ஹாலிவுட்

சேஃப் இன் ஹெல் (1931): தீவுச் சிறை | ஹாலிவுட் மேட்னி 45

ராம்குமார் சுப்பாராமன்

செய்​யாத கொலைக்​குப் பயந்து ஓடும் ஒரு பாலியல் தொழிலா​ளி, செய்த கொலைக்​காக தைரிய​மாகத் தூக்கு மேடையை எதிர்​கொள்​வதே ‘சேஃப் இன் ஹெல்’ (SAFE IN HELL -1931) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

அமெரிக்​கா​வின் நியூ ஆர்​லியன்ஸ் நகரத்​தின் ஒரு வீட்​டில் ஒலிக்​கும் தொலைபேசி​யில் பேசும் கில்டா என்ற இளம் பெண், கிளேபிரிட்ஜ் அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​புக்கு ஒரு வாடிக்​கை​யாளரைச் சந்​திக்​கச் செல்​கிறாள். அங்கே அவளது வாழ்​வின் சீரழி​வுக்​குக் காரண​மான பியட் வான்​சால் இருப்​ப​தைக் கண்டு அதிர்ச்​சி​யடைகிறாள். அவனுடன் ஏற்​பட்ட வாக்​கு​வாதத்​தில், ஓர் ஆயுதத்​தால் தாக்​கு​கிறாள். அவன் சுருண்டு விழுகிறான். அவள் வெளி​யேறும்​போது, எதிர்​பா​ராத​வித​மாக அங்​குள்ள திரைச்​சீலை​யில் தீப்​பற்றி அறை முழு​வதும் பரவு​கிறது.

மறு​நாள், அந்​தக் கட்​டிடம் தீயில் எரிந்து சாம்​பலாகி விட்​ட​தாக​வும், வான்​சால் இறந்​து​விட்​ட​தாக​வும் செய்தி பரவு​கிறது. காவல்​துறை​யினர் தன்​னைத் தேடு​வார்​கள் என கில்டா பயப்​படு​கிறாள். அப்​போது நீண்​ட​நாள் கழித்து அவளைத் தேடிவரும் காதலன் மாலுமி கார்​லிடம், நடந்த உண்​மை​யைக் கூறுகிறாள். கடந்த காலத்​தில் அவளைத் தவிக்​க​விட்​டு, தான் சென்​றதே அவளது இந்த நிலை​மைக்​கு காரணம் எனக் கூறும் கார்ல், அவளை மனை​வி​யாக ஏற்​றுக் கொள்​கிறான்.

சட்​டத்​தில் இருந்து காப்​பாற்ற, கில்​டாவை குற்​ற​வாளிகளை நாடு​கடத்த முடி​யாத கரீபியன் தீவு ஒன்றுக்கு அழைத்​துச் செல்​கிறான். அங்​குள்ள தேவால​யத்​தில் மோதிரம் மாற்​றித் திரு​மண​மும் செய்​து​கொள்​கிறான். தன் கப்​பல் பயணம் முடி​யும் வரை வேறு எந்த ஆண்​களுக்​கும் இடம்​கொடுக்​கக் கூடாது என சத்​தி​யம் வாங்​கு​கிறான். ஒரு விடு​தி​யில் அவளைத் தங்​க​வைத்​து, ஒவ்​வொரு துறை​முகத்​தில் இருந்​தும் கடிதம் எழுது​வ​தாகக் கூறி​விட்​டுச் செல்​கிறான்.

அங்கு தங்​கி​யிருக்​கும் தப்​பியோடிய குற்​ற​வாளி​கள் சிலர் கில்​டாவுக்கு வித​வித​மான பரிசுப் பொருட்​களைக் கொடுத்து அவளை வசப்​படுத்த முற்​படு​கிறார்​கள். அவர்​களிட​மிருந்து தன்​னைத் தற்​காத்​துக் கொள்​வது அவளுக்​குப் பெரும் போராட்​ட​மாகிறது. இந்​தச் சூழ்​நிலை​யில், சிறை அதி​காரி​யான புருனோ அவளது பாது​காப்​புக்​காக ஒரு துப்​பாக்​கியைக் கொடுக்​கிறான். அவளுக்கு உதவுவது​போல் நாடக​மாடும் அவன், கார்ல் அனுப்​பும் கடிதங்​கள் அனைத்​தை​யும் ரகசி​ய​மாகத் தடுத்​துக் கைப்​பற்​றி​விடு​கிறான்.

கார்​லிட​மிருந்து தகவலேதும் இல்​லாத​தால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் கில்​டா. ஒரு​நாள் இறந்​த​தாக நம்​பப்​பட்ட வான்​சால், தீவுக்கு வந்து இறங்​கு​கிறான். அவன் உயிரோடு இருப்​ப​தைக்​கண்ட கில்​டா, அவனை, தான் கொல்​ல​வில்லை என்​பதை உணர்​கிறாள். இன்​சூரன்ஸ் பணத்தை முழு​மை​யாக அபகரிக்​கவே தலைமறை​வாக இருந்​த​தாக வான்​சால் பெரு​மை​யுடன் கூறுகிறான். அவன் உயிரோடு இருக்​கும் தகவலை ஒரு கடிதம்​மூலம் கார்​லுக்கு அனுப்​பு​கிறாள் கில்​டா. அவளிடம் எல்​லைமீறி நடக்க முயன்ற வான்​சாலை, புருனோ கொடுத்த துப்​பாக்​கி​யால் சுடு​கிறாள். சம்பவ இடத்​திலேயே அவன் இறக்​கிறான்.

வான்​சால் கொல்​லப்​பட்​டதைத் தொடர்ந்து தீவின் நீதி​மன்​றத்​தில் கொலை வழக்கு விசா​ரணை தொடங்​கு​கிறது. வழக்​கறிஞர் ஜோன்ஸ் அவள் தற்​காப்​புக்​காகவே சுட்​ட​தாக வாதிட, கில்டா அந்த வழக்​கி​லிருந்து தப்​பிக்​கும் சூழல் உரு​வாகிறது. ஆனால் புருனோ, வெளி​நாட்​டினர் துப்​பாக்கி வைத்​திருக்​கத் தடை உள்​ளதைச் சுட்​டிக்​காட்டி அவளைத் தனக்கு அடிபணி​யு​மாறு மிரட்​டு​கிறான்.

தன் கணவனுக்கு கொடுத்த வாக்கு மீறப்​படும் நிலை​மை​யைக் கண்டு நிலைகுலைந்து போகிறாள் கில்​டா. பின்​னர், திட்​ட​மிட்​டு வான்​சாலை கொன்​ற​தாக​வும், தானே குற்​ற​வாளி என்​றும் நீதி​மன்​றத்​தில் பகிரங்​க​மாக ஒப்​புக் கொள்​கிறாள்.

இதற்​கிடை​யில் கில்​டா​வைத் தேடிவரும் கார்ல், தனக்கு கரை​யிலேயே வேலை கிடைத்​திருப்​ப​தாக​வும் விரை​வில் சேர்த்து வாழ்​வோம்; நியூ ஆர்​லியன்ஸ் வந்து விடு என்று மகிழ்ச்​சி​யுடன் கூறி​விட்​டுச் செல்​கிறான். நடந்த உண்​மை​களை அவனிடம் மறைக்​கும் கில்​டா, தான் இறந்​த​பிறகு அவனுக்கு உண்​மையை விளக்​கு​மாறு வழக்​கறிஞரிடம் கேட்​டுக்​கொள்​கிறாள். இறு​தி​யாக, சமூகத்​தின் முன் தன் கண்​ணி​யத்தை காப்​பாற்​று​வதற்​காக, துணிந்து தூக்​குமேடையை நோக்கி நடந்து செல்​வதுடன் படம் நிறைவடைகிறது.

ஹூஸ்​டன் பிராஞ்ச் எழு​திய மூல நாடகத்​தைத் தழு​வி, ஜோசப் ஜாக்​சன் மற்​றும் மாட் ஃபல்​டன் திரைக்​கதையை​யும் உரை​யாடல்​களை​யும் அமைத்​துள்​ளனர். ஒரு பெண்​ணின் தனிப்​பட்ட துயரத்தை மட்​டும் சொல்​லாமல், அவள் வாழ நேர்ந்த சமூகத்​தின் இருண்ட முகத்​தை​யும் கதைக்​குள் கொண்டு வந்​திருப்​பது தான் இந்​தத் திரைக்​கதை​யின் சிறப்​பு. ஹாலிவுட்​டின் பொற்​காலத்​தில் தனது தனித்​து​வ​மான இயக்​கத்​தால் முத்​திரை பதித்த வில்​லி​யம் ஏ.வெல்​மேன் இப்​படத்தை இயக்​கி​யுள்​ளார்.

ஒளிப்​ப​திவு: சிட்னி ஹிகாக்​ஸின் கருப்​பு–வெள்ளை ஒளிப்​ப​திவு, கில்​டா​வின் தனிமை​யை​யும் அச்​சத்​தை​யும் காட்​சிகளின் வழியே உணர்த்​துகிறது. கதவு, ஜன்​னல், இருள், மரக்​கட்​டமைப்​பு​கள் என ஒவ்​வொரு பிரே​மும் அவளைச் சிறைக்​குள் அடைத்​திருப்​பது போன்ற உணர்வை உரு​வாக்​கு​கின்​றன.

படத்​தொகுப்​பு: ஓவன் மார்க்​ஸின் படத்​தொகுப்பு கில்​டா​வின் தூக்கு மேடை வரையி​லான பயணத்தை வேக​மாக​வும் நேர்த்​தி​யாக​வும் நகர்த்​துகிறது.

இசை: லியோ எஃப். ஃபோர்ப்​ஸ்​டீன் தலை​மையி​லான விதா​போன் ஆர்​கெஸ்ட்​ரா, ஆரம்​ப​கால ஒலிப்​படச் சூழலுக்கு ஏற்​ற​வாறு காட்​சிகளின் மனநிலைக்​குத் துணைநிற்​கிறது. நினா மே மெக்​கினி பாடும் “When It’s Sleepy Time Down South” பாடல் இதன் குறிப்​பிடத்​தக்க இசைத் தருண​மாக அமை​கிறது.

டோரதி மெக்​கெல்: கில்டா கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள இவரே இப்​படத்​தின் மிகப்​பெரிய பலமும் இதய​மும் ஆவார். பயம், கோபம், காதல், தனிமை மற்​றும் கண்​ணி​யம் போன்ற பல்​வேறு உணர்ச்​சிகளை மிக இயல்​பாக வெளிப்​படுத்​தி​யுள்​ளார். பிரி-கோட் (Pre-Code) காலத்து நாயகி​களின் சுதந்​திர​மான மற்​றும் தீவிர​மான வடிவத்​துக்​குச் சிறந்த உதா​ரணம்.

டொனால்டு குக்: கில்​டா​வின் கடந்த காலத்தை முழு​மை​யாக அறிந்​தும், அவள் மீதான காதலால் அவளை அப்​படியே ஏற்​றுக்​கொள்ள முன்​வரும் கதா​பாத்​திரத்​தில் நேசத்​தை​யும் மனிதநே​யத்​தை​யும் பிர​திபலிக்​கிறார்.

நினா மே மெக்​கினி & கிளாரன்ஸ் மியூஸ்: அக்​கால ஹாலிவுட்​டில் கறுப்​பினக் கதா​பாத்​திரங்​கள் பெரும்​பாலும் stereotype-ஆக சித்​தரிக்​கப்​பட்ட நிலை​யில், இப்​படத்​தில் அவர்​கள் நேர்​மை​யான, மனிதநேயமிக்க கதா​பாத்​திரங்களில் இடம்​பெற்​றனர்.

‘Safe in Hell’ என்ற பெயரிலேயே படத்​தின் முழு முரணும் ஒளிந்​திருக்​கிறது. கில்டா தப்​பிச் செல்​லும் இடமெல்​லாம் அவளுக்கு நரக​மாகவே மாறுகிறது. அவளுக்கு எங்​குமே பாது​காப்​பில்​லை; படத்​தின் பெரும்​பகுதி ஒரே களத்​தில் நடந்​தா​லும், ஒவ்​வொரு காட்​சி​யிலும் அந்த இடம் வெவ்​வேறு உளவியல் பரி​மாணங்​களைப் பெறுகிறது. ஒரு சிறிய அறையை​யும், ஒரு ஹோட்​டலை​யும் மட்​டுமே வைத்து எப்​படிச் சிறந்த பதற்​றத்​தை​யும் நாடகத்​தை​யும் உரு​வாக்​கலாம் என்​ப​தைக் கற்​றுக்​கொடுக்​கிறது.

பெண்​ணின் மாண்​பு, கணவனுக்கு அளித்த வாக்​கு, கண்​ணி​யம் ஆகிய​வற்​றுக்​காக உயிரையே துறப்​பது போன்ற காட்​சிகளால் தமிழ்த்​ திரைப்​படக்​ கதைகளை நினை​வூட்​டும்​ இந்​த ஹாலிவுட்​ படத்​தை, சிறந்​த சினி​மா அனுபவ​மாக ரசிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

SCROLL FOR NEXT