத்​துகிறார். இவரது எடிட்​டிங் இன்​றும் வியக்க வைக்​கிறது.

தயாரிப்பு (ஹாவர்ட் ஹியூஸ்): புகழ்​பெற்ற கோடீஸ்​வர​ரான இவர், தணிக்கை வாரி​யத்​துடன் பல ஆண்​டு​கள் சட்​டப் போராட்​டம் நடத்தி இப்​படத்தை திரைக்​குக் கொண்டு வந்​தார். ‘உல​கம் தன்​னுடையது’ என்று கனவு காணும் ஒவ்​வொரு குற்​ற​வாளி​யின் இறு​தி​யும் ஒரு தெரு​வோரப் பிணம்​தான் என்​ப​தைத் துணிச்​சலாகச் சொன்ன இப்​படம், காலத்​தால் அழி​யாத கா​வி​யம்.

90 ஆண்​டு​களுக்கு முன்பே ஹோவர்ட் ஹாக்​ஸ் உரு​வாக்​கிய இந்த வன்​முறைச் சித்​திரம்​தான் இன்​றைய நவீன கேங்ஸ்டர் படங்​களுக்​கு ஒரு பாடப்​புத்​தக​மாக விளங்​கு​கிறது. ஓய்​வுநேரத்​தில்​ இந்​தப்​ ப(பா)டத்​தை ஒரு​முறை புரட்​டிப்​ பார்க்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும் படம் பார்ப்போம்)

SCROLL FOR NEXT