

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் போலி புகைப்படங்களை உடனடியாக நீக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி, தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கியுள்ளனர் என்றும் மார்பிங் செய்யப்பட்ட தனது புகைப்படங்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர் என்றும் அது தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.
அது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி அத்வைத் சேத்னா தலைமையிலான விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் புகைப்படங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என்ற நீதிமன்றம், எந்த ஒருவரையும் குறிப்பாக ஒரு பெண்ணை அவரது ஒப்புதல் இல்லாமல் இவ்வளவு எதிர்மறையான வெளிச்சத்தில் சித்தரிக்க முடியாது என்றும் இது அவரது தனியுரிமை மீதான நேரடித் தாக்குதல் என்றும் தெரிவித்தது.
பின்னர் அது தொடர்பான அனைத்து இணைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களையும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்திலிருந்து உடனடியாக நீக்க உத்தரவிட்டது.