பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநரும் சுயாதீன திரைப்பட முன்னோடியுமான அமோஸ் போ (76) காலமானார். இதை அவருடைய மனைவி கிளாடியா சம்மர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியான தி பிளாங்க் ஜெனரேஷன் (1976), த ஃபாரீனர் (1978), சப்வே ரைடர்ஸ் (1981), அல்பாபெட் சிட்டி (1985), பிராக்ஸ் பார் சினேக்ஸ் (1998), வாக் இன் த பார்க் உள்பட பல படங்களை இயக்கியவர் இவர்.
தொழில்நுட்பத்தை விட கருத்தை முன்னிலைப்படுத்துவதும் விதிகளை கேள்விக் கேட்பதுமான ‘பங்க் பிலிம் மேக்கிங்’கில் (punk filmmaking) இருந்து உருவான ‘நோ வேவ் சினிமா’ இயக்கத்தின் முன்னோடி இவர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அமோஸ் போ, கடந்த சில வருடங்களாக அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டிச.25-ம் தேதி காலமானார். இதையடுத்து ஹாலிவுட் திரைபிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.