ஹாலிவுட்

பிக் அப் ஆன் சவுத் ஸ்ட்ரீட் (1953): பிக்பாக்கெட் கைவரிசையில் உளவு சதி | ஹாலிவுட் மேட்னி 47

ராம்குமார் சுப்பாராமன்

ஒரு பெண்​ணின் பர்ஸை திருடும் பிக்​பாக்​கெட், அதற்​குள் அரசாங்​கத்​துக்கு எதி​ரான ரகசிய ஆவணம் இருப்​ப​தால், துரத்​தப்​படும் ஆபத்​துகளி​லிருந்து எப்​படி மீள்​கிறான் என்​பதே ‘பிக் அப் ஆன் சவுத் ஸ்ட்​ரீட்’ (PICK UP ON SOUTH STREET - 1953) படத்​தின் ஒரு வரி கதை.

நியூ​யார்க் சுரங்​கப்​பாதை​யில் அதிவேக​மாகச் செல்​லும் ரயி​லில் பயணிக்​கும் கேண்டி என்ற இளம்​பெண்ணை ஸாரா என்ற எஃப்​பிஐ ஏஜென்​ட்டும், மற்​றொரு அதி​காரி​யும் கண்​காணித்து வரு​கின்​றனர். கூட்​டநெரிசலில் ஸ்கிப் மெக்​காய் என்ற திருடன், கேண்​டி​யின் பர்ஸை திருடி​விட்டு இறங்கி விடு​கிறான்.

இதைக் கவனித்த ஸாரா அவனைப் பின்​தொடர்​வதற்​குள் ரயில் நகர்ந்து விடு​கிறது. அடுத்த நிறுத்​தத்​தில் இறங்​கும் கேண்​டி, பர்ஸ் காணா​மல் போனதைக் கண்​டு, தன் முன்​னாள் காதலன் ஜோயிக்கு போனில் சொல்​கிறாள். அவன் அவளை உடனே வரச் சொல்லி திருடனிட​மிருந்து அதை கைப்​பற்ற வேண்​டும் என்​கிறான்.

ஸாரா காவல் நிலை​யம் சென்று திருடனைப் பற்​றிக் கூறுகிறார். கேப்​டன் டைகரின் அறி​வுரைப்​படி, போலீஸ் தகவலா​ளி​யான மோ-​விடம் விசா​ரிக்​கின்​றனர். திருட்​டின் நுணுக்​கங்​களை வைத்து அது ‘ஸ்​கிப் மெக்​காய்’ என்​கிறாள் மோ. ஸ்கிப்​பைக் காவல் நிலை​யத்​துக்கு வரவழைத்த ஏஜென்ட்​டு​கள், கேண்​டி​யின் பர்​ஸில் அரசாங்க ரகசி​யங்​கள் அடங்​கிய ‘மைக்ரோ ஃபிலிம்’ இருந்​த​தாக​வும், அதை யாரிடம் கொடுப்​பாள் என அறியவே அவளைப் பின்​தொடர்ந்ததாக​வும் கூறுகின்​றனர்.

ஸ்கிப்பை 3-முறை ஜெயிலுக்கு அனுப்​பி​யிருக்​கிறார் கேப்​டன் டைகர். அந்த வன்​மத்​தில் உதவ மறுத்​து​விட்​டுக் கிளம்​பு​கிறான் ஸ்கிப். மோ மூலம் விலாசம் தெரிந்​து, வீட்​டைச் சோதனை​யிடும் கேண்​டியை, ஸ்கிப் தாக்​கு​கிறான். தன்​னிடம் திருடியது தன் சகோ​தரரின் குடும்​பப் புகைப்​படங்​கள் என அவள் பொய் சொல்ல, அவளை முத்​தமிட்டு அனுப்பி வைக்​கும் ஸ்கிப், ‘மைக்ரோ ஃபிலிமை’ வைத்து பணம் சம்​பா​திக்க முடி​யும் என்​பதை புரிந்​து​கொள்​கிறான்.

ஜோயி, கேண்​டி​யிடம் 500 டாலர்​கள் கொடுத்து அதை வாங்கி வரச் சொல்​கிறான். மீண்​டும் ஸ்கிப்​பிடம் வரும் கேண்டி “பல ஆண்​களை முத்​தமிட்​டிருந்​தா​லும் இப்​படி நான் உணர்ந்​ததே இல்​லை” என உருகு கிறாள். அவளது ரொமான்​சில் மயங்​காத ஸ்கிப், ஃபிலி​முக்கு 25 ஆயிரம் டாலர் கேட்​கிறான்.

ஆத்​திரமடை​யும் ஜோயி​யின் கூட்​டாளி​கள் ஸ்கிப்​பைக் கொல்ல திட்​ட​மிடு​கின்​றனர். கேண்டி மூலம் இதை அறிந்த மோ, ஸ்கிப்பை எச்​சரித்​து, “அந்​தப் பெண் உனக்​காகப் பெரிய ஆபத்தை ஏற்​றுள்​ளாள். அவள் உன்னை உண்​மை​யாகவே நேசிக்​கிறாள்” என்று கூறி​விட்​டுச் செல்​கிறாள்.

மோவின் டைரி விலாசத்​தின் மூலம் போலீ​ஸார் ஸ்கிப்​பைக் கைது செய்​கின்​றனர். இருந்​தும் அவனைக் கண்​காணிக்​கும் அதி​காரி​யால் நிரப​ராதி என விடுவிக்​கப்​படு​கிறான். ஸ்கிப் மறைத்து வைத்​திருந்த ஃபிலிமை அவனைத் தாக்​கிப் பறித்​துச் செல்​கிறாள் கேண்​டி. ஸாரா​விடம் ஃபிலிமைக் கொடுத்​து,

ஸ்கிப் திருந்​தி​விட்​ட​தாகக் கூறுகிறாள். அவர்​கள்​ கூறும் திட்​டப்​படி அதை ஜோயி​யிடம் கொடுக்​கிறாள். ஆனால், ஒரு ‘ஃபிரேம்’ விடுபட்​டிருப்பதைக் கண்டு ஆத்​திரமடை​யும் ஜோயி, கேண்​டியைச் சுட்​டு​விட்டு ஸ்கிப்​பைத் தேடிக் கிளம்​பு​கிறான்.

மருத்​து​வ​மனை​யில் கேண்​டியைச் சந்​தித்து ஆறு​தல் கூறுகிறான் ஸ்கிப். ‘ஃபிரேம்’ வைத்​திருக்​கும் ஸ்கிப்​பிடம், ‘ஜோ​யியை நீயே தேடிக் கண்​டு​பிடி. உன்னை வழக்​கி​லிருந்து விடுவிக்​கிறோம்’ என போலீ​ஸார் கூறுகின்​றனர். ரயி​லில் செல்​லும் ஜோயியைப் பின்​தொடரும் ஸ்கிப், அவனது துப்​பாக்​கியை திருடு​கிறான். ரயில் நிலை​யக் கழிப்​பறை​யில் ஜோயி ‘ஃபிலிமை’ கைமாற்ற முயலும்​போது, அவனுடன் கடுமை​யாக மோதி ரயில்வே ட்ராக்​கில் அடித்து வீழ்த்​துகிறான்.

இறு​தி​யாகக் காவல் நிலை​யத்​தில் தன் விடு​விப்​புச் சான்​றிதழைப் பெற்​றுக்​கொண்டு கேண்​டி​யுடன் கைகோர்த்​துப் புறப்​படு​கிறான் ஸ்கிப். “30 நாட்​களில் மீண்​டும் திருடி மாட்​டு​வாய்” என டைகர் கூற, “பந்​த​யம் கட்​டு​கிறா​யா?“என கேண்டி புன்​னகை​யுடன் சவால் விடு​வதோடு படம் நிறைவடைகிறது.

1950-களின் அமெரிக்க பனிப்​போர், கம்​யூனிஸ்ட்டுகளின் ஊடுரு​வல் என அச்​ச​மும் அரசி​யல் பதற்​ற​மும் நிறைந்த கால​கட்​டம். இத்​தகைய சூழலில் தேசப் பாது​காப்பு களத்தை விளிம்​புநிலை மனிதர்​களின் வாழ்க்​கையோடு இணைத்து ட்வைட் டெய்​லர் எழு​திய மூலக்​கதை​யின் அடிப்​படை​யில் உரு​வான படம் இது.

ஒரு பிக்​பாக்​கெட் திருடனின் சாதாரண கைவரிசை, எப்​படி சர்​வ​தேச உளவுச் சதி​யாகப் பரிணமிக்​கிறது என்​ப​தைத் தனது விறு​விறுப்​பான திரைக்​கதை, இயக்​கத்​தின் மூலம் நேர்த்​தி​யாகப் பதிவு செய்​திருக்கிறார் இயக்​குநர் சாமுவேல் ஃபுல்​லர். தேசப்​பற்​றை​விட மனிதர்​களின் தப்​பிப்​பிழைக்​கும் போராட்​டத்தை மையப்​படுத்​தி, விறு​விறுப்​பான ஆடு​புலி ஆட்​டத்தை நம் கண்​முன்னே காட்​டி​யிருக்​கிறார்.

ஒளிப்​ப​திவு (ஜோ மெக்​டொ​னால்​டு): நியூ​யார்க் நகரத்​தின் இருண்ட குற்​றவுல​கத்தை தத்​ரூப​மாகக் கண்​முன் நிறுத்​தி​யுள்​ளார். நாயகன் தங்​கி​யிருக்​கும் தனிமை​யான படகு வீடு, மங்​கலான விளக்​கொளி​யில் நடக்​கும் சண்​டைகள் அனைத்​தை​யும் சிறப்​பாகப் பதிவு செய்​துள்​ளார்.

படத்​தொகுப்பு (நிக் டி மேஜியோ): ரயில் திருட்டு மற்​றும் கிளை​மாக்ஸ் சண்​டைக் காட்​சிகளில் இவரது துரித​மான ‘கட்​ஸ்’ பார்​வை​யாளர்களைப் பதற்​றத்​துக்கு கொண்டு செல்​கின்​றன.

இசை (லீ ஹார்​லைன்): க்ரைம் த்ரில்​லருக்​குத் தேவை​யான திகிலூட்​டும் இசை​யுடன், கதா​பாத்​திரங்​களின் தனிமை​யை​யும் வலிகளை​யும் உணர்த்​தும் சோக​மான மெல்​லிசையை​யும் பதிவு செய்​துள்​ளார்.

ஸ்கிப் மெக்​காய் (ரிச்​சர்ட் விட்​மார்க்): உடல் மொழி, கிண்​டலான பார்வை மற்​றும் கடின​மான பேச்​சால் ‘ஆன்​டி-ஹீரோ’ பாத்​திரத்தை மறக்க முடி​யாத வகை​யில் ஏற்று நடித்​திருக்​கிறார்.

கேண்டி (ஜீன் பீட்​டர்​ஸ்): தேசத்​துரோகச் சதி​யில் பகடைக்​கா​யாகப் பயன்​படுத்​தப்​படும் கதா​பாத்​திரத்​தில் ஏமாற்​றத்​தின் வலியை​யும் உண்​மை​யான காதலை​யும் சிறப்​பாகப் பிர​திபலித்​துள்​ளார். பல இடங்​களில் அவர் வாங்​கும் அடிகள் நமக்கு வலிக்​கின்​றன.

மோ (தெல்மா ரிட்​டர்): தகவல் சொல்​லும் வயதான பெண்​மணி​யாக தனது அசாத்​திய நடிப்​பால் வாழ்ந்​திருக்​கிறார். எப்​போதும் கிண்​டலாகப் பேசும் அவர், துப்​பாக்​கியை நீட்​டும்​போதும் காட்​டிக் கொடுக்​காமல் செய்​யும் உயிர்த்​தி​யாகம் பார்​வை​யாளர்​களைக் கலங்க வைக்​கிறது. சிறந்த துணை நடிகைக்​கான ஆஸ்​கருக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டார்.

சமூகத்​தில் ‘கண்​ணி​ய​மானவர்​கள்’ எனப் போற்​றப்​படு​பவர்​கள் தேசத்​துரோகி​களாக​வும், சுயநல​வா​தி​யான ஒரு திருடன் எதிர்​பா​ராத தருணத்​தில் மனிதம் மிக்​கவ​னாக​வும் மாறும் முரண்​பாடு​தான் இந்​தப் படத்​தின் ஆன்​மா. கறுப்​பு-வெள்ளை திரை​யில், மனித மனங்​களின் பேராசையை​யும், உணர்ச்​சிக் கொந்​தளிப்​பு​களை​யும் எந்​தப் பூச்​சும் இல்​லாமல் அப்​பட்​ட​மாகப் பதிவு செய்​திருக்​கிறது இப்​படம்.

சா​தா​ரண​மான சிறு சம்​பவம் எப்​படி முழு திரைப்​படத்​துக்​கான கதவாக மாற முடி​யும்​ என்​ப​தை 80 நிமிடங்​களில்​ அற்​புத​மான திரைக்​கதை வகுப்​பு எடுக்​கும் இந்​தப்​ படத்​தை பார்த்​து ரசிக்​கலாம்​!

(செவ்​வாய்​ தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

SCROLL FOR NEXT