ரஸ்ஸல் க்ரோவ் உடன் இணைந்து அறிவியல் புனைகதை அதிரடி படத்தில் நடிக்க இருக்கிறார் பிரியங்கா சோப்ரா
‘ப்ளுஃப்ளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ‘பிரிடியேட்டர்’, ‘ஸ்டெஞ்சர் திங்ஸ்’ உள்ளிட்டவற்றாஇ இயக்கிய நிம்ரோட் அன்டல் (Nimród Antal) இயக்குகிறார். திரைக்கதையை டேவிட் ஃபெர்ஜிரியோ (David Frigerio), வில்லியம் யுபங்க் (William Eubank) எழுதுகின்றனர்.
காங்கோ பின்னணியில் நடக்கும் கதை, விபத்துக்குள்ளான விமானம் ஒன்றை மீட்கும் ஒரு நிழல் மிஷனில் ஈடுபடுத்தப்படும் அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பற்றிக் கூறுகிறது.
‘ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ஆற்றோரமாக பயணப்படும் சிறப்பு மீட்புக் குழுவின் பயணம் மிகவும் கடினமானதாக மாறுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தை நெருங்க, உண்மையில் தாங்கள் விமானத்தை மீட்க அனுப்பபடவில்லை என்று அவர்களுக்கு தெரிய வருகிறது’ என்று படம் பற்றி வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் உலகளாவிய வெளியீட்டை ஹைலேண்ட் பிலிம் க்ருப் மேற்கொள்கிறது. இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் ரஸ்ஸலின் நடிப்பில் ‘நூரெம்பெர்க்’ என்ற திரைப்படம் 2025-ல் வெளியானது. நடிகை பிரியங்கா சோப்ரா 2027-ல் வெளிவர இருக்கும் ராஜமவுலியின் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.