ஹாலிவுட்

ஐ வான்ட் டு லிவ் (1958): நிரபராதியின் உயிர் | ஹாலிவுட் மேட்னி 44

ராம்குமார் சுப்பாராமன்

தவறான சகவாசிகளோடு சிறு சிறு குற்​றங்​களில் ஈடு​பட்டு வாழ்ந்த ஒரு பெண் அதே சகவாசத்​தால் மரண தண்​டனைக் கைதி​யாக சிறைக்கு அனுப்​பப்படு​வ​தே ‘ஐ வான்ட் டு லிவ்’ (I WANT TO LIVE-1958) படத்​தின் ஒரு​வரிக் கதை.

ஒரு இரவு விடு​தி​யில் படம் தொடங்​கு​கிறது. பாலியல் தொழிலா​ளி​யாக அறி​முக​மாகிறாள் பார்​ப​ரா. ஒரு வாடிக்​கை​யாளரின் குடும்​பப் புகைப்​படத்​தைப் பார்க்​கும் அவள், “உன் குடும்​பத்தை இழந்து விடாதே” என்று அவனுக்கு அறி​வுரை கூறுகிறாள். அந்த நேரத்​தில் அங்கே வரும் போலீஸ் அவளைக் கைது செய்​கிறது.

தண்​டனை முடிந்து வெளியே வரும் பார்​ப​ரா​வும் அவளது தோழி பெக்​கும், மாலுமிகளு​டன் சேர்ந்து கூத்​தடிக்கிறார்​கள். பிறகு, தனது சகாக்​களான பெர்​கின்ஸ் மற்​றும் சான்​டோவுக்​காக போலி காசோலைகளை மாற்​றிக் கொடுக்​கும் பார்​ப​ரா, சூதாட்​டத்​தி​லும் ஈடு​பட்​டுப் பணம் சம்​பா​திக்​கிறாள்.

சூதாட்​டக் கணக்கை முடித்​து, பணம் வாங்​கிய பார்​ப​ரா, ஹாங் கிரஹாம் என்​பவனைத் திரு​மணம் செய்​து​கொண்டு சாதாரண வாழ்க்​கையை வாழத் தொடங்​கு​கிறாள்.

அவர்​களுக்கு குழந்தை பிறக்​கிறது. ஆனால், அவளது கணவன் போதை அடிமை. அவன் குதிரைப் பந்​த​யத்​தில் பணம் கட்​டு​வதற்​காக, அவளிடம் இருக்​கும் கடைசி 10 டாலரை​யும் கேட்​டுத் தொந்​தரவு செய்ய, ஆத்​திரமடை​யும் பார்​பரா அவனை வீட்டை விட்டு விரட்​டுகிறாள்.

வறுமை​யில் தவிக்​கும் பார்​ப​ரா, மீண்​டும் தனது கூட்​டாளி​களான பெர்​கின்ஸ் மற்​றும் சான்டோ ஆகியோரைச் சந்​திக்​கிறாள். அதே நேரத்​தில், புரூஸ் கிங் என்​பவன் மாபெல் மோனஹான் என்ற வயதான பெண்​ணைக் கொலை செய்த வழக்​கில் போலீ​ஸாரிடம் சிக்​கு​கிறான்.

முன்பு பார்​ப​ரா​விடம் தவறு​தலாக நடக்க முயன்று அவமானப்​படுத்​தப்​பட்ட அவன் கொடுத்த தகவலின் அடிப்​படை​யில் பார்​ப​ராவைப் பின்​தொடரும் போலீ​ஸார், அவளை​யும் அவளது கூட்​டாளி​களை​யும் கைது செய்​கிறார்​கள்.

எட் மாண்ட்​கோமரி என்ற பத்​திரி​கை​யாளர், பார்​ப​ராவை கொடூர​மானவளாகச் சித்​தரித்து செய்​தி​கள் வெளி​யிடு​கிறார். நீதி​மன்ற விசா​ரணை​யின் போது, புரூஸ் கிங் “பார்​ப​ரா​தான் அந்த வயதான பெண்​ணைத் துப்​பாக்கியால் அடித்​துக் கொன்​றாள்” என்று பழிசுமத்​துகிறான். பார்​பரா அதிர்ச்​சி​யடைகிறாள். மற்ற சகாக்​களும் அமை​தி​யாகிறார்​கள்.

தப்​பிக்க வழியற்​றநிலை​யில், சிறை​யில் இருக்​கும் ரீட்டா என்ற சக கைதி​யின் மூலம் ‘பென்’ என்​பவனை விலைபேசி, கொலை நடந்த நேரத்​தில் அவன் தன்​னுடன் இருந்​த​தாகப் பொய் சாட்சி சொல்ல வைக்​கப் பார்​பரா முயற்​சிக்​கிறாள்.

ஆனால், அந்த ‘பென்’ மாறு​வேட​மிட்ட ஒரு போலீஸ் அதி​காரி! அவன் அவர்​களது பேச்சை ரகசி​ய​மாகப் பதிவு செய்து நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்​கிறான். இதன் மூலம் பார்​பரா பொய் சாட்சி சொல்ல முயன்​றது அம்​பல​மாகி, அவளுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது.

பார்​பரா மகளிர் சிறைக்கு மாற்​றப்​படு​கிறாள். அங்கு கார்ல் பால்ம்​பெர்க் என்ற உளவிய​லா​ளர் அவளைச் சந்​தித்​துப் பேசுகிறார். “பார்​பரா வன்​முறை செய்​யும் குணம் கொண்​ட​வள் அல்ல; மேலும், கொலை​யாளி வலது கையால் தாக்​கி​யுள்ள நிலை​யில், பார்​பரா இடதுகைப் பழக்​கம் உடைய​வள்” என்​பதை கண்​டறிகிறார்.

இதன் மூலம் பார்​பாரா குற்​றமற்​றவள் என்​பதை தெரிந்து கொண்ட மாண்ட்​கோமரி அவளுக்கு ஆதர​வாக எழுதுகிறார். ஆனால், எதிர்​பா​ராத வித​மாக பார்​ப​ரா​வின் மேல்​முறை​யீட்டு மனு நிராகரிக்​கப்​படு​கிறது. சிறை​யில் அவளது தோழி பெக் குழந்​தையைக் கொண்டு வந்து காட்​டு​கிறாள். குழந்​தைக்​காக உயிர் வாழத் துடிக்​கும் பார்​ப​ரா​வின் ஆசை நிறைவேற​வில்​லை.

தண்​டனை நிறைவேற்​றப்​படு​வதற்​காக, சான் குவென்​டின் சிறைக்கு மாற்​றப்​படு​கிறாள் பார்​ப​ரா. மரண தண்​டனை நிறைவேற்​றப்பட வேண்​டிய நாளில், தண்​டனை நேரம் பலமுறை தள்ளி வைக்​கப்​படு​கிறது.

மீண்​டும் மீண்​டும் தாமத​மாவ​தால், மன உளைச்​சலுக்கு ஆளாகிறாள். பாதிரி​யார் ஒரு​வரிடம் தனது பாவங்​களை அறிக்கை செய்​யும் அவள், தான் கொலை செய்​ய​வில்லை என்​பதை உறு​தி​யாகக் கூறுகிறாள்.

இறு​தி​யாக அவள் விஷ​வாயு அறைக்கு அழைத்​துச் செல்​லப்​படு​கிறாள். மக்​கள் தன்னை வேடிக்கை பார்ப்​ப​தைத் தவிர்க்க, தன் கண்​களில் ஒரு ‘ஸ்​லீப் மாஸ்க்’ அணிந்​து​கொள்​கிறாள். அறை​யினுள் விஷ​வாயு பரவ, அவள் துடிதுடித்து மரணமடைகிறாள்.

பத்​திரி​கை​யாளர் மாண்ட்​கோமரி அவருக்கு நன்றி தெரி​வித்​து பார்​பரா எழு​திக் கொடுத்​தனுப்​பிய கடைசிக் கடிதத்​தை, உணர்ச்​சிவசப்​பட்​டுப் படிக்​கிறார்.

ஒரு பெண் உண்​மை​யில் கொலை​காரி​யா, இல்​லையா என்ற கேள்விக்கு உறு​தி​யான பதிலைத் தராமல், அவள் மரண தண்​டனையை எதிர்​கொண்ட விதத்தை மட்​டும் நம் கண்​முன் நிறுத்​தி​விட்டு திரைப்​படம் முடிகிறது.

புலிட்​சர் பரிசு வென்ற எட்​வர்ட் மாண்ட்​கோமரி எழு​திய கட்​டுரைகள், நீதி​மன்​றப் பதிவு​கள், விசா​ரணை அறிக்​கைகள் மற்​றும் பார்​பரா கிரஹாமின் கடிதங்​கள் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்ட உண்​மைக் கதை இது. நெல்​சன் கிடிங் மற்​றும் டான் மான்​கி​விச் இணைந்து திரைக்கதையை எழுத, வால்​டர் வேங்​கர் தயாரித்​திருக்​கிறார்.

மரண தண்​டனையை எதிர்​கொள்​ளும் மனித உயி​ரின் கடைசி நிமிடங்​களை​யும், அந்த உயிர் தப்​பிக்க வேண்​டும் என்ற பேராசையை​யும் பார்​வை​யாள​ருக்கு மிக அரு​கில் கொண்​டு​வந்து நிறுத்​தி​யிருக்​கிறார் இயக்​குநர் ராபர்ட் வைஸ்.

ஒளிப்​ப​திவு: கருப்​பு-வெள்ளை ஒளிப்​ப​தி​வில், இருட்​டறை​கள், சிறைக்​கம்​பிகள், நீதி​மன்ற இறுக்​கம் ஆகிய​வற்றை ‘ஹை-​கான்ட்​ராஸ்ட்’ வெளிச்​சத்​தில் மிகச் சிறப்​பாகப் படமாக்​கி​யிருக்​கிறார் ஒளிப்​ப​தி​வாளர் லியோனல் லிண்​டன்.

படத்​தொகுப்​பு: ஓர் உயிரைக் கொல்​வதற்​காக தயா​ராகும் சிறைச்​சாலை​யின் இறுதி 45 நிமிடங்​களை தொகுத்​த​விதத்​தில் திணற வைக்​கும் டென்​ஷனை உரு​வாக்​கு​கிறார் படத்​தொகுப்​பாளர் வில்​லி​யம் ஹார்ன்​பெக்.

இசை: ஜான் மாண்​டேலின் ஜாஸ் இசை, ஒரு கதா​பாத்​திர​மாகவே இதில் பயணிக்​கிறது. கெர்ரி முல்​லிகன் மற்​றும் ஷெல்லி மான் உட்பட ஜாஸ் இசைக் கலைஞர்​களின் பெயர்​கள் டைட்​டில் கார்​டில் இடம் பெற்​றிருக்​கின்​றன.

சூசன் ஹேவர்ட்: பார்​பரா கிரஹாம் கதா​பாத்​திரத்​தில் கோபம், திமிர், ஏமாற்​றம், தாய்மை மற்​றும் இறுதி நிமிடங்​களில் இறப்பை நினைத்​துப் பயப்​படும் கையறு நிலை என அனைத்​தை​யும் தனது கண்​களி​லும் உடல் மொழி​யிலும் கடத்​தி​யதன் மூலம் சிறந்த நடிகைக்​கான ஆஸ்​கர் விருதை வென்​றார்.

பத்​திரி​கை​யாளர் எட்​மாண்ட்​கோமரி, உளவிய​லா​ளர் கார்ல் போன்ற துணை கதா​பாத்​திரங்​களும் தங்​களது பங்​களிப்பை மிகச் சிறப்​பாக வழங்​கி​யிருந்​தனர். 1950-களில் அமெரிக்​கச் சமூகத்​தில் மரண தண்​டனை குறித்த மிகப்​பெரிய அதிர்​வலை​யை​யும் விவாதத்​தை​யும் இப்​படம் கிளப்​பியது.

பத்​திரி​கைகள் தங்​கள் வியா​பாரத்​துக்​காக ஒரு​வரை எப்​படி முன்​கூட்​டியே குற்​ற​வாளி​யாகச் சித்​தரிக்​கின்றன என்​ப​தை​யும் அது நீதி​மன்​றத் தீர்ப்பை எப்​படி மறைமுக​மாகப் பாதிக்​கிறது என்​ப​தை​யும் இப்​படம் தோலுரித்​துக் காட்​டியது.

ஒரு குற்​ற​வாளி அல்​லது நிரப​ரா​தி​யின் உயிரைப் பறிக்​கும் உரிமை அரசுக்கு இருக்​கிற​தா? மரண தண்​டனை என்ற பெயரில் நடக்​கும்​ சட்​டபூர்​வ​மான கொலை எவ்​வளவு கொடூர​மானது என்​ப​தை ஆழமாகப்​ பதிவு செய்​திருக்​கும்​ இப்​படத்​தை இதயம்​ கனக்​கப்​ பார்க்​கலாம்​.

(செவ்​வாய்தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT