‘திட்டம் போட்டு திருடிய கூட்டம்' சபலத்தால் சிக்கிக் கொள்வதுதான் ‘ரிஃபிஃபி’ (RIFIFI - 1955 ) என்ற பிரெஞ்சு படத்தின் ஒருவரிக் கதை. ஐந்து வருட சிறை தண்டனை முடிந்து வரும் டோனி, சீட்டாட்டத்தில் ஈடுபடுகிறான்.
பணம் இல்லாமல் பாதி ஆட்டத்தில் நிறுத்தப்பட்டு அவமானமடைகிறான். ஃபோன் வந்ததும் சூதாட்ட கிளப்புக்கு வரும் ஜோ, அங்கிருந்து டோனியை அழைத்துச் செல்கிறான்.
அவனுக்கு இத்தாலிய நண்பன் மரியோவை அறிமுகப்படுத்துகிறான், ஜோ. 17 நொடியில் முடிந்துவிடும் சிறிய நகைக்கடை கொள்ளைக்கு ஜோவும், மரியோவும் திட்டம் தீட்டுகிறார்கள். டோனிக்கு அதில் விருப்பமில்லை. தனது காதலி மடோ-வைத் தேடிச் செல்கிறான்.
ஒரு நைட் கிளப்பில் வேலை பார்க்கும் மடோ, டோனி இவ்வளவு விரைவில் வருவான் என்று தெரியாததால் கிளப் ஓனர் பியர் குரூட்டர் ஆதரவில் இருக்கிறாள். கிளப்பில் டோனியை சந்திக்கும் குரூட்டர், “மடோ இப்ப என் ஆளு” என்று எச்சரிக்கிறான்.
“பணமின்றி அணுவும் அசையாது” என்பதை உணர்ந்த டோனி நண்பர்களுடன் சேர்ந்து மாபெரும் கொள்ளைக்குத் திட்டமிடுகிறான். ‘ரியூ டி ரிவோலி’ என்ற தெருவிலுள்ள உயர்தரமான ஒரு நகைக்கடை பாதுகாப்பான சிஸ்டத்துடன் கொள்ளையடிக்க சாத்தியமே இல்லாத அளவு சவாலாக இருப்பதே டோனியை ஈர்க்கிறது.
மிலானிலிருந்து பூட்டு உடைப்பு நிபுணரான சிசரை வரவழைக்கிறார்கள். நால்வரும் அந்த நகைக்கடையை பார்வையிடுகிறார்கள். இரவுபகலாக நோட்டமிட்டு, கடையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறிப்பு எடுக்கிறார்கள். ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராவதுபோல் கொள்ளைக்குத் தயாராகிறார்கள்.
அலாரம் செயலிழப்பு, பூட்டு உடைப்பு, எல்லாவற்றையும் தங்கள் அறையில் ஒத்திகை பார்க்கிறார்கள். குறிப்பிட்ட நாள் இரவில் ஏறக்குறைய 4 மணிநேரம் நகைக் கடையின் கூரைப்பகுதியில் கன்னம் வைத்து கச்சிதமாகத் திருடிவிடுகிறார்கள்.
மொத்த வைரத்தையும் கொள்ளையடித்த பிறகு நண்பர்களுக்கே தெரியாமல் ஒரு மோதிரத்தைத் தனியாகத் திருடுகிறான் சிசர். ஒரு தடயமும் இல்லாமல் 240 மில்லியன் பிராங் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, பாரீஸ் நகரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
அது ஒரு பக்கம் பரபரப்பாகிக் கொண்டிருக்க, கிளப் பாடகி விவியனை சந்திக்கும் சிசர், தனது மகிழ்ச்சிக்காக, தனியாகத் திருடிய வைர மோதிரத்தை அவளுக்குப் பரிசளிக்கிறான். ஒரு மில்லியன் ஃபிராங் மதிப்புள்ள மோதிரத்தை அதன் மதிப்பு தெரியாமல் தனது நண்பனுடன் சேர்ந்து குரூட்டரிடம் காட்டுகிறாள் விவியன்.
மரியோவின் நண்பன் சிசர் இதைக் கொடுத்தான் என்றதும் நகைக்கடை கொள்ளை, டோனி அண்ட் கோவின் வேலைதான் என்பதை உணர்கிறான் குரூட்டர். அந்த நகைகளை, தானே கைப்பற்ற வேண்டும் என்பதற்காக போலீஸாரிடம் தெரிவிக்காமல், ஜோவின் மகனை கடத்தி,
வைரங்களை ஒப்படைக்குமாறு மிரட்டுகிறான். சிறுவன் காப்பாற்றப்பட்டானா? நகைகள் யார் வசம் சென்றது? என்பது இந்த சூப்பர் ஹிட் படத்தின் பரபரக்கும் கிளைமாக்ஸ்.
ஏறக்குறைய அரைமணி நேரம் நடக்கும் கொள்ளைக் காட்சியில் நால்வரும் சைகைகள் மற்றும் பார்வைகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள். மூச்சிரைப்பு, துளையிடும் கருவியின் ‘விர்ர்ர்...’, சுத்தியலின் ‘டொக் டொக்’ தவிர எந்த சத்தமும் இல்லை. நம்மையும் அந்தக் கொள்ளையில் அமைதியாக ஈடுபடுத்தி விடுகிறார்கள். சிறு தவறு ஏற்பட்டாலும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்திலேதான் அந்தக் காட்சியைக் காண நேரிடுகிறது.
மேல்தளத்தில் இருந்து ஓட்டை போட்டு இறங்கி, லாக்கரைத் திறக்கும் தருணத்தில் பதற்றம் உச்சத்தை எட்டுகிறது. படம் வெளிவந்த பிறகு இந்த கற்பனை கொள்ளை காட்சி, உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்த கொள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது என்பது வேதனையான உண்மை.
ஜூல்ஸ் டாசின் ‘மெக்கார்த்தி ஈரா’வால் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட இயக்குநர், பிரான்ஸ் சென்று அங்கு குறைந்த பட்ஜெட்டில் ‘ஆகஸ்ட் லெ ப்ரெட்டான்’ எழுதிய ரிஃபிஃபி நாவலை (கதையின் பல பகுதிகளில் அவருக்குத் திருப்தி இல்லா விட்டாலும்), திரைப்படமாக இயக்கி கேன்ஸ் விழாவில் சிறந்த இயக்குநர் விருதை வென்றார்.
சபலத்துக்கு ஆட்படும் சிசர் கதாபாத்திரத்திலும் அவர் நடித்திருக்கிறார். பியர் குரூட்டராக நடித்த மார்செல் லுபோவிசி அமைதியான, ஆனால் கொடூரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்துகிறார். மடோவாக நடித்திருக்கும் ‘மேரி சபூரே’ டோனிக்கும், குரூட்டருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு பரிதவிப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் திருப்புமுனை கேரக்டரான விவியனாக மாகலி நோயல். ரிஃபிஃபி பாடலில் அவரது முகபாவங்கள் அற்புதம்.
விரக்தி நிறைந்த, ஆபத்தான திருடன் டோனியாக ஜீன் செர்வே(ஸ்) இறுகிப்போன முகத்துடன் எளிதில் உணர்ச்சிகளை வெளிக் காட்டாமல் நடித்திருக்கிறார். பாசமிகு தந்தை ஜோவாக கார்ல் மோ(ஹ்)னர் மற்றும் மனைவியை நேசிக்கும் மரியோவாக ராபர்ட் மனுவேல், பணத்துக்காக உயிரையே பணயம் வைக்கும் எளிய மனிதர்களாகத் தோன்றுகிறார்கள்.
கிளைமாக்ஸில் டோனி உயிர் துறக்கும் நிலையில் காரை ஓட்டிவந்து ஜோ வீட்டுச் சுவற்றில் மோதி அவன் மகனை ஒப்படைத்துவிட்டு ஸ்டியரிங்கில் தலை சாய்ந்து உயிர்விடும் காட்சி, கண்ணீரை வரவழைப்பதுடன் கைதட்டவும் வைக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களின் மறைவுக்கு நம் கண்கள் கலங்குவதே இப்படம் பெற்றிருக்கும் உண்மையான வெற்றி.
பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பிலிப் அகோஸ்டினி, கேமரா கோணங்களால் வியக்க வைக்கிறார். டோனி நண்பர்களின் இறுதி ஊர்வலம், பாரீஸ் நகர வீதிகளிலும், நதிக்கரையிலும் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இசையே இல்லாமல் கொள்ளைக் காட்சி பதற்றத்தை ஏற்படுத்தினாலும் இறுதிக் காட்சியின் இசை நம்மை டென்ஷனின் உச்சத்துக்கு கொண்டு சென்று விடுகிறது. கிளப் பாடலாக தலைப்பை தாங்கி வரும் ரிஃபிஃபி பாடல் நிழல் உலக குற்ற மனிதர்களின் நடவடிக்கைகளை விவரிக்கிறது. இசைக்குச் சொந்தக்காரர் ஜார்ஜஸ் ஓரிக்.
படத்தின் முழு பரபரப்புக்கும் காரணம் ரோஜர் ட்வையர் எடிட்டிங் ஸ்டைல்தான். அதனால்தான் ரிஃபிஃபி எடிட்டிங், இன்றுவரை திரைப்பட கல்லூரிகளில் பாடத் திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. ஹென்றி பெரார்ட், பியர் கபாட், ரெனே பெசார்ட் இதன் தயாரிப்பாளர்கள். உலகம் முழுவதும் பல தலைமுறை இயக்குநர்களைப் பாதித்த படமாக, ஹைஸ்ட் திரைப்படங்களின் மாஸ்டர் பீஸாக ‘ரிஃபிஃபி’திகழ்கிறது.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)