ஹாலிவுட்

லாரா (1944): ‘குட்பை லாரா, குட்பை மை லவ்!’ | ஹாலிவுட் மேட்னி 43

ராம்குமார் சுப்பாராமன்

கொலை செய்​யப்​பட்​ட​தாக நினைக்​கப்​படும் பெண் உயிரோடு திரும்பி வரு​வதும் அவளது கொலைக்​குக் காரண​மாக சொல்லப்பட்டவரே கொல்​லப்​படு​வதும் ‘லா​ரா’ (LAURA -1944) படத்​தின் ஒரு​வரிக் கதை.

அழகிய இளம் பெண் லாராவின் ஓவி​யம் காட்டப்படுகிறது. அதன்​மேல் ஒரு குரல் (வாய்ஸ் ஓவர்), “லாரா இறந்த அந்த வார இறு​தியை மறக்க முடி​யாது. அந்த ஞாயிறு, நியூ​யார்க்​கில் எஞ்​சி​யிருக்​கும் ஒரே மனிதன் நான்​தான் என்​பது​போல உணர்ந்​தேன்.

லாரா​வின் கொடூர மரணத்​தால் தனிமையடைந்​தேன். நான் வால்டோ லைடெக்​கர்; அவளது கதையை நான் எழுத முற்​படும்​போது அந்​தத் துப்​பறி​யும் நிபுணர் வந்​தார்” என்று ஒலிக்​கிறது. குளியல் தொட்​டிக்​குள் அமர்ந்​த​படி டைப் அடிக்​கும் அந்த எழுத்​தாளரை, மெக்​பெர்​சன் என்ற துப்​பறி​யும் நிபுணர் சந்​தித்து லாரா​வின் மரணம் பற்றி விசா​ரிக்​கிறார்.

இரு​வரும் லாரா​வின் ஆன்ட்​டி, ஆன்ட்ரெட்​வெல் வீட்​டுக்​குச் செல்​கிறார்​கள். அப்​போது அங்கு வரும் லாரா​வுக்கு நிச்​ச​யிக்​கப்​பட்ட மாப்​பிள்ளை கார்​பென்​டரிட​மும் விசா​ரணை நடக்க, லாரா இறந்த நேரத்​தில், இசைக்​கச்​சேரி​யில் இருந்​த​தாகச் சொல்​கிறார்.

மெக்​பெர்​சனை டின்​னருக்கு அழைக்​கும் வால்​டோ, லாராவை முதன்​முதலில் சந்​தித்த சம்​பவத்தை நினை​வு​கூர்​கிறார். ஒரு மதிய உணவு நேரத்​தில் தனது கம்​பெனி​யின் பேனாவை விளம்​பரப்​படுத்த வேண்​டும் என்று அந்​தப் பெண் கேட்​டதை​யும், முதலில் திட்​டி​னாலும் பிறகு ஏதோ ஈர்க்​கப்​பட்​டு, அவளது அலு​வல​கம் தேடிச் சென்று ஆதரவு கொடுத்​ததை​யும், தனக்​குத் தெரிந்த பிரபலங்​களை அறி​முகம் செய்து வைத்​ததை​யும் தனது எழுத்​து, பேச்சை அவள் ரசித்​ததை​யும் காதல்​கதையைப் போல் பகிர்​கிறார்.

ஒரு பார்ட்​டி​யில் லாரா​வுடன் அறி​முகம் ஆகிறான் கார்​பென்​டர். இரு​வரும் சுவாரஸ்​ய​மாகப் பேசுவதைப் பார்க்​கும் வால்​டோ, டென்​ஷன் ஆகிறார். கார்​பென்​டரும் லாரா​வும் காதல் வயப்​பட்​டதைத் தெரிந்​து​கொண்ட வால்​டோ, கார்​பென்​டர் நல்​ல​வன் இல்லை என்று பல குற்​றச்​சாட்​டு​களை அவளிடம் அடுக்​கு​கிறார்.

ஆனால், அவனது கடந்​த​காலம் பற்றி எனக்​குக்கவலை இல்லை என்று லாரா அவரது முகத்​துக்கு நேராகச் சொல்​லி​விடு​கிறாள்.

சம்​பவம் நடந்த நாளன்று டயான் ரெட்ஃபெர்ன் என்ற பெண்​ணுடன் லாரா மதிய உணவு சாப்​பிட்​ட​தாக வால்டோ சொல்​கிறார். தான் லாராவை விருந்​துக்கு அழைக்க, அவள் அதை மறுத்​து சில நாட்​கள் தனது கிராமத்​துக்​குச் செல்​வ​தாகச் சொன்​னாள்; கார்​பென்​டருடன் லாராவைப் பழக​விட்​டது​தான், தான் செய்த மிகப்​பெரிய தவறு என்று வால்டோ வருந்​துகிறார்.

லாரா​வின் மரண மர்​மத்​தைக் கண்​டறிவதற்​காக மெக்​பெர்​சன், லாரா வீட்​டிலேயே தங்​கி, லாரா​வின் பர்​சனல் டைரி​களைப் பார்​வை​யிடு​கிறார். சுவரில் தொங்​கும் லாரா​வின் ஓவி​யத்​தைப் பார்த்​த​படியே மெக்​பெர்​சன் கண் அயர்ந்​து​விடு​கிறார். சற்று நேரத்​தில் கொல்​லப்​பட்​ட​தாகச் சொல்​லப்​பட்ட லாரா உள்ளே வரு​கிறாள். மெக்​பெர்​சனுக்கு அதிர்ச்​சி.

லாரா​வுக்கு நடந்த எது​வுமே தெரிய​வில்​லை; கிராமத்​தில் செய்​தித்​தாள் வாசிக்​க​வில்​லை, ரேடியோ எது​வும் கேட்​க​வில்லை என்​கிறாள்.

அவள் வீட்​டில் இறந்​தது யார்? குழப்​பமடைந்த லாரா, தன் அறை​யில் உள்ள உடையைப் பார்த்​து, ‘டயான் ரெட்ஃபெர்ன்’ என்ற தனது கம்​பெனியை சேர்ந்த மாடல் என்று கூறுகிறாள்.

அந்​தப் பெண் ஏன் கொல்​லப்​பட்​டாள்? காதல், வன்​மம், வஞ்​சம், மர்​மம் அனைத்​தும் கலந்த இந்​தக் கொலை​யைத் தனது புத்​தி​சாலித்​தன​மான விசா​ரணை மூலம் மெக்​பெர்​சன் கண்​டு​பிடித்து குற்​ற​வாளியை நெருங்​கு​கிறார்.

முதலில் லாராவைக் கொல்ல முயற்​சித்​தவன், லாரா என நினைத்​துத் தவறு​தலாக டயானைக் கொன்​று​விடு​கிறான். லாரா உயிருடன் திரும்பி வந்​ததும், தனக்​குக் கிடைக்​காதவள் யாருக்​கும் கிடைக்​கக்​கூ​டாது என்று மீண்​டும் அவளைக் கொல்ல முயற்​சிக்க, போலீ​ஸாரின் துப்​பாக்​கிக்கு பலி​யாகிறான்.

அது வேறு யாரு​மில்​லை, வால்​டோ​தான். லாரா​வின் வளர்ச்​சிக்​குக் காரண​மானவனே அவளை அழிக்க முயன்​றிருக்​கிறான். “குட்பை லாரா, குட்பை மை லவ்” என்ற வால்​டோ​வின் கடைசி வாசகத்​தோடு நிறைவடைகிறது படம்.

வேரா காஸ்​பரி​யின் நாவலைத் தழுவி ஜே ட்ராட்​லர், சாமுவேல் ஹாஃபென்​ஸ்​டீன் மற்​றும் பெட்டி ரெய்ன்​ஹார்ட் ஆகியோர் வால்டோ லைடெக்​கரின் பின்​னணிக் குரலில் தொடங்​கி, நினை​வு​களின் வழி​யாக விரி​யும் கதையைப் பின்​னர் நிகழ்​கால விசா​ரணை​யாக மாற்​றி​யிருக்​கிறார்​கள்.

ஓர் அழகிய பெண்​ணைச் சுற்றி உரு​வாகும் காதல், பொறாமை ஆகிய​வற்றை மிக நேர்த்​தி​யான குற்​றப் பின்​னணி​யில் திரைக்​கதை​யாக வடிவ​மைத்​துள்​ளனர்.

இயக்​குநர் ஓட்டோ பிரெமிஞ்​சர் தனது தேர்ந்த ஆளு​மை​யால், சிறந்த நாவலை வாசிக்​கும் ரசனையோடு திரை​யில் செதுக்​கி​யுள்​ளார். ட்வெண்​டி​யத் செஞ்​சுரி ஃபாக்ஸ் வெளி​யிட்​டிருக்​கும் இப்​படத்​தின் தயாரிப்​பும் இவரே.

ஒளிப்​ப​திவு: ஒவ்​வொரு காட்​சி​யை​யும் மிகுந்த கலைந​யத்​துடன் ரசனை​யாகப் படமாக்​கி​யிருக்​கும் ஜோசப் லாஷெல், இப்​படத்​துக்​காகச் சிறந்த ஒளிப்​ப​திவுக்​கான ஆஸ்​கர் விருதை வென்​றிருக்​கிறார்.

படத்​தொகுப்​பு: கதை​யின் ஓட்​டத்தை இயல்​பாக​வும் எவ்​விதத் தொய்​வின்​றி​யும் நேர்த்​தி​யாக நகர்த்​திச் சென்​றிருக்​கிறார் படத்​தொகுப்​பாளர் லூயிஸ் லோஃப்​லர். படத்​தின் கவிதைத் தன்​மை​யில் இவரது கத்​திரிக்​கும் முக்​கியப் பங்கு உண்​டு.

இசை: டேவிட் ராக்​ஸினின் இசை மனதை மயக்​கு​கிறது. லாரா கதா​பாத்​திரத்​துக்​காக அவர் அமைத்த அந்​தப் பிரத்​யேக ‘தீம் மியூசிக்’ படம் நெடு​கிலும் ஆங்​காங்கே ஒலித்து பார்​வை​யாளர்​களை வசிய வலை​யில் வீழ்த்​துகிறது.

ஜீன் டியர்​னி: துடிப்​பும் சுறுசுறுப்​பும் மிகுந்த அழகி லாரா​வாக திரை​யில் வாழ்ந்​திருக்​கிறார். தனது வசீகர​மான நடிப்​பாலும், நளின​மான அழகாலும் பார்​வை​யாளர்​களாகிய நாமும் அறி​யாமலேயே அவர் மீது காதலில் விழும்​படி செய்​து​விடு​கிறார்.

டானா ஆண்ட்​ரூஸ்: துப்​பறி​யும் நிபுணர் மார்க் மெக்​பெர்​ச​னாக, லாரா​விடம் ஆழமான ஈர்ப்​பை​யும் அபி​மானத்​தை​யும் வளர்த்​துக்​கொண்​டு, அவள் உயிரோடு இருப்​பது தெரிய​வந்த பிறகு அவளு​டைய பாது​காவல​னாகமாறும் சிக்​கலான கதா​பாத்​திரத்​தை, நேர்த்​தி​யான மற்​றும் அடக்​க​மான நடிப்​பால் தாங்​கிப் பிடித்​திருக்​கிறார்.

கிளிஃப்​டன் வெப்: வால்டோ லைடெக்​க​ராக, தனது கம்​பீர​மான தோற்​றத்​தா​லும் ஸ்டைலான உடல்​மொழி​யாலும் கவர்​கிறார். லாரா​வின் மீது வெறித்​தன​மான காதலில் விழு​வதும், “தனக்​குக் கிடைக்​காதவள் வேறு யாருக்​கும் கிடைக்​கக் கூடாது” என்ற வக்​கிரப் புத்​தி​யில் அவளைக் கொலை செய்ய முயல்​வது​மாக படம் முழு​வதும் மிரட்​டி​யிருக்​கிறார்.

லாரா என்ற வெற்​றிகர​மான, சுதந்​திர​மாகப் பணி புரியும் பெண்ணை மைய​மாக வைத்து நகரும் இப்படம், அவளை போகப் பொருளாக பார்க்​கும் ஆண்​களின் ஆதிக்க மனோ​பாவத்தை நுட்​ப​மாகப் பதிவு செய்​துள்​ளது.

திரைப்பட வரலாற்​றில் தனது நீடித்த முக்​கி​யத்​து​வத்தை நிரூபித்த இப்​படம் 1999-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் தேசி​யத் திரைப்​படப் பதிவகத்​தி​லும் பாது​காக்​கத் தேர்ந்​தெடுக்​கப்பட்​டது.

சைக்​கலாஜிக்​கல் த்ரில்​லர், டிடெக்​டிவ் எனப் பல திரை வகைகளுக்​கும் சிறந்த முன்​னு​தா​ரண​மாகத்​ தி​கழும்​ இந்​த கிளாசிக்​ திரைப்​படத்​தை ஓர்​ அமை​தி​யான மாலை நேரத்​தில்​ லாரா​வின்​ தீம்​ இசை​யில்​ மெய்​மறந்​து ரசிக்​கலாம்​.

(செவ்​வாய்​ தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT